Sunday, 31 May 2020

ஊர் திரும்புதல் - 11


தொடக்கப்  பள்ளி 


அவன் ஊரில்  இருந்து  வந்த  மறுநாள்  காலை  நேரம். அவனது வீடு தெருவின் முதல் வீடென்பதால்,  அந்த தெருவில் இருந்து பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகள்  அவர்களுடைய  பள்ளிப்பேருந்துக்காக அவன் வீட்டின்  முன்னே  காத்திருந்தனர். குழந்தைகளின்  அம்மாக்கள் அவர்களுடைய  குழந்தைகளின்  மேல் ஒரு கண்  வைத்துக்கொண்டு  மற்றவர்களிடம்  பேசிக்கொண்டிருந்தனர்.  





அந்த குழந்தைகள் அவனது வீட்டு தாழ்வாரத்தில், அவனது வீட்டு நாய்குட்டியிடமும், மேய்ந்து கொண்டிருந்த கோழி குஞ்சுகளிடமும், ஆட்டு குட்டியிடமும், கன்று குட்டியிடமும் கொஞ்சிக்கொண்டும் வம்பு செய்துகொண்டும் மழலையற்கே உரித்தான விதத்தில் விளையாடி மகிழ்ந்து கொண்டிருந்தனர்.   

அப்போது எழுந்து வந்த அவன், அந்த குழந்தைகளிடம் ஆங்கிலத்தில் பேசினான். அந்த குழந்தைகளும் அவனுடன் ஆங்கிலத்தில் பேசத்தொடங்கினார்கள்.

அப்போது அவனது அம்மாவிடம் அவன் சொன்னான், "நாங்கல்லாம் படிக்கும் போது சரியா பேசவே வராது. இந்த புள்ளைங்கல்லாம் எவ்வளவு சாமர்த்தியமா பேசுது!", என்று  வியந்துகொண்டிருந்தான்.

அவனுக்கு  அவனுடை  பள்ளிநாட்கள்  நினைவுக்கு  வந்தது. அது பற்றி  அவனுடைய  அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தான்.

ஒரு பள்ளிக்கூடம் அந்த சிறிய கிராமத்திற்கு வரவேண்டும் என்ற நல்லெண்ணத்தில்  தனது பட்டா  நிலத்தையும் வழங்கியவர் அந்த கிராமத்தின் ஒரு பெரும் பெருமைக்குரிய நிலக்கிழார்.

அவன் அவனது ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளியில்தான்  ஐந்தாம் வகுப்பு வரை படித்தான். மூன்று புறமும் வயல்வெளிகளால் சூழப்பட்டு தார் சாலையை ஒட்டிய ஒரு  காங்கிரீட் கட்டிடத்தில்தான் அவன் படித்த பள்ளிக்கூடம் இருந்தது. பள்ளிக்கட்டிடத்துக்கு  பின்புறம் வயலில்  இருந்து  பார்த்தால்  பள்ளிக்கட்டிடம்  எட்டடி  உயரத்தில் இருக்கும்.  கட்டிடத்தில்  நுழைவாயில் தார்சாலை மட்டத்துக்கு  சமமாக  இருக்கும். அவன்  பள்ளியில் மின்சார வசதியில்லை. நான்கு புறமும் இருந்த  ஜன்னல்கள்தான் அந்த பள்ளியில் மின் விளக்குகளும், மின்விசிறிகளும் இல்லாத  குறையை  தீர்த்துக்கொண்டிருந்தன. தூய்மையான காற்றுக்கும், வெளிச்சத்துக்கும்  பஞ்சமே இல்லை. தினமும் பள்ளிநாட்களில், கட்டிடத்தை  திறந்தவுடன் உடன் முதல் வேலையாக எல்லா ஜன்னல்களையும் திறந்து வைப்பதையே வேலையாக வைத்திருந்தான்.

அப்போது அந்த  பள்ளியில்   மொத்தமாகவே  30 மாணவ மாணவியர்கள்  தான் படித்துக்கொண்டிருந்தனர். அந்த  பள்ளிக்கட்டிடத்தில், நடுவில் மரத்தினால் செய்யப்பட்ட ஒரு மறைப்புதான்  இரண்டு வகுப்பறைகளை  பிரிக்கும்  சுவர்.   ஒரு பக்கம் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையிலும்  மற்றொரு புறம் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளும்  இருக்கும்.  நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளை  தலைமை ஆசிரியர் பார்த்துக்கொள்வார். ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை மற்றொரு ஆசிரியரான திரு. கணேசன் பார்த்துக் கொள்வார்.





அவனது பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. வ. கலியமூர்த்தி அவர்கள் குத்தாலத்தில் இருந்து சைக்கிளில் வருவார். அவர் ஐந்து அடி உயரம் இருப்பார். முகத்தில்  சின்ன சின்ன அம்மை தழும்புகள் இருக்கும். அவர் எப்போதும் வெள்ளை வேட்டி சட்டையில்தான் இருப்பார். அவனை அவர் 'வெள்ளை', என்று செல்லமாக கூப்பிடுவது  இன்றளவும் அவனது மனதில் நின்றது. மற்றொரு ஆசிரியர் திரு. கணேசன் அவர்கள் பக்கத்துக்கு ஊரான  செஞ்சியில் இருந்து  சைக்கிளில் வருவார்.

அந்தப்பள்ளியின் இரண்டு கரும்பலகைகளும், ஒரு இந்தியா மேப்பும், ஒரு பெரிய மர பெட்டியும் அதனுள் வைக்கப்படும் பள்ளிக்கூடத்தின்  பொருட்களும் அவன்  மனதில்  இன்றும்  நீங்காமல்  பசுமையாக  நினைவில்  இருக்கின்றன. மாணவர்கள் அமர தரையில் போடும் தரைப்  பலகைகளை  தினமும்  காலையில்  எடுத்துப்போடுவதும், மாலையில்  ஓரத்தில்  அடுக்கிவைப்பதும்  அவனுடைய  வேளைகளில்  ஒன்று.





அந்த பள்ளி குழந்தைகளுக்கு விளையாட்டு இடம் என்று தனியாக எதுவும் இருந்ததில்லை.  பள்ளியை சுற்றியுள்ள இடம் தான் அவர்களின் விளையாட்டு மைதானம். அங்கேதான் பள்ளியின்  மதிய உணவு  இடைவேளையில் விளையாடுவார்கள்.

பள்ளிக்கூடம் ரோட்டோரமாய் இருப்பதால், வாகனங்கள் போகும்  வரும்  என்பதாலும் ஆசிரியர்கள் மிகவும் கண்டிப்பாக இருப்பார்கள்.  பள்ளியின் சுற்றுச் சுவரை விட்டு வெளியே போகக் கூடாதென்று சொல்லிக்கொண்டே  இருப்பார்கள்.

அவன்  பள்ளிக்கூடத்தின் எதிரே இருந்த விக்ரமன் ஆற்றங்கரையில் தினமும் அவனும்  அவனுடைய  நண்பர்களும் சறுக்குமர  விளையாட்டும், ஒளிந்து பிடிக்கும் விளையாட்டும் விளையாடுவார்கள். பெண் பிள்ளைகள் இச்சா இனியா, காயா பழமா என்று  கூவிக்கொண்டே  சில்லு கோடு விளையாடுவார்கள்.  எதிர் எதிரே அமர்ந்து மணலை நீளமாக  குவித்து  ஒரு  குச்சியை அதனுள்  மறைத்துவைத்து கிச்சுகிச்சு  தாம்பாளம்  விளையாட்டும் விளையாடுவார்கள்.

அந்த  பள்ளியில்தான்  அவன் ஐந்து வருடம் படித்தான்.  அந்த பள்ளி அவன் வீட்டுக்கு  அருகிலேயே  இருந்தது. பள்ளிப்பிள்ளைகளுக்கு  மதிய உணவாக கோதுமை  உப்புமாவும், வெல்லமும் கொடுப்பார்கள். உணவிற்கு பிறகு எல்லா குழந்தைகள் தங்கள் வீடுகளுக்கு போய் வருவது வழக்கம்.  வீட்டுக்கு திரும்பிப்  போகும் பொது சாலையோரமாக இருந்த முள் வேலியில் படர்ந்திருந்த கோவைச்  செடியில் இருந்து சிவந்த கோவைப்  பழத்தினையும், கருப்பாக இருக்கும் நொனப்பழதினையும் பறித்துச்   சாப்பிட்டுக்கொண்டே  போவான்.

மதிய நேரத்தில் தலைமை ஆசிரியர் திரு. வ. கலியமூர்த்தி ஓய்வெடுத்துக்கொண்டிருப்பார். அன்று ஒரு  நாள் அவனும்  நண்பர்களும்  பள்ளிக்கு  வெளியே  விளையாடிக்கொண்டிருந்தார்கள். தலைமை ஆசிரியர் மதிய வழக்கம்போல  இடைவேளையில் ஒய்வெடுத்து கொண்டிருந்தார்.

அவன் முதல்நாள் இரவு தன் தந்தையுடன்  குத்தாலம் ஶ்ரீராம் தியேட்டரில் 'சந்திப்பு', என்ற படம்  பார்த்துவிட்டு  வந்திருந்தான். அந்த  படத்தின் ஒரு  பாடலை  அவன்  உரத்தக்குரலில்  பாடத்தொடங்கினான்.

   “பறவைகள் பலவிதம்
   ஒவ்வொன்றும் ஒருவிதம்”

அந்த  சத்தத்தில் தலைமைஆசிரியர் எழுந்தே  வந்துவிட்டார்.

வந்தவர், "வெள்ளை..... இங்கே வா......!", என்று  செல்லமாக கூப்பிட்டார். அவனும் அருகில் சென்றான்.

"ஏன் சத்தம் போட்டாய்?", என்று சொல்லிக்கொண்டே அவன்  வயிற்றினை  பிடித்து  திருகினார்.  அந்த  வலியில் அவன்  தனது சட்டையை நனைத்துக்கொண்டான்.  


Saturday, 30 May 2020

ஊர் திரும்புதல் - 10


கிடை  ஆடுகள் 


இது எனது முந்தய பதிவின் தொடர்ச்சி.......

கிடைமாடு காலங்களில், தெற்கிலிருந்து  இருந்து குறிப்பாக ராமநாதபுரம், தேவகோட்டை போன்ற  ஊர்பக்கங்களில் இருந்து  கீதாரிகள், தங்கள்  ஆட்டுக்கூட்டங்களுடன் வருவார்கள். பொதுவாக எப்போதும் வெள்ளாடுகள், கொடியாடுகள் என்று  ஒரு குழுவிலும், செம்மறியாடுகள் வேறொரு குழுவாகவும் வரும்.






இந்த கீதாரிகள் தங்கள் குடும்பத்துடனே வருவார்கள். இவர்கள் எப்போதும் ஊர்  விட்டு  ஊர்  போய்க்கொண்டே  இருப்பார்கள். கூடவே ஆங்காங்கே தங்கிச்செல்ல தேவையான பொருள்கள் முதல்  சமையல்  பாத்திரங்கள்  வரை  தங்களுடன் வைத்திருப்பார்கள். கிடைபோடுவதிலும், தேவைக்கு  ஆடுகளை  விற்பதிலும்  கிடைக்கும்  வருமானமே  கீதாரிகளின்  வாழ்வாதாரம்.


மாடுகள்  போலவே ஆடுகளுக்கும்  மேய்ச்சல் நிலம்,  கிராமங்களைச்  சுற்றியிருக்கும் நிலங்கள்தான். கோடையில் இரண்டு போகங்கள் முடித்து  உளுந்து, பயறு அறுவடைக்கு பின்னர் ஆங்காங்கே பரவிக்கிடக்கும் கோடை புற்களும், வயலின் வரப்புகளில் வளர்ந்திருக்கும்  புற்களும்தான்  ஆடுகளுக்கு  உணவு. அது  மட்டும்  அல்லாது நாட்டு கருவை மரத்தின் காய்கள் என்றால் ஆடுகளுக்கு கொள்ளப்  பிரியம். அதுவும்  வயல்வெளிகளை ஒட்டிய  பகுதிகளில் ஆங்காங்கே பசுமையாகவே இருக்கும்.




அவனுடைய  ஊரில்  கோடையில் ஆற்றின் இரண்டு கரையோரங்களிலும் புற்கள்   அடர்ந்து கிடக்கும். சிறிய  செடிகள் கொடிகள், ஆற்று படுகையில்  பசுமையாக இருக்கும் புற்கள் என ஏராளமான மேய்ச்சல் பகுதி நிறைந்த ஊர்  அவனுடையது. அதனாலேயே  அந்த  கீதாரிகளின் வருகை வருடம் தோறும் தொடர்ந்து கொண்டேயிருந்தது. கீதாரிகள்  நிலங்களில்  கிடைபோடுவதால் அந்த நிலத்துக்கு  ஆடுகளின்  கழிவுகளில்  இருந்து    இயற்கை உரம்  கிடைக்கிறது.







ஆடுகள்  சாகசம்  செய்யும்  ஒரு  உயிரினம்.  இவைகள் சிலநேரம் மரங்களின் மீதும், மூங்கில் முற்களால் பின்னி செய்யத படல் போட்டு இருக்கும் வேளியில் அடர்ந்த்து படர்ந்து இருக்கும் பசுமையான செடி கொடிகளையும், தொற்றியும், இறுக்கப்பிடித்துக்கொண்டும்,      தாவித்  தாவியும்  இரண்டு கால்களை தூக்கிக்  கொண்டு  மேயும்  சாமர்த்தியமே  ஒரு தனி அழகுதான்.






அதில் செம்மறியாடுகள் தலையினை ஆட்டி ஆட்டி கொண்டும் கத்திக்கொண்டே போகும்போது ஒரு  புழுதிக்காற்றே வீசுவது போலவே இருக்கும்.

கீதாரிகளுக்கு ஓய்வென்பதே கிடையாது. நாள் முழுவதும் ஆடுகளை மேய்த்துவிட்டு , மாலை இருள்வதற்குள் ஆடுகளை கொண்டு வந்து பட்டியில் அடைக்க வேண்டும், பின்னர் அந்த பட்டியினை காவல்காக்க வேண்டும். எப்போதுமே அவர்கள் விழிப்புடனே இருப்பார்கள் ஏனெனில் ஆடு திருட்டு என்பது எல்லா ஊர்களிலும் சாதாரணமான நிகழ்வு.  இதில் ஆச்சர்ய படவேண்டியது ஏதுமில்லை!.


அப்படித்தான் ஒரு வருடம்,  அந்த கீதாரியின் ஆட்டு மந்தை அவனது ஊருக்கு வந்திருந்தது.   அந்த முறை ஆடுகள் அவனது வீட்டின் கொல்லைப் பக்கமாக இருக்கும் நிலப்பரப்பில் மேய்ந்துகொண்டிருந்தது. அவர்கள் குடிசையையும்,  அந்த பகுதியிலே அமைத்து இருந்தனர்.




ஒருநாள், கீதாரி வீட்டு பெண்மணி அவனது வீட்டுக்கு வந்து அவன் அம்மாவிடம்,  "அம்மா, நான் உங்கள் கொல்லையில் இருக்கும் அம்மிக்கல்லில் சாயங்காலங்களில் மட்டும் வந்து எனக்குத்  தேவையான மசாலா அரைத்துக்  கொள்ளலாமா ?", என்று கேட்டார்.

அதற்கு அவனது அம்மா, "அதற்கு என்ன தாயே, தாராளமாக அரைத்து கொள்!", என்று சொன்னார்கள். அதன்படி அந்த பெண்மணி தினமும் அவனது வீட்டுக்கு வந்து மசாலா அரைத்து போவது மட்டுமல்லாமல், நீண்ட நேரம் அவனுடைய  அம்மாவிடம்  பேசிக்கொண்டிருப்பார்கள்.


அப்படித்தான், ஒரு நாள் நிறைய மசாலா அரைக்க வேண்டும் என்று  அம்மாவிடம் பேச்சு கொடுத்துக்கொண்டே அவர் சொன்னது அவன் காதில் விழுந்தது. அன்று  ஒரு  ஆடு  அடிபட்டு இறந்து விடும்போல் இருந்ததாம். அது  இறப்பதற்கு  முன்பே அதனை  அடித்து  உப்பு கண்டம் போட்டுவைக்கவேண்டும். அதற்குத்தான் அதிகப்படியான  மசாலா  அரைக்கவேண்டும்  என்று  அந்த  பெண்மணி  சொல்லியிருக்கிறார்.

அவனுக்கு ஆட்டுக்குட்டிகள் என்றால் கொள்ள ஆசை.  அதுவும் அந்த கீதாரி ஆட்டுக்குட்டியினை தனது தோளில் போட்டு கொண்டு மற்ற ஆடுகளை ஓட்டி போகும் போதே எழுப்பும் ஒலி வித்தியாசமாக  வேடிக்கையாக  இருக்கும். பொதுவாக ஆட்டு குட்டிகளை மேய்ச்சலுக்கு கூட்டி செல்ல முடியாது அதனால்  அந்த கீதாரியின் வீட்டு பெண்மணி அந்த குடிசையில் அந்த ஆட்டு குட்டிகளை பார்த்துக்கொள்வார்.



அவன் சாயங்காலம் அந்த ஆட்டு கிடையினை பார்த்துவர தன்  நண்பர்களுடன் சென்று வருவது வழக்கமாகவே இருந்தது.

அவனுக்கு இன்றளவும் மறக்க முடியாத ஒரு நிகழ்வு அன்று  ஒரு  நாள்  நடந்தது. அது  கோடைமழை  கொட்டிக்கொண்டிருந்த  இரவு  வேளை.   அங்கு போடப்பட்டிருந்த ஆட்டு கிடையிலிருந்த ஆடுகளிடமிருந்து இருந்து ஒரே சத்தம். மழையில் நனைந்த ஆடுகள் கத்திக்கொண்டிருந்தன. அது அவனது வீட்டின் பின்புறம் என்பதால் அவனுக்கு மிகவும்  வருத்தமாக  இருந்தது.

ஆனால் இன்றெல்லாம் இந்நிகழ்வுகள் கதையில் மட்டுமே தெரிந்துகொள்ள வேண்டியிருகிறது.

நகரங்களின் விரிவாக்கத்தினால் கீதாரிகள் நீண்ட தூரம் இடம்பெயர்ந்து போகமுடியவில்லை. கிராமங்களின் நாகரிக வளர்ச்சியும் இந்த தொழில்களை நசுக்கி விட்டன. அதிலும் கிராமங்களில் இருக்கும் ஆயர் குலத்தினர் ஆடு மாடுகள் இல்லாமல் இருந்தே இல்லை. ஆனால் இன்று அவர்களுடைய வாரிசுகள் படித்து வேறு  வேலைகளுக்கு நகரங்களுக்கு புலம்பெயர்ந்து போனதாலும், கிராமங்களில் கூட எல்லா வீடுகளிலும் ஆடு மாடுகள் இல்லாமல் போயிற்று.


அப்போதெல்லாம்  ஆட்டிறைச்சிதான் பொதுவான  உணவாக  இருந்தது. பின்னர்தான்  ஆட்டுக்கறியின் இடத்தை  பிராய்லர் கோழிகள்  பிடித்துக்கொண்டன. ஆட்டிறைச்சியின்  விலையேற்றத்துக்கு  கீதாரிகள்  போன்ற  எளிய  மக்களின்  வாழ்வாதாரம்  அழிந்ததும்  ஒரு  காரணம். இத்தனை  பாதிப்புகளும்  இருக்கும்  நிலையிலும்  ஒரு  சில  கீதாரிகள்  விடாமல்  அவர்களுடைய  பாரம்பரியமான  தொழிலினை   செய்துகொண்டுதான்  இருக்கிறார்கள்.

இன்னும் கீதாரிகள், அவர்களாகவே  வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்ற மனதுடன் அவனும் நகர்ந்து சென்றான் .


Friday, 29 May 2020

ஊர் திரும்புதல் - 9




கிடை  மாடுகள் 


அவனுக்கு அன்றைய  நாட்களில் அவனது   ஊருக்கு வந்து போகும்   கீதாரிகளைப்பற்றி  நினைவு  வந்தது. கீதாரிகள் தொழில்முறை  கால்நடை  மேய்ப்பாளர்கள்.  கொடுக்கப்பட்டிருக்கும்  இணைப்பில்  கீதாரிகளைப்பற்றி  படித்து  அறிந்துகொள்ளலாம். 


பொதுவாக பச்சையும் காப்பியுமான வண்ணங்கள் கலவையாக இருக்கும் பெரிய துண்டினால் கீதாரிகள் தலையில்  முண்டாசு கட்டிக்கொண்டிருப்பார்கள். கையில் ஒரு ஆறடி நீளத்தில் குச்சியும், அந்த குச்சியில் ஒரு தூக்கு வாளியும்  தொங்கவிட்டு கொண்டிருப்பார்கள்.  அந்த கீதாரிகள் இரண்டு, மூன்று  ஆட்களாக வெளியூரிலிருந்து மாடுகளை மேய்க்கவும், கிடை கட்டவும் வருவார்கள்.


அவர்கள்  கொண்டுவரும்  மாட்டு  மந்தைகளில்  மாடுகளுக்கு  கழுத்தில்  பெரிய  மணிகள்  கட்டப்பட்டிருக்கும். மாட்டுமந்தைகள்  கடந்து  போகும்போது  நூற்றுக்கணக்கான  மாடுகளின்  கழுத்து  மணியோசைகள்  கலந்து  அந்த  பிரதேசமே  போர்க்களம்  போல  இருக்கும்.


வயல்வெளியில்  மேய்ந்து கொண்டிருக்கும் மாடுகளை அந்த ஊரின் நடுவில் இருக்கும் குளத்திலும் மற்றும் வயல்வெளிகளில் இருக்கும் சாவடி குளத்திலும் மொத்தமாக இறக்கிக் குளிப்பாட்டுவார்கள். அந்தக் காட்சி மிகவும் அருமையாகவும் ஒரு விதமான சத்தமும், கூச்சலுமாக  ஒரு பிரளயம் போல இருக்கும்.





அவர்கள், கிடை கட்டிய வயல் உரிமையாளரிடம் இருந்து  நெல் அல்லது பணம் பெற்றுக்கொள்வார்கள். கீதாரியின் மாடுகளும் ஆடுகளும் அவருக்கு சொந்தமானது. ஒவ்வொரு  ஊரிலும்  மேய்ப்பதற்கு மற்றவர்களின்  கால்நடைகளையும்  சேர்த்துக்கொள்வார்கள்.




கோடை காலத்தில் அந்த  ஊருக்கு  வரும்  கீதாரிகள்  ஊரில் உள்ள மாடுகளையும் சேர்த்து  நாள் முழுவதும் மேய்ப்பார்கள்.  இரவினில் ஓரு வயலில் இரண்டிரண்டு மாடுகளாய் கால்களை பின்னி கிடை கட்டுவார்கள். 


கிராமங்களில் கோடையில் தங்களது வயல்கள் எல்லாம் இயற்கை உரமாக இருக்கும் நரி பயறு செடி போன்ற பலவிதமான பயிர்கள் இருக்கும். கால்நடைகள்  மேயும்போது  மிதிப்படுவதால்   இவைகளெல்லாம் நிலத்திற்க்கு உரமாக்கப்படும்.


பொதுவாக, நிலங்களில் விளைவித்த உளுந்து பயறுகளை  அறுவடை செய்து, களத்தில் மாடுகளை கட்டி போரடித்து அந்த செடியில் இருந்து பிரிப்பார்கள். பின்னர் அந்தச் செடிகளை  செங்காயம் என்று  சொல்வார்கள். செங்காயத்தினை கால்நடைகளுக்கு தீனியாக  கொடுக்கலாம். வயலில் உரமாகவும் இடலாம். அப்படி  வயலில் விடப்படும்  செங்காயம்  கிடை மாடுகளுக்கு உணவாகும்.







ஆடு, மாடுகள் நடந்து வந்தால் 'மலடான மண் கூட பயிர் செய்ய பயனாகும்', என்பதை நன்றே தெரிந்தவர்கள் அந்த கிராமத்தினர்.  இரண்டுமாத காலத்தில் எல்லோருடைய வயல்களிலும் கிடை கட்டிவிட்டு பின்னர் கீதாரிகள் மாடுகளை அவரவர் வீடுகளில்  திருப்பி விட்டுவிடுவார்கள்.


அதை போல அந்த சமயத்தில் வெள்ளாட்டு கூட்டம் ஒருபுறமும் செம்மறி ஆட்டு கூட்டம் மறுபுறமும் வயல் வெளிகளில் மேய்க்கப்பட்டுக்கொண்டிருக்கும். இது பற்றிய  விரிவான  பதிவு  பின்னர் தொடரும்.



சின்னஞ்சிறுவயதில்  மாட்டுக்கிடைகளையும் ஆட்டுக்கிடைகளையும் கண்ட  அவன் மனதில், தானும் இதைப்போல  செய்யவேண்டும் என்று  எண்ணுவான். பள்ளி விடுமுறை காலங்களில்  அவன் விளையாடுவதற்கு  கண்டுபிடித்த  விளையாட்டுதான், 'காலில்லா மாடுகள்'. 

அவன் வீட்டிற்கு, எதிரே ஒரு கொல்லையில் ஒரு புளியமரம் இருந்தது. அதனுடைய  வேர்களுக்கு  இடையில்  உள்ள  இடைவெளிகள்  அவனுக்கு  சிறு  சிறு  அறைகள்  போல தோன்றும்.  அதுதான்  அவனுடைய  காலில்லா  மாடுகளுக்கான  வீடுகள். 

அதே கொல்லையில் இருந்த  தென்னை மரத்தின்  உதிர்ந்த  குரும்பைகளை சேகரித்து  அவன்  மாடுகளின்  வீடுகளுக்கு  எடுத்து வருவான். அவன்  பார்த்த  கீதாரிகளை  போலவே தலையில்    அப்பாவின்  துண்டை  எடுத்து  முண்டாசு  கட்டிக்கொண்டான். அவனுடைய  உயரத்துக்கு  மேலே  இருந்த  ஒரு  நீண்ட  குச்சியை  எடுத்துக்கொண்டான்.

அதைப்பார்த்து  அவனுடைய  நண்பன்  அவனிடம்  கேட்டான், " டேய்  என்னடா  இது  குரும்பய பொறுக்கிக்கிட்டு  இருக்க?".

அதற்கு அவன் பதிலுரைத்தான்," டேய், இது  குரும்பை இல்லடா  என்னோட  மாடுங்க, நான்  இத மேய்க்கப்போறேன்.......ஏய்  .... ஏய்  ..... போ .... போ ... ஏய் ....இக்காஹ் .....இஃஹா...", என்று  அவன்  பார்த்த  கீதாரிகளைப்போலவே  ஒலியெழுப்பி குரும்பைகளை  கையில்  வைத்திருந்த  குச்சிகளைக்கொண்டு  மாடுகளை  மேய்ப்பது  போலவே  பாவனை  செய்தான்.

அவன்   வைந்திருந்த அந்த குரும்பைகள்தான்  அவனுடைய  காலில்லா  மாடுகள். அவன்தான்  அந்த  கீதாரி. கால்கள்  இருந்தால்தான் மாடுகளா என்ன? காலில்லா அந்த குரும்பை மாடுகள்  அவனுடைய  கற்பனை  மாடுகள். அவனுடைய  நண்பன்  புன்முறுவலுடன்  அவனுடைய  கற்பனை  மாடுகளை  கொஞ்சநேரம்  மேய்ந்துவிட்டு  கால்கள்  உள்ள  அவனது  நிஜ  மாடுகளுடன்  விடைபெற்றான்.


காலமாற்றத்தில்  ரசாயன  உரங்கள்  ஆக்கிரமிப்பிற்கு  பிறகு  இயற்க்கை  உரத்துக்கான  தேவை  ஒழிந்து விட்டது. இப்போதெல்லாம்  கீதாரிகள்  வருவதுபோல  தெரியவில்லை. மாட்டு  மந்தைகளும்  வருவதில்லை.  இயற்க்கைக்கு  எதிரான  ஒரு  பொருத்தமில்லாத  போரை  நாமும்  முன்னெடுத்துக்கொண்டிருக்கிறோம்  என்று  எண்ணி  பெருமூச்சு  விட்டவாறே  வழியில்  கிடந்த  தென்னங்குரும்பையை  மிதிக்காமல்  கடந்தான்.

Thursday, 28 May 2020

ஊர் திரும்புதல் - 8

சிட்டு குருவியின் கூடு 

இயற்கையின் அதிசயத்தில் இதுவும் ஒன்று பறவைகளை  கூடுகளையும் சேர்க்கலாம்.



                                                         



அன்றொரு  நாள் அவன் தனது தந்தையுடன் அவர்களுடைய  வயல்களைப் பார்க்கச்சென்றான்.  அப்போது அங்கும் இங்குமாய் அவர்களது நெற்பயிரில் இரைதேடி கொண்டிருந்த ஒரு சில  சிட்டு குருவிகளைப் பார்த்தான்.

அவன் தன்  அப்பாவிடம் கேட்டான்," அப்பா, முன்பெல்லாம்  இந்த குருவிங்க  கூட்டம்  கூட்டமா  வருமல்ல..... எல்லாம்  இப்ப  கொறஞ்சி  போச்சே!".

அப்பாவும்  அவன் சொன்னதை  ஆமோதித்தார்.

அவனுடைய  சிறுவயதில் அந்த வகை குருவிகள் பெருந்திரளாய் வயற்பரப்பெங்கும் எண்ணிக்கையில்  மிகுதியாகவே சூழ்ந்து இருக்கும்.  பெருங்கூட்டமாக இரைதேடி படையெடுத்து வரும்.  இப்போதெல்லாம் இவைகளின் எண்ணிக்கை குறைத்துவிட்டது.



உயர்ந்த பனை மரத்தின் இலைகளின் மேல், பச்சையாகவும் , பழுப்பு நிறமாகவும், தென்னை ஓலையினையும், நார்களையும்  தன் அலகுகளால் அழகாய் மெல்லியதாய் கிழித்து சிறிது  சிறிதாக  எடுத்துவரும். சிட்டுக்குருவிகள் அடுக்கடுக்குகளாய் தனது  கூடுகளை  பின்னிக்கொள்ளும். அது  கூடு கட்டும் விதமே ஒரு அழகுதான். இதில்  ஆண்  குருவி ஒரு விதமாகவும், பெண் குருவி ஒருவிதமாகவும் கூட்டினை  கட்டிக்கொள்ளும்.






                                     
சிறியது ஆண்குருவி, பெரியது  பெண் குருவி   

அதில் என்ன ஆச்சர்யமென்றால், குருவி ஒவ்வொருமுறையும்  வெளியே சென்றுதான் அதன் கூட்டிற்கு தேவையான தென்னை  ஓலை, நார் போன்றவற்றை  எடுத்துவர  வேண்டும். ஆனாலும் ஒவ்வொருமுறையும் தனது கூடு எது என்பதில் அது மிகவும் தெளிவாயிருக்கும்.

 அந்த அழகிய  சிறிய  குருவியின்  கூடு, பனை மரத்தில்  ஓலையின் நுனியில் அழகாக  தொங்கி கொண்டிருக்கும். 

சிட்டு குருவிகள் கூட்டமாக நெல்வயலினை நோக்கி படையெடுக்கும்.  அதன் முக்கியமான இரை நெற்பயிர்களின் மேலும், வயல்வெளிகளிலும் இருக்கும் சின்னச்சின்ன புழு பூச்சிகள்தான். சிறிய  விதைகளையும்  சிட்டுக்குருவி  இரையாக  எடுத்துக்கொள்ளும்.


நன்றாக விளைந்த நிலத்தில் அவைகள் இரைதேடும். விளைந்து அறுவடைக்கு தயாராக இருக்கும் நெல்வயலின் நிறமும் சிட்டு குருவியின் நிறமும் ஒரே மாதிரி இருக்கும். ஆதலால் தூரத்தில் இருந்து கண்டுகொள்வது எளிதல்ல.  நெற்பயிர்களை சிட்டுக்குருவிகளிடம்  இருந்து  காத்துக்கொள்ள, விவசாயிகள் தகரத்தைத் தட்டி ஒலி எழுப்புவார்கள். 
     
ஒரு தாய் சிட்டுக்  குருவி அவைகள்  தேடிய  இரையை அலகில் எடுத்துக்கொண்டு  கூட்டில்  இருக்கும் அதன்  குஞ்சுகளுக்கு ஊட்டிவிடும், எல்லா  உயிர்களிலும்  தாய்  என்றாலே  பாசம்தான் அந்தக்காட்சி  கவிதையாய்  சொல்லும்.





அந்த குருவிகள் அழகான குரல் கொண்டிருக்கும்.  கீச்  கீச்சென்று அவை  எழுப்பும்   ஓசையே  இசைதான். வட்டமான தலை, வட்டமான இறக்கைகளும், ஆண்குருவியின் முதுகில் சிவப்பு நிற இறகுகளும், பெண் குருவியின் முதுகில்  பழுப்பு நிற  இறகுகளும்  அதில் சில கோடுகளும் இருக்கும்.


சிட்டு குருவிகள் தங்களது துணையினை விட்டு பெரும்பாலும் பிரியாது.
இவைகள் பெரும்பாலும், பயிர்களுக்கு  தீங்கு  செய்யும்  புழு பூச்சிகளை இரையாக எடுத்துக்கொள்வதால் அவைகளை  விவசாயிகளின்  தோழன் என்று கூட சொல்லலாம்.


ஏன் இப்போது இந்த வகை குருவிகள் குறைந்து போனது ?

இதற்கு, நாம் தான் காரணம்.  அவைகள் விரட்ட மறைமுகமாக நாம்  எத்தனை அநீதி செய்துள்ளோம்.  வித விதமாக பூச்சிக்கொல்லிகளை வயல்களில் தெளிப்பது முதல் , வயல்களுக்கு  ரசாயன உரமிடுவதுவரை எத்தனையோ.  

இவைகளெல்லாம், மற்ற சின்னச் சின்ன புழுப்  பூச்சிகளை அழித்துவிட்டன. அதனால் அவைகளுக்கு  விதைகளில்லாத மற்ற இயற்கை உணவு தட்டுப்பாடாகிவிட்டது. மேலும் மரங்களும் குறைந்துவிட்டன. உலகத்தில்  சுற்றுச்சூழலில்  வாகனங்கள், ஆலைகள்  என்று  பெருகியதால்  சத்தம் மற்றும் மாசுகள்  பெருகி  இதுபோன்ற சிறிய  உயிரினங்கள்  வாழ  இயலாமல் செய்துவிட்டோம். அதுமட்டும் அல்ல, இந்தவகை  பறவைகளின்  அழிவால் பயிர்களுக்கு  தீங்கு  செய்யும்  பூச்சி இனங்கள்  பெருகிவிட்டன. இயற்க்கை சூழலில் உயிரியல்  அடுக்கு  சமநிலை  குலைகிறது. எளிதாக  சொல்வதென்றால், சிட்டுக்குருவியின்  இனப்பெருக்க காலமும்  மற்ற பூச்சிகளின்  இனப்பெருக்க கால  அளவும்  வேறு  வேறானவை. இந்த பூச்சிகள் சிறிய புழுக்களாக இருக்கும் போதே   அதை தின்று  தீர்க்கும்  அளவுக்கு  சிட்டுக்குருவிகளும் மற்ற குருவி இனங்களும் இல்லை என்பதே  அந்த புழுக்கள்  பெரும் பூச்சிகளாக மாறி  படையெடுப்பதற்கு  காரணம்.

இந்த சின்ன குருவியின், கடினமான உழைப்பும், புத்திசாலித்தனமும், அதன்  மகிழ்ச்சியும்  நம்மை வியக்க வைக்கும்.

ஒரு  சிட்டுக்குருவியைப்போல  சேமிப்பும், சுறுசுறுப்பும்,  விடா முயற்சியும்  இருந்துவிட்டால் நமது  வெற்றியை  யாராலும்  தடுக்கமுடியாது  என்று  எண்ணிக்கொண்டே அவன்  அருகில்  ஒரு  கதிர்  கற்றைமேல் வந்தமர்ந்த சிட்டுக்குருவியை  தொந்தரவு  செய்யாமல்  மெல்ல  அந்த  இடத்தைவிட்டு  அகன்றான்.








ஊர் திரும்புதல் - 7



Wednesday, 27 May 2020

ஊர் திரும்புதல் - 7

பனை  மரம்

பனையை, கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து கற்பகதருவுக்கு ஒப்பிடுவர். பனை  என்னதான்  கொடுக்கவில்லை. பாளையில் இருந்து  கள்ளும் பதநீரும். பதநீரை  காய்ச்சினால் கருப்பட்டியும் பனங்கற்கண்டும். இளங்காய்களில்  இருந்து  நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு. அதனுடைய  ஓலையை  வைத்து  வீடுகட்டுவது  முதல்  கூடை  முடைவதுவரை பலவிதமான  பயன்பாடுகள். பனைமரத்தின்  உச்சிமுதல்  வேர் வரை  வீணாய்  போகும்  பொருள்  என்று  எதுவும்  இல்லை. 


                                    


கோடை காலத்தில் பொதுவாக பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு, பதனீர், கள் ஆகியவை அந்த நாட்களில் பனை  விவசாயிக்கு  முக்கிய வருவாய்  ஊற்று.  

                                          


பனைமரத்தில்  இருந்து  கிடைக்கும்  பொருட்களுக்கு  நாட்டு மருத்துவத்தில் முக்கிய  இடம்  உண்டு. வீட்டிலேயே  செய்யப்படும்  பாட்டி  வைத்தியத்தில் கருப்பட்டியும்,  பனங்கற்கண்டும் இல்லாமல்  இருக்காது. பனை  நுங்கு நீரை  தொடர்ந்து  சாப்பிட்டு வந்தால்  கோடை காலத்தில் வரும்  வேர்குரு கூட  நீங்கும்.
                                     

வெட்டாமல் விட்டு போகும் பனங்காய்க்கள் முதிர்ந்து பழுத்து தானாகவே    கீழே விழும், பழம் உள்ள மரத்தினை தாண்டி செல்லும்போதே  அந்த வாசனை சுண்டி இழுக்கும். அந்தப்  பழம் கரும்சிவப்பு நிறமாகவும், அருமையான மணமும்  கொண்டிருக்கும்.  அதை சாப்பிட ஒரு விதமான திறமை வேண்டும். பழத்தை எடுத்து பற்களால் வெளித்  தோலை கடித்து இலகுவாக்கி  பின்னர் உள்ளே நார்கள் நிறைந்த அந்த சிவந்த நிறம் கொண்ட சதைப்பகுதிக்கு வரவேண்டும்.  பனம்பழத்தின்  சுவையோ மிக அதிகம். ஆனாலும் இதில் பித்தம் வரும் என்பதாலோ  என்னவோ, எல்லோரும் விரும்பி  உண்ணமாட்டார்கள்.    ஒரு  பனம்பழத்தை கடித்து  இழுத்து  சுவைத்தவரை  அவருடைய  பற்களில்  சிக்கியிருக்கும்  நார்களை  வைத்தே  கண்டுகொள்ளலாம். பனம்பழத்தை  சுட்டும்  சாப்பிடலாம்.






அவனுடைய  ஊரில் எல்லாத்திக்கிலும்   ஆங்காங்கே  பனை 
மரங்கள் வளர்ந்து ஊருக்கே அரனாய் இருந்தது.  கோடை காலங்களின் அமிர்தமாய் இளவயதில்  சாப்பிட்ட  இளம் நொங்கு  அவன்  நினைவில்  வந்து  இனித்தது.


                                   


பனங்காய்களை எடுத்து  துளையிட்டு  நுங்கு வண்டி  ஒட்டியதும். அதில்  சிகரட் அட்டையை  ஒட்டி புல்லெட் வண்டி வருது என்றே ஊரே  சுற்றித்  திரிந்த காலங்கள் அவனுக்கு  நினைவில் வந்தது.   அவனும்  பனைமரம்  ஏற முயற்சி  செய்திருக்கிறான். 

                                    

                                                                                                    
எல்லோராலும் பனை மரமேறி பனங்காய் பறிப்பது இயலாது. ஒருவருக்கு மரமேற தெரியுமென்றால் அவரை சுற்றி ஒரு கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். அவனுடைய  ஊரில் இளசுகள்  எப்போதும் ஒரு பெருசை நம்பியே இருப்பார்கள். 

                                                         

அந்த ஊரில் பனை மரம் உள்ளவர்கள், ஒவ்வொரு வருடமும் இரண்டு  மாதங்களுக்கு கள், பதனீர்  எடுக்க ஏலம் விடுவார்கள்.  அப்படி எல்லா  மரங்களும்  ஏலத்துக்கு  வராது. ஆற்றோரமாக இருக்கும் பொதுவான மரத்தில் கள் எடுக்க கூடாது  என்று  கட்டுப்பாடு  இருந்தது. அது போன்ற மரங்கள் தான் எல்லோருக்கும் பனங்காய் கொடுக்கும்.


அந்த இரண்டு மாதங்களில், வெளியூரிலிந்து கள் எடுக்க வாடிக்கையாக ஒருவர் வருவார.  அவரின் பெயர் விளிம்பி  மைனர்.


முன்பெல்லாம் பக்கது ஊரில் உள்ளவர்களே அந்த  வேலையைப்  பார்த்து வந்தனர். கள் எடுக்க அரசாங்கம் தடை விதித்ததால் அவர்கள் வேறு  தொழில்  தேடி கொண்டனர்.


அதனால் எப்போதெல்லாம் அனுமதி கிடைக்குமோ அப்பொழுதெல்லாம் அந்த மைனர் குடும்பம் குத்தகை எடுத்துக்கொள்ளும். அப்போதெல்லாம் கள்ளு கடை ஊருக்கு ஒதுக்குபுறமாகதான் இருக்கும்.  அதனருகே மலையாளத்தார்  என்று ஒருவர் பட்சணக்கடை வைத்திருப்பார்.


கள் விஷத்தை  முறிக்கும்.  அதில் எந்த வகையான பூச்சிகள் விழுந்தாலும் அப்படியே  வடிகட்டி விடுவார்கள். கள்ளின் சுவை  புளிப்பு. சிறிய  மயக்கமும்  உண்டு.  கள் வடிக்கும் கலயத்தில் சுண்ணாம்பினை நன்கு தடவி வைத்துவிட்டால்  கிடைப்பது  தெளிந்த நீர். அதுதான்  இனிப்புச்சுவையுடைய  பதனீர். 

அந்தநாட்களில்,  அவனுடைய  ஊரின்  வயற்பரப்புகளில் எங்கு பார்த்தாலும் கள் குடித்துவிடுட்டு வீசியெறிந்த பனை மட்டையால் செய்த கோப்பைகளைப்  பார்க்கமுடியும். அப்படிதான்  ஒரு  வருடம்  அவர்களுடைய  வயலில்  பயிர்  செய்திருந்த நிலக்கடலைகளில்  பாதிக்குமேல்  கள் குடிப்பிரியர்களால் காலிசெய்யப்பட்டுவிட்டது. 




ஒருநாள் கள் ஏலம்  எடுத்த  மைனருக்கு  ஓரிரெண்டு மரங்களில் கள் மிகவும் குறைவாக வடிகிறதே என்ன  காரணம்  என்று  சந்தேகம் வந்தது.  அவருடைய ஆட்கள் ஊமத்தங்காயினை அரைத்து கலயத்தில்  கலந்து  வைத்து விட்டார்கள்.  அவர்கள்  எதிர்பார்த்ததுபோல, பல நாள் திருடர்கள் மறுநாள்  மாட்டிக்கொண்டனர்.  திருடர்கள்  மூன்றுபேர். எப்போதும்போல அவர்கள் கள்  இரவில் கள் இறக்கி குடித்திருக்கின்றனர்.   அந்த மூவருக்கும், மறுநாளில் ஊமத்தங்காய்  கலந்த  கள்ளைக் குடித்துவிட்டு  நாக்குகள் தடித்துவிட்டது.  அவர்கள்தான்  கள் திருடர்கள்  என்பது  இப்படியாக  வெளியாகிவிட்டது.


அவனுடைய  ஊரில்  அவனுக்குத்தெரிந்து  தண்ணீர்  பஞ்சமே  வந்ததில்லை. அதற்கு காரணம்  அவனுடை  ஊரில் எங்கெங்கும்  இருக்கும்  பனை மரங்கள்தான்  என்று  அவனுக்குத்தெரியும். 










Monday, 25 May 2020

ஊர் திரும்புதல் - 6

வாத்துக்  கூட்டம்

வீட்டின்  மாடியிலிருந்து  அவன் வீட்டுக்கு  எதிரே  இருக்கும்  ஆற்றை பார்த்துக்கொண்டிருந்தான். ஆற்றில்  அவன்  சிறுவனாக  இருந்தபோது அந்த  ஊருக்கு   வந்த  வாத்துக்கூட்டம்  அவன் நினைவுக்கு  வந்தது. 





அவனுடைய  ஊர்  நிலங்களில்  அந்த நாட்களில்  முப்போகம்  விளைந்திருக்கிறது. ஆற்று  நீர்  பாசனத்தில்  நுழைந்த  அரசியலால்  ஒரு  போகம்  காலவட்டத்தில்  குறைத்துவிட்டது. ஒரு  சில விவசாயிகள்  விடாமல்  பம்பு செட்டு  ஓட்டி  முப்போகம்  செய்கின்றனர். அப்போதெல்லாம்  குருவை  முடிந்து  தாளடி நடவுக்கு  தயாராகும்  வேளையில் பொதுவாக  மழைகாலம் தொடங்கும். குருவை  அறுத்தவுடன் தாளடிக்கு விதைவிடுவதற்காக  ஒரு  கட்டத்தை  விட்டுவிட்டால்  நிலத்தின்  மற்றபகுதிகள்  நீர்தேங்கி கண் நிறைத்திருக்கும்.





அதுபோன்ற  நாட்களில்தான்  வடக்கில்  இருந்து  வாத்து  மேய்க்கும்  கூட்டத்தார்  வருவார்கள். அவர்களுக்கென்று  சொந்த ஊர் இருப்பதாக  அவனுக்கு  அப்போதெல்லாம்  தோன்றியதில்லை. அவர்கள்  ஊர் ஊராக  வாத்துகளை  மேய்த்துக்கொண்டு  போய்க்கொண்டே  இருப்பார்கள்.


அவர்களிடம், இறங்கும் ஊரில்  சிறிய  குடிசை  அமைப்பதற்கான  பொருட்களும்,  நைலான்  கயிறுகளுடன்  மரக்குச்சிகளை  சேர்த்து  பின்னிய  வாத்துப்பட்டியும் இருக்கும். அது எளிதில்  சுருட்டி  எடுத்துக்கொண்டு  போகும்  வகையில்  இருக்கும். கூடவே   அவர்களுக்கு  வேண்டிய  சமையல்  சாமான்கள், அடுப்பு, பாத்திரங்கள் எல்லாமும்  இருக்கும். இடப்பெயர்வுகளுக்கு  அது  மிகவும்  முக்கியம்.  இந்த  பொருட்களை எல்லாம்  அவர்கள்  ஒரு  கூண்டு  வண்டியில்  எடுத்துக்கொண்டு  வருவார்கள். ஒவ்வொரு  வாத்துக்கூட்டத்தாரிடமும்  ஒரு காவல்  நாய்  இருக்கும்.  சில நேரங்களில்  அவர்கள்  வட்டவடிவமான  பரிசலும் கூட  எடுத்துவருவார்கள்.





இவர்கள் ஒன்று அல்லது இரண்டு குடும்பங்களாக வருவார்கள். சில நேரங்களில்  சிறிய  குழந்தைகளும்  அவர்களுடன்  இருக்கும்.


அவர்களில்  ஒருவர் ஊர்களை சுற்றிப்பார்த்து அங்கே உள்ள நில உரிமையாளர்களிடமும், தங்குவதற்கும்,  வாத்துப்பட்டி  அமைப்பதற்கும் அனுமதி வாங்கிக்கொண்டு  போவார். பின்னர் ஓரிரு நாட்களில் அந்த  வாத்துக்கூட்டம்  மேற்கூறிய  சாதனங்களுடன்  அந்த  ஊரில்   வந்து இறங்கும். பொதுவாக  குறைத்து  ஒரு  மாதகாலமாவது  ஒரு  ஊரில்  அவர்கள்  இருப்பார்கள்.


அந்த ஊருக்கு வந்த பிறகு, எந்த  நாளில்  எந்தெந்த  வயல்களில் மேய்ச்சல் விடுவது  என்று ஊரில் உள்ள நில  உரிமையாளர்களிடம் கேட்டுக்  கொள்வார்கள்.


அறுவடை செய்த வயல்கள் வாத்துகளுக்கு அருமையான மேய்ச்சல் நிலம். தண்ணீர் நிறைந்த வயல்களில், வாத்துகள் நீந்தி நீந்தி நீருக்குள் மூழ்கி முத்து குளிப்பதுபோல்  இறை தேடும் அழகே ஒரு அழகு. 


அது ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் நேரமாக இருக்கும். வாத்து மேய்ப்பவர்கள் ஒரு நீண்ட மூங்கில் குச்சியை தனது தோள்களின் மேலே போட்டுகொண்டு தேவைப்படும்போது அந்த குச்சியால் வாத்துகளை வழி நடத்தி   அழைத்து செல்வார்கள்.

வாத்துக்கூட்டங்கள்    நீந்துவதை  தொலைவில்  இருந்து பார்க்கும்போது, அந்த  நீர்பரப்பின்மீது  வண்ணப்போர்வையை போர்த்தியது  போல இருக்கும்.




அப்படித்தான், அன்றொரு நாள், தூங்கி எழுந்த அவன் அந்த  அழகுக்காட்சியை  கண்டான். ஆம், வாத்துக்கள்தான். அவன் வீட்டின் எதிரே உள்ள  அந்த ஆற்றில்   வாத்துக்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டு   அக்கரையில் இருந்து இக்கரை நீந்திக்கொண்டிருந்தன. அவைகளுடைய  உரத்த குவா குவா ஒலிகள்  ஒரு  குழந்தைகள்  கூட்டம்  கொஞ்சி  கொஞ்சி  ஒட்டி உறவாடி  வருவதுபோல அவனுக்கு  தோன்றியது.  அப்போது அவனுக்கு  10 வயது இருக்கும்,  அவனுக்கு  அந்த  வாத்துக்களுடனேயே ஓடவேண்டும்  என்று  ஆவல்  எழுந்தது. அவனுடைய  பரபரப்பை  பார்த்த  அவனுடைய  தாய்  அவனை  தரதரவென்று  வீட்டுக்குள்  அழைத்துச் சென்றார்கள்.  அவன் மனமெல்லாம்  வெளியில்  ஆற்றில்  நீந்தும்  வாத்துக்கள் மேலேயே   இருந்தது.

    
கூட்டமாக கரையேறிய வாத்துக்கள் குவாக் குவாக் கூச்சல்களுடன்  அவனுடைய  தெரு  வழியாக மேய்ச்சலுக்காக  அந்த  தெருவின்  கடைசியில்  இருந்த  வயல் வெளிகளுக்கு சென்றன. வாத்துக்கள்  சாய்ந்து  சாய்த்து  நடக்கும்  ஒய்யாரத்தை அவன் தன்  கன்னத்தில்  கைவைத்துக்கொண்டு  ரசித்துக்கொண்டிருந்தான். 


மேயும்போது வாத்துக்கள் அங்கும் இங்குமாய் முட்டைகளை இடும். அவைகளை  லாவகமாக எடுக்க வேண்டும். இல்லையெனில் யாரவது  எடுத்துக்கொண்டு  போய்விடுவார்கள். அப்படி எடுக்கும்  சிலர் உரிமையாளரிடம் கொடுத்துபோவதும் உண்டு. அதுவும்  தப்பினால்  முட்டைகள்  யாருக்கும்  தெரியாமல் வீணாக போவதும்  உண்டு.


வயல்களை  அடுத்துள்ள  ஒரு  திடலில்  வாத்துக்களுக்கு  பட்டி  அமைத்திருப்பார்கள். ஒவ்வொரு நாளும்  மாலையில்  மேய்ச்சல்  முடிந்ததும்  பட்டிக்குள் அடைப்பார்கள். பட்டிக்கு  அருகிலேயே  அவர்களுடைய  குடிசை இருக்கும்.   அவர்களின் நாய் இரவு முழுவதும் காவல் காத்துக்கொண்டு இருக்கும்.






வயலில் வாத்துக்கள்  மேய்வதால், நிலத்தின் ஒவ்வொரு அங்குலமும் வாத்துகால்கள் பதித்து  கோலம்  போட்டதுபோல  இருக்கும். வாத்துக்கள் மிதிப்பதால் குருவை  பயிரின்  தாள்கள் மண்ணில்  அழுந்தி  மக்கத்தொடங்கும். வாத்துக்கள்  எச்சம்  நிலத்துக்கு  நல்ல உரம். தாளடி  நடவுக்கு  முன்  மேய்ச்சல்  முடிவுக்கு  வரவேண்டும்.


ஒரு  நிலையான   ஊர்   என்று  இல்லாமல்  எங்கெங்கும்  பயணித்துக்கொண்டே  இருக்கும்  அவர்களுடைய  வாழ்க்கை அவனுக்கு  பிடித்திருந்தது.  அவர்களுடைய   கூட்டங்களை  பார்க்கும்போது  அவர்கள்  எல்லாம் எப்போதும்  மகிழ்ச்சியாகவே  இருப்பதுபோல  அவனுக்கு தோன்றும்.


எல்லாம்   இருக்கும் நாம்தான், "என்ன வாழ்க்கையடா இது",  என்று  அலுத்துக்கொள்கிறோம் என்று எண்ணியவாறு  மாடியில்  இருந்து  இறங்கினான்.



ஊர் திரும்புதல் - 1

ஊர் திரும்புதல் - 2

ஊர் திரும்புதல் - 3

ஊர் திரும்புதல் - 4

ஊர் திரும்புதல் - 5





ஊர் திரும்புதல் - 5



அவன் வீட்டுக்கு வந்த பின், அவன் நண்பர்களுடன்  கூடி விளையாடிய கவ்வை விளையாட்டின் போது  அவனுக்கேற்பட்ட சில நிகழ்வுகளை நினைவு கூர்ந்தான். 


கோடைக்காலங்களில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெறும் நிலங்கள் தான் கண்ணுக்கு  தெரியும். தாலடிக்கு பின்னதான, பயறு, உளுந்து அறுவடையும் முடிந்து  நெற்பயிரின் வெண்மை நிற  அடித்தால்கள் வயல்களெல்லாம் படர்ந்து கிடைக்கும்.  இடையிடையே அந்த வயல்களில் கோடை புற்கள் பசுமையாக சிதறிக்கிடக்கும். அதுதான்  மாடுகளுக்கான மேய்ச்சல் பகுதி.  ஆனாலும் ஆங்காங்கே, ஒரு சில வயல்களில் எள் பயிரிட்டிருப்பார்கள். அதனாலேயே  மாடுகளை மேயவிடும்போது  கொஞ்சம்  கவனம்  தேவை.  இல்லையெனில் பச்சை பசேல் என்று இருக்கும் எள் பயிர்களுக்குள் மாடுகள் புகுந்தால் செடிகள் ஒடிந்து பயிர்கள்  சேதமாகிவிடும். 



                                          



                                    

                                     

எப்போதும்  மாடுகளை  மேய  விட்டுவிட்டு  கவ்வை  ஆடுவதுதான்  அவர்களுடைய  வழக்கம்.  அவர்களில்  ஒருவன்  மட்டும்  மாடுகளை  பார்த்துக்கொள்ள  நிறுத்திவிட்டு  மற்றவர்கள்  கவ்வை  ஆட்டம்  விளையாடுவார்கள். 


அந்த  பையன்களில்  யாரும்  செருப்பு  அணிவதில்லை. விளையாட்டின் உற்சாகத்தில் மணலின் சூடு தெரியாமலே விளையாடிக்கொண்டு இருப்பார்கள். விளையாட்டு முடிந்து வீட்டுக்கு சென்று  பார்க்கும்போதுதான் கால்கள் எல்லாம் சூட்டுக் கொப்பளங்கள் இருப்பது  தெரியும். 


பொதுவாக அங்கு  இருக்கும்  சுற்றுவட்ட கிராமங்களில்  வயல் வெளிகளில் வேலை செய்பவர்கள் எல்லோருக்கும் திருமங்கலத்தின் பள்ளி வாசலில் ஒலிக்கும் பாங்குதான் கடிகாரம். மதிய நேரத்தில்  ஒலிக்கும் பாங்கு அவர்களுக்கு  டீ  பிரேக்.  அதுபோல் சாயங்காலம் வரும்   பாங்குதான் வேலையை விட்டு கரையேறும் நேரம். கோடைகாலத்தில்  அவர்களைப்போல  மாடுகளை  மேய்ச்சலுக்கு  அழைத்து செல்பவர்களுக்கும் அதே  பாங்கு ஒலிதான் நேரம்  காட்டி. 



அப்படித்தான்  அன்று  ஒரு கோடைநாளில்  காலையிலேயே  குளிர்ந்த  பழையசாதத்தில் அவர்கள்  வீட்டு  எருமைப்பாலில் உரை ஊற்றிய  தயிரை  விட்டு  பிசைந்து  சாப்பிட்டுவிட்டு  சிறிய  ஏப்பத்துடன்  எழுந்தான். சாப்பிட்ட  கைவிரல்களில் அந்த  எருமைத்தயிர் வெள்ளை நிறத்தில்  பிசுபிசுத்தது. தவிட்டை  தேய்த்து  கைகழுவிக்கொண்டு அவர்கள்  வீட்டு  மாடுகளை  பிடித்துக்கொண்டு  அவனுடைய நண்பர்களுடன் மேய்ச்சலுக்கு  புறப்பட்டான். அவனுடைய நண்பர்கள்   அவரவர் வீட்டு  மாடுகளுடன் மேய்ச்சலுக்கு வந்தார்கள்.  அங்கே  சென்றவுடன்  அவர்களுக்கு  வழக்கமான  விளையாட்டு  மனநிலை  வந்துவிட்டது. 


ஒரு சிறுவனிடம் மாடுகளை பார்த்துக்கொள்ளும் பொறுப்பைக்  கொடுத்துவிட்டு மற்ற எல்லோரும் விளையாடத்  தொடங்கினர். தொடக்கத்தில் சாட்....பூ....த்ரீ..... போட்டு யாருடைய கவ்வை தரையில் இருக்கவேண்டும் என்று  தீர்மானித்தனர். ஆட்டம் சூடு பிடித்தது. உற்சாகத்தில்  விளையாடிக்கொண்டே வெகு தூரத்திற்கு சென்று விட்டனர்.


   
                                     


அன்று விளையாட்டின் பொது, மதியம் பாங்கு ஒலி கேட்டவுடன் விளையாட்டை முடித்துக்கொண்டு மாடுகளை வீட்டுக்கு கூட்டி செல்ல சென்றனர். அப்போதுதான்  மேய்ச்சலுக்காக ஓட்டி சென்ற மாடுகளில் ஒன்று இல்லாததை  கண்டுபிடித்தனர்.  அது அவனுடைய  வீட்டு எருமை  மாடுதான்.


பொதுவாக எருமை மாடுகள் கோடை காலத்தில் காற்றின் திசையிலே போய்விடும். அதுபோலவே அன்று,  காற்று  அடிக்கும்  திசையைவைத்து  ஒருவேளை அந்த  மாடு அடுத்த  கிராமமான மாங்குடி நோக்கி போயிருக்குமோ  என்று  அவனுக்கு  தோன்றியது. மற்ற  மாடுகளை  பையன்களுடன்  அனுப்பிவிட்டு  காணாமல்  போன  மாட்டைத்தேடிக்கொண்டு அவ்வழியே இருந்த  நாட்டு கன்னி வாய்க்கால் வழியாக அவன் கிளம்பினான். இந்த வாய்க்கால் விக்ரமனாற்றில் இருந்து பிரிந்து சுமார் 500 ஏக்கர் பயிர்களுக்கு நீர் பாசனம் கொடுத்துக்கொண்டிருந்தது. 


கிராமங்கள்  ஒரு  நாட்டின்  முதுகெலும்பு.  ஏனென்றால் கிராமங்களில்  விளையும்  உணவுப்பொருட்களைத்தான்  நகரங்களில்  இருக்கும்  மக்கள்  நுகர்கிறார்கள். அந்த  கிராமங்களில்  ஒரு  வீட்டின்  பொருளாதாரம்  அரைக்காணி  நிலமும்,  ஐந்தாறு ஆடு, மாடுகளும்தான். ஆடுமாடுகள்  ஒரு  விவசாயிக்கு  அவனுடைய  குடும்பத்து  உறுப்பினர்கள்  போல. அவன்  இந்த  நாட்டில்  இருக்கும்  கோடானுகோடி  விவசாயிகளில்  ஒருவரின்  மகன். அவனுக்கு  அந்த  மாட்டின்  மதிப்பு  தெரியும். 



மதியம் கறவைக்கு மாட்டைத் தேடுவார்கள்.  அவன் கவலையெல்லாம் கன்று குட்டி பாலுக்கு என்ன செய்யும்  என்றுதான்  இருந்தது.  அவனுக்கு   பயத்தில் முகம்  சிவந்து  அழுகையே  வந்தது. எப்படி வீட்டுக்கு போவதென்று தெரியாமல் அங்கும் இங்குமாய் மாட்டைத் தேடி ஓடினான். தேடிக்கொண்டே ஒன்று  இரண்டு கிலோ மீட்டர் தூரம் சென்றுவிட்டான். எங்கும்  மாடு  தென்படவில்லை. மாங்குடிக்கு  அருகில்  ஒரு  குளம்  இருந்தது. அங்கே  கொஞ்சம்  நின்றுவிட்டு  தேடலாம்  என்று  சோர்வுடன்  குளத்தங்கரையில் உற்கார்ந்தான். மனதுமட்டும்  பதைபதைத்தது. அப்போதுதான்  அவன்  அதைக்கண்டான். கலங்கி  தேங்கியிருந்த குளத்து நீரின்  நடுவே  ஒரு  மெல்லிய  அசைவு. அதை  சுற்றி  வட்ட  வட்டமாக  மெல்லிய  அலைகள்  குளத்து நீரில்  விரிந்தவண்ணம்  இருந்தது. உற்றுப்பார்த்தான்.  ஒரு  கல்லை  எடுத்து  எறிந்தான். மேலும்  அசைவு. அது அவனுடைய மாடுதான். அது   வெயிலுக்கு பயந்து,  குளத்து நீர் இருக்கக்கண்டு அதில்  இரங்கி  இதமாக தண்ணீரில் ஊறிக்கொண்டிருந்தது.



                                  




அப்போதுதான்  அவனுக்கு  மூச்சுவந்தது போலிருந்தது. அவன் முகத்தில் ஒரு தெம்பு ஏற்பட்டது. குளத்தின்  உள்ளே இறங்கி அந்த மாட்டை அழைத்து கொண்டு வீட்டுக்கு விரைந்தான். 


அத்தனை மாடுகள் இருந்த அந்த  ஊரில்  காலப்போக்கில்  இப்போதெல்லாம் ஊரில் பேருக்குக்கூட ஒரு எருமை மாடு இல்லையே  வருந்தினான்.   

Sunday, 24 May 2020

ஊர் திரும்புதல் - 4

அவன், தாத்தாவுடன் பேசிக்கொண்டே கௌசல்தார் வீட்டைக் கடந்தான். அவன் நினைத்ததுபோல  அந்த  கடை  அங்கே  இல்லை. கடை  இருந்த  இடம்  புதுப்பித்து  கட்டப்பட்டிருந்தது.

நெல் அறுவடை ஆரம்பிக் போவதால் அதை கொள்முதல் செய்யும்  தமிழ் நாடு நேரடி நெல் கொள்முதல் நிலையம், தங்களது ஆயத்த பணிகளை மேற்கொண்டு இருந்தார்கள்.


அப்படியே ஆற்றின் பாலத்தைக்  கடந்து திருமங்கலத்தை அடைந்தான்.  அந்த ஊர்தான் அவனின் கிராமத்திற்கு உள்ள கடை தெரு. திருமங்கலம் நீண்ட தெருக்களை கொண்ட அழகிய ஊர். அந்த ஊரின் சிறப்பே, ஊரின் மத்தியில் வீற்றிருக்கும் வரலாற்று சிறப்பு மிக்க பூலோக நாயகி சமேத  பூலோக நாதர் திருக்கோவில்  (சிவன் ஆலயம்). அந்த ஊரில் இருக்கும் சிவன்கோவில் தெரு, பள்ளிவாசல் தெரு, மெயின் ரோடு (மெத்தை வீட்டுத் தெரு), அரசு நடுநிலை பள்ளிக்கூடம் எல்லாமும்  கூட  சிறப்பாகவே  இருக்கும்.



மெயின் ரோட்டில் இருக்கும்  அண்ணா சிலையும் அதனை  சுற்றியிருக்கும் வித விதமான  கடைகளும், அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தமும், அதனருகே பூம்புகாரிலிருந்தும், சின்னங்குடியிலிருந்தும் கொண்டுவந்து  விற்கப்படும்  கடல் மீன், நண்டு,  இறால்  வகைகளும்  அவனுக்கு  நினைவுக்கு  வந்தது. அந்த  ஊரே, சுற்றியுள்ள  கிராமங்களுக்கு  வேண்டிய  வசதிகளை  தந்துகொண்டிருந்தது.

       


அவன் முன்பெல்லாம் வாடிக்கையாக செல்லும் இறுக்கி கடையை நோக்கி நடந்தான். அந்த கடையின்  உரிமையாளர் வேறு மாவட்டத்தை  சேர்ந்தவர். எந்த பொருளும் இருக்கா என்று கேட்டால், "இறுக்கி" என்றே அவர் அழகாக பதில் சொல்வார்.  அதனாலேயே மக்கள்  வழக்கில் அந்த  கடைக்கு , 'இறுக்கி பாய் கடை' என்று விளிப்பெயர்  ஏற்பட்டிருந்தது.

"பாய் எப்படி இருக்கிங்க?",  என்று அவன்  அவரை நலம் விசாரித்தான்.

அதற்கு அவர், "வா வா, எப்போ வந்த, எவ்வளவு நாள் லீவு!",  என்று கேட்டுக் கொண்டே பொட்டலம் மடித்துக் கொடுத்துவிட்டு அருகில் வந்து பேசினார்.  அவருடன்  பேசிவிட்டு  அங்கிருந்து புறப்பட்டு அருகில் இருக்கும் சிதம்பரம் மாமா டீ கடையில் டீ குடித்துக் கொண்டே  அவரிடமும் நலம் விசாரித்தான்.

அவன் சிறுவயதில் நெல் அரைக்க செல்லும் பத்தர் ரைஸ் மில்லுக்கு சென்றான். அங்கிருந்த  தாத்தா "வாடா படவா, எப்போ வந்தாய்?", என்று தனக்கென்ற தொனியில் வாய் முழுவதும் வெற்றிலையை குதப்பிக்கொண்டே  வரவேற்றார். அவருடன்  கொஞ்ச  நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு வீட்டுக்கு  புறப்பட்டான்.

வரும் வழியில்,  ஆற்றில்  ஒரு  இடத்தில  சிறுவயதில்  அவனும்  அவனுடைய  நண்பர்களும்  கூட்டமாய் ஆற்றில் விளையாடிய 'கவ்வை குச்சி விளையாட்டு' அவனின் ஞாபகத்துக்கு வந்தது.



இளம் மூங்கில் கவ்வையை வைத்துக்கொண்டு ஆறு ஏழு பேர் சேர்ந்து விளையாடும்  ஆட்டம்தான்  அது. ஆட்டக்காரர்கள்  எல்லோருடைய  கையிலும்  கவ்வை  குச்சிகள்  இருக்கும். அவுட்  ஆனவர்  குச்சிமட்டும் தரையில்  கிடைக்கும்.  மூங்கில் குச்சியின்  நுனியில்  வளைத்த  ஊக்கு  போல கவ்வை  இருக்கும். அதன்  துணையுடன்  அவுட் ஆனவரின் குச்சியை  மற்றவர்கள்  இழுத்துப்  போவார்கள். அவுட் ஆன பையன்  குச்சியின்  பின்னாலேயே போக வேண்டும். அவுட் ஆன பையன் யாரை  தொடுகிறானோ  அவன் அவுட். ஆனால் அவன்  தொடும்போது  துரத்தப்படுபவன்  ஏதாவது  ஒரு  கல்லில் அல்லது  அங்கே  கிடைக்கும்  பொருளில் (மண் தவிர) தன்னுடைய கவ்வை குச்சியை  தொட்டுக்கொண்டிருந்தால்  அவன்  அவுட் இல்லை. இப்படியாக  அந்த  விளையாட்டு  மிக சுவாரசியமாக  இருக்கும்.  எந்த  ஒரு  ஹாக்கி  விளையாட்டுக்கும்  குறைவானதல்ல அந்த  ஆட்டம். அந்த  விளையாட்டை  யாரும்  இப்போதெல்லாம்  விளையாடுவதாக  தெரியவில்லையே  என்று  எண்ணிக்கொண்டே லேசான  பெருமூச்சுடன்  அந்த  இடத்தை  அவன்  கடந்தான்.


தொடரும் .....