Saturday, 26 June 2021

உயிரின் யாத்திரை - வாசிப்பனுபவம்

உயிரின் யாத்திரை  

(குறுநாவல்)

ஆசிரியர் - எம். வி. வெங்கட்ராம் 

காலச்சுவடு பதிப்பகம் 

விலை  ₹ 90

பக்கங்கள் 79




உயிரின் யாத்திரை என்ற  இந்த குறுநாவல் முதலில் தொடர்கதையாக 1958 ல் எம்.வி. வெங்கட்ராம் அவர்களால்   ஒரு மாறுபட்ட  கதை தளத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டு சுதேசமித்திரன் இதழில்  வெளிவந்தது. பின்னர் இந்த தொடர் கதை  குறுநாவலாக வெளியிடப்பட்டது. மறுபதிப்பு காலச்சுவடு பதிப்பகத்தாரால்  வெளியிடப் பட்டுள்ளது. 

திருமூலரின் கதையினை   மேற்கோள் காட்டி இந்த கதை புனையப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு வாசகங்களுக்கும் பதிலாகக் கதையின் போக்கு இருக்கிறது.


கதை, கதையின் நாயகி "ராணி" தன் இறுதிநாளில் தன்னை தழுவப்போகும் மரணத்தின் மடியில் படுத்துக்கொண்டு மீதம் இருக்கும் ஒவ்வொரு நொடியையும் எண்ணிக் கொண்டிருக்கிறாள். அவளின் கணவனும் கதையின் நாயகனும் ஆன "ராஜா", எப்படியாவது தன் உயிருக்கு உயிரான மனைவியை உயிர்ப்பிக்க வேண்டும் என்று எண்ணி வேண்டாத தெய்வம் இல்லை. வைத்தியம் பார்த்த டாக்டர் இன்று இரவு மூன்று மணிவரை தான் கெடு என கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார். என்ன செய்வது என்றே தெரியாமல் குழம்பிப் போய்  இருக்கும் ராஜா ஒரு புறம், மரணத்தின் வாயிலில் ராணி ஒருபுறம், மற்ற உறவினர்கள் எல்லோரும் கூடி கவலை தோய்ந்த முகங்களுடன் அந்த வீடே ஒரு கலை இழந்து காணப்பட்டது.    

    

இப்படியாக இருக்கும் தருணத்தில், ராஜாவின் நண்பன் வேகமாக வந்து, புதிதாக எங்கள் தெருவில் என் வீட்டுக்கு அடுத்த மூன்றாவது வீட்டுக்கு வந்திருக்கும் ஒருவர், உன் மனைவியின் நிலைமையினை சொல்லி அதற்கு மருந்து தருகிறேன் என்றும் உடனே உன்னை அவரிடம் அழைத்து வரச்சொன்னார் என்றதும் ஒன்றும் புரியாமல் குழம்பி நிற்கும் ராஜா என்னசெய்வது என்ற நிலையில் இருந்து இறுதியில் ஒரு முடிவெடுத்து அவரிடம் போய் மருந்து வாங்கி வரவேண்டி போகிறான்.

அங்குப் புதிதாக வந்தவர் "சதாசிவம்", அவரே ராணிக்கு மருந்து கொடுக்கிறார் அந்த மருந்தில் அவள் குணமுமடைகிறாள். ஆனால் யார் இந்த சதாசிவம்  என்று கேள்வி புதிராகவே இருக்கிறது.

முன்ஜென்மமும், அந்த ஜென்மத்தில் நடந்த பழைய கதைகளுடன் வருகிற கனவு அந்த கனவுக்கு விடைதேடி ராஜா சதாசிவத்திடம் செல்கிறான். அங்கு வந்த ராஜாவுக்கு மீண்டும் ஆச்சரியம் தான், ஏனெனில் தான்  வந்த காரியத்தினை அவர் தானாகவே சொல்வதால் ஆச்சர்யமுற்ற ராஜா எப்படி இவருக்கு எல்லாம் தெரிகிறது, இதற்கும் பதில் தக்க நேரத்தில் வருமென்று அவரே சொல்லுகிறார்.

இந்த கதையின் நாயகன் ராஜாவுக்கு வரும் அனைத்து சந்தேகங்களும் நமக்கு வரத்தான் செய்கிறது. முன்ஜென்மம் எந்த அளவுக்கு நம்பிக்கை இருக்கிறது என்று தெரியவில்லை ஆனால் இறைநம்பிக்கை கொண்டதால் ஒரு வேளை இந்த செயல்கள் நடந்ததா? என்றும் மேலும் மேலும் பல்வேறுவிதமான சந்தேகங்கள் எழத் தான் செய்கிறது.

கோவில்களின் நகரம் கும்பகோணம், அங்கு இருக்கும் தெய்வங்களையும் ஆலயங்களையும் தரிசிக்கத் திருவாரூரிலிருந்து வந்திருக்கிறோம் என்று சொல்லும் சதாசிவம் குடும்பம் எப்படி ராஜாவின் மொத்த குடும்ப நிகழ்வுகளை தெரிந்து கொண்டுவந்தார் என்ற கேள்விகளுக்கு விடையினை சொல்லும் விதமாக ஆசிரியர் இந்த கதையினை கொண்டுசெல்கிறார்.    

சோகத்தில் ஆரம்பித்து அங்கிருந்து முன் ஜென்மம் தேடல் வரை சென்று வாழ்க்கையின் எதார்த்தமான இரண்டு செயல்களாக இருக்கும் இன்பம் (நன்மை),  துன்பம் (தீமை) களை பற்றிப் பேசி இறுதியில் எதார்த்த   உலகிற்குத் திரும்பி நம்மை அழைத்துச் செல்கிறது கதை.




அன்புடன் 

தேவேந்திரன் ராமையன் 

26 ஜூன் 2021

 

   

Friday, 25 June 2021

வெள்ளாடுகளும் சில கொடியாடுகளும் - வாசிப்பனுபவம்

வெள்ளாடுகளும் சில கொடியாடுகளும் 

(சிறுகதை தொகுப்பு)   

ஆசிரியர் - சோலை சுந்தரபெருமாள் 

பதிப்பு - பாரதி புத்தகாலயம் 

விலை - ரூபாய் 70

பக்கங்கள் - 128



வெள்ளாடுகளுக்கு சில கொடியாடுகளும் என்ற சிறுகதை தொகுப்பில் மொத்தம் பதினான்கு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இவற்றுள் தலைப்பின் பெயரை கொண்டுள்ள சிறுகதை மொத்த கதையின் சாரத்தை சொல்லிச்செல்கிறது. 

இந்த கதைகள் பெரும்பாலும் 1980 களில் எழுதியவை அதனால் தான் அந்த காலகட்டத்தில் நிகழ்ந்தேறிய எண்ணற்ற மனதை பாதித்த சம்பவங்களை கோர்த்து கொடுத்திருக்கிறார்.   

இந்த புத்தகத்தின் "ஆசிரியர் சோலை. சுந்தரபெருமாள்" அவர்கள் தஞ்சை மாவட்டத்தின் மண்ணில் பிறந்து தன் தாய் மண்ணின் பெருமைகளை தனது எழுத்துக்களால் ஆவணப்படுத்தி இருக்கிறார். பெரும்பாலான கதைகள் கிராமத்தில் இருக்கும் கதை மாந்தர்களை பற்றியதாகவும், அவர்கள் படும் துன்பங்களை சொல்லும் விதமாகவும் மேலும் விவசாய மக்களின் நிலைமையினை சொல்லும் கதைகளாகவே தான் இருக்கிறது. அவர்    அரசாங்க பள்ளிக்கூடத்தில்  ஆசிரியராக பணி புரிந்தவர். இவர் தனது பணிக்காலத்தில் ஏற்பட்ட வெகுவான சம்பவங்களை கொண்டே இந்த கதைகளை சொல்லியிருக்கிறார். ஆம் கதைகள் என்பது வெறும் கற்பனைகளில் வருவதல்ல அது எதோ ஒருவிதத்தில் நாம் கண்டதும், அனுபவித்தும், சில நேரங்களில் நடக்கும் அவலங்களை நம்மால் பார்க்கத்தான் முடியுமே தவிற வேறெதுவும் செய்ய இயலாத நிலை அதுபோல் மனதில் படிந்த சில சம்பவங்களை கொண்டே கதைகள் பிறக்கின்ற.. அப்படித்தான் இந்த தொகுப்பில் இருக்கும் கதைகள் உருவாக்க பட்டிருக்கின்றன.

அவர் ஆசிரியர் என்பதால், கல்விக்கூடத்தில் ஏற்பட்ட ஏற்ற தாழ்வுகளையும், எல்லோரும் சமம் என்ற உரிமை படிப்பதற்கு இல்லையென்பதையும் தான் சந்தித்த சில நிகழ்வுகளையும் மையமாக கொண்டே இந்த கதைகள் வந்திருக்கின்றன.

ஒவ்வொரு கதையும் ஒரு ஆழமான செய்தியினை சொல்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.

ஏழைகள் எவ்வாறெல்லாம் படிப்பில் புறக்கணிக்க படுகின்றனர் எனப்தையும் குறிப்பாக கிராம புறத்தில் இருக்கும் பெரும்பாலோனோர் கல்வி என்பது ஒரு மாயை போலவே இருந்தது என்பதையும் ஆவணப்படுத்தியிருக்கிறார். ஆனால் இன்றைய நிலைமையும் தலை கீழாக மாறியிருப்பதையும் எல்லோரும் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிக்கூடத்தில் தான் படிக்க வைக்கவேண்டும் என்று கடன் வாங்கியாச்சும் செய்கின்றனர் வறட்டு கௌரம் பிடித்த இந்த மூடர் கூட்டம் என்று சொல்லாமல் சொல்லி செல்கிறார் ஒரு கத்தியின் ஊடே..

வாங்க கதைக்குள்ளே போவோம்..

1. தலைமுறைகள்.

எப்படியாவது தனது இளைய பெண்ணுக்கு பள்ளிக்கூடத்தில் சேர்த்து விடவேண்டும்  என்ற கவலையுடன் தோட்டாண்டி, கங்காணியிடன் கடன் வாங்கித்தரச்சொல்லி கேட்கிறான். ஏன் மொவள அரசாங்க பள்ளிக்கூடத்தில் சேர்க்க "தலைமை ஆசிரியர் கேட்ட தொன்னுத்தியொரு ரூபா" பணத்திற்க்காக முன்பணமாக கேட்டு வாங்கிப்போகிறார். பேருந்தில் போனால் காசு போய்விடுமே என்று அதற்க்கு ஒரு டீ குடித்துவிட்டு நடந்து போகலாம் என்று நடக்கும் தோட்டாண்டி போல எத்தனையோ அப்பாக்களின் தியாகம் தெரிகிறது இந்த தலைமுறைகள் வழியே. ஒவ்வொரு அப்பாவும் எப்படியாவது அடுத்த தலைமுறை படித்து முன்னேறி நாம் படும் இந்த அவதியை படவேண்டாம் என்று எண்ணம் இல்லாமல் இருப்பதில்லை தான்.        

2. கண்கள்.

ஆசியர்கள் அட்டூழியத்தாலும் அகங்காரத்தாலும் ஒரு மாணவன் தனக்கு இந்த கல்வியே வேண்டாம் என்று சொல்ல வேண்டிய நிலை வருகிறதென்றால் அது நமக்கு இருக்கும் கல்விமுறை தான் தவறு என்று சொல்லவேண்டும். ஒரு மாணவன் தனது புத்தகத்தை விட வெளியில் இருக்கும் அறிவை வளர்த்து கொண்டால் அதை எப்படி தாங்கிக்கொள்ளமுடியும் இந்த அறிவீன ஆசிரியர்களால் அப்படி பாதிக்கப்பட்ட ஒரு மாணவனின் கதை தான் இந்த கண்கள். அப்பா நாட்டுக்காக ராணுவத்தில் பணிபுரிகிறார் ஆனால் அவரோட மகன் இங்கு அடிமையாக படுகிறான்.

3. கணப்பு.

ஆசாரியார், தன் மகள் படிக்கும் பள்ளிக்கூடத்தில் இருந்து ஆறு டிக்கெட் கொடுத்து முன்னூறு ரூபாய் வாங்கிவரசொல்லியிருக்காங்க அதை எப்படி புரட்டுவதென்று அவர்  படும் தவிப்பினை  அடையாளப்படுத்தியிக்கிறார். "கெவுருமெண்டு கோழி முட்ட அம்மியை கூட ஒடச்சிப்புடும்" இந்த நிலை இன்னும் மாறவில்லையே என்ற அவலம் நமக்கு தோன்றாமல் இல்லைதான், என்ன செய்வது நமக்கு கிடைச்ச வாழ்க்கை இதுதான்.

4. புது யுகம்.

இந்த கதை "பெண்களுக்கு கல்வி எதற்கு" என்று சொல்லும் ஒரு பெற்றோரை மையமாக கொண்டு சொல்லப்படுகிற கதை. தங்கள் ஆண் பிள்ளைக்கு கொடுக்கும் படிப்பின் உரிமையை ஏன் அதே  வயிற்றில் பிறந்த மகளுக்கு கொடுக்க மறுகின்றனர் என்பதை சொல்லுவிதம் மிக ஆழமான கருத்தை சொல்கிறது. இதுபோன்ற பெற்றோர்களுக்கு பாடம் சொல்லும் விதமாய் இருக்கும் அந்த மகன் தன் தங்கைக்கும் மேற்கல்வி கொடுத்தால் தான் நானும் கல்லூரிக்கு போவேன் என்று சொல்லும் விதம் இந்த தலை முறை மாறியிருக்கிறது. தன் சகோதரிக்கும் சமமான கல்வியினை பெற்று கொடுத்த சகோதரன் ஒரு படி மேலே தான் நிற்கிறான்.

5. தூண்.

இந்த கதை சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஒரு நல்ல ஆசிரியராக இருந்த ஒரு ஆசிரியர் தனது மகளை ஒரு ஆசிரியருக்கு கொடுத்து மருமகனாக்கி கொண்டார். தான் மருமகன் ஆசிரியர் விலையைவிட மற்ற எல்லாவேலையையும் செய்வதை கண்டு படும் அவதியினை சொல்லும் கதை. பெரும்பாலும் "ஆசிரியர்கள் கிராமத்தில் பள்ளிக்கூடத்தை விட்டுவிட்டு விவசாயம் செய்வதை" நாம் பார்த்திருக்கக்கூடும்.

6. பொலி.     

காசிக்கோனாரும், தனது பொலி காளையும் அருமையாக இருக்கிறது இந்த கதை. பாவம் காளையை நல்லா வளர்த்த கோனாரால் தன் பிள்ளையை நல்லா வளர்க்க முடியவில்லையே என்ற வருத்தம் வாட்டிக்கொண்டே தான் இருக்கிறது. அதை நிவர்த்தி செய்ய பேரப்பிள்ளைகளை வளர்க்க அரும்பாடு படுகிறார். பேத்தி படிக்கிற ஸ்கூலில சீட்டு கொடுத்து அனுப்பியிருங்கங்க முன்னூறு ரூபாய் கொடுக்கணும்  அதற்கு எப்படி ஏற்பாடு செய்வதென்று தவித்துக்கொண்டிருக்கும் போது மகன் வீட்டில் இருக்கும் ஆட்டுக்கிடாய்களை கசாப்பு கடைக்காரனிடம் ஐநூறு ரூபாய்க்கு விற்று விட்டு இருநூறு மட்டும் கொடுத்துவிட்டு குதிரில் இருந்த நெல்லையும் எடுத்துக்கொண்டு போவதை பார்த்து மனம் தளர்ந்து போனார் காசிக்கோனார்.

7. வேலி.     

ஊருக்குள் சிலர் அடுத்தவர்களின் சொத்தை அபகரிப்பதில் ஆர்வமாக இருப்பார்கள் அதற்க்கான அணைத்து குறுக்கு வழியினையும் கண்டுபிடித்து தேவையான வேலைகளை செய்வார்கள். அப்படித்தான் இந்த ஊருக்காக உழைத்த ஒரு ஆசிரியரின் நிலத்தை அபகரிக்கிறான் அடுத்து மனையின் சொந்தக்காரனான சாமிநாதன். பெருந்தன்மையுடன் விட்டுக்கொடுத்த ஆசிரியரின் நிலத்தை அபகரிக்க அவர் மீதே பிராது கொடுத்து அவர் சொத்தினை எடுத்துக்கொண்ட அவனின் அநீதியை என்னவென்று சொல்லுவது. இதுபோல மனிதர்களின் மதிப்பு தெரியாமல் சுற்றி திரியும் மிருக கூட்டத்தின் கூடவேதான் நாமும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

8.நாளைய... 

இது சொல்லும் கதை நம்மில் பலர் இன்று தனியார் கல்விக்கூடங்களை நாடுவதை சாடி சொல்லும் ஒரு சிறு கதைதான். தனது மகனை தனக்கு தெரியாமல் தனது பெற்றோர்களிடம் விட்டு கான்வெண்டில் படிக்க வைக்கும் மனைவியிடம் கோபம் கொண்டு மகனை மாமனார் வீட்டில் இருந்து அழைத்து வரும் ஒரு தகப்பன். ஊரில் பெரும்பான்மையான குழந்தைகள் கான்வென்ட்டிற்கு போவதும் அதை கண்டு மனம் வருந்தும் கதிரேசன், தனது தம்பியின் மகனும் அங்கே போய் படிப்பது திரும்பி வரும்போது அந்த பச்சிளம் குழந்தை படும் பாடு வேதனைக்குரியது தான். அப்பப்ப வந்து போகும் கஸ்தூரி மெட்ரிகுலேசன் வேன் கதைக்கு உயிரூட்டுகிறது. 

9. வேலை.

ஒரு கிராமத்தில் இருந்து படித்து நகரத்திற்கு வேலை தேடி போகும் ஒரு வாலிபனின் கதைதான் இது. சேகர் என்ற வாலிபன் எம். ஏ. படித்தாலும் அவன் கிராமத்தான் என்பதால் வேலை கிடைக்கவில்லை. விரக்தியுடன் வீடு திரும்பும் அவனை வரவேற்றது அவன் வீட்டு நாய்மட்டும்தான்.வேலை இல்லையென்றதும் இவ்வளவு செலவு பண்ணி படிக்க வைச்சேன் இப்ப என்ன செய்வது என்று புலம்பும் பெற்றோர்கள். இறுதியாக வயல்வெளி வேலைக்கு போனால் அங்கும் நிலக்கிழார்கள் வேலைக்கு வைத்துக்கொள்ள மறுக்கின்றனர். நேற்று வரை வெள்ளையும் சொள்ளையுமாய் திரிந்தவன் இந்த வேலைக்கு சரிவரமாட்டான் என புறக்கணிக்க திக்கு தெரியாமல் செல்லும் சேகர் சிவகாசியில் லாரி ஷெட்டில் லோடு மேன் வேலை செய்து மாதந்தோறும் இருநூறு ரூபாய் வீட்டுக்கு அனுப்புகிறான்.

10. வெள்ளாடுகளும் சில கொடியாடுகளும்.

இது இந்த புத்தகத்தின் தலைப்பினை தாங்கி நிற்கும் கதை.  இந்த கதையும் அதற்க்கான பலத்தினை கொண்டுள்ளது என்பதில் ஐயமேதுமில்லை.  ஒரு ஆசிரியர், தனது பிள்ளைகளை மட்டுமல்லாமல் அந்த ஊரையே நம்பி இருக்கும் அத்துணை குழந்தைகளையும் படிக்க வைத்ததில் பெரிய பங்கு நாச்சிமுத்து வாத்தியார்.  இவரின் குடும்பத்தில்    பிறந்த மூன்று மகன்களை நன்றாக படிக்க வைத்து நல்ல வேலையும் வாங்கிக்கொடுத்து அழகு பார்த்தவர் தான் இந்த நாச்சியப்ப வாத்தியார். ஆனால் அந்த மூன்று மகன்களும் வேலைக்கு போனவுடன் அப்பாவுக்கு தெரியாமலே திருமணம் செய்துகொண்டு வெளியில் சென்றது நொடிந்து போன நாச்சியப்ப வாத்தியார் தான் சேர்த்துவைத்த சொத்துக்களை எல்லாம் தன் கடைக்குட்டி மகனை தான் கட்டிக்கொள்வேன் என்று காத்திருந்த மச்சானின் மகள் ஜெயாவிற்கு எழுதி அவளை தத்தெடுக்கொள்வதும் அவரின் நிலைமை சொல்கிறது.

11.  கோணங்கி.    

இந்த கதையினை எழுதிய காலங்களில் அரசு பள்ளிகளில் நடந்த அத்துமீறல்களை அடுக்கி செல்லும் கதைதான் இது. ஒரு ஏழை மாணவன் தன் மாமா சவால்விட்டதும் எப்படியும் அந்த சவாலினை நடத்தி கட்டவேண்டும் என்ற நோக்கத்துடன் படிக்கிறான். மழைக்காலம் அவனது யூனிபார்ம் நனைத்து போய் காயாமல் இருப்பதால் பள்ளிக்கூடம் செல்லாமல் இருந்தான். அந்த பள்ளியின் தமிழாசிரியர் வழக்கம் போல தமிழய்யாவாக இல்லாமல் தமிழ் வாத்தியராகவே இருந்தார். அதனால் அவருக்கு ஏகப்பட்ட இடையூறுகள் மற்ற ஆசிரியர்களிடம் இருந்து தொடந்து வந்து கொண்டேதான் இருக்கிறது. மாணவனின் அப்பாவை பார்த்த அவர் ஏன் உங்க மகன் பள்ளிக்கூடம் வரவில்லை என்றதும் நிலைமையினை தெரிந்து கொண்ட ஆசிரியர் கலர் ஆடையுடன் வரச்சொன்னார் அதற்க்கு அதானல் கலர்  ஆடையுடன் பள்ளிக்கூடம் சென்ற மாணவனை இறுதியில் வெளியில் அனுப்பும் தலைமை ஆசிரியர் மேலும் தமிழாசிரியரையும் கடிந்து கொள்வது தான் அவர்களின் அத்துமீறல். 

12. உதய வாசல்.

தங்கமுத்து நாடக வாத்தியார்  தன் பேத்திக்காக பள்ளிக்கூடத்தில் சேர்க்க தலைமை ஆசிரியர் கேட்டும் "பேன்" வாங்கி கொடுக்க படும் அவஸ்தையும் அதுவும் ஒரே நாளில் வந்தால்தான் சேர்க்கப்படும் என்பதும் அரசாங்கம் இலவசமாக கொடுக்கும் கல்வியினை இவர்கள் தங்கள் தேவைக்காக பயன்படுத்திவருவது என நிலைமையினை ஆதங்கமாக சொல்லியிருக்கிறார். சமத்துவம் சொல்லிக்கொடுக்கும் பள்ளிக்கூடத்தின் "ஆசிரியர்கள் ஆளுக்கொரு டீ கப்" வைத்திருப்பதை கண்டு வெகுண்டு எழும் தங்கமுத்து நாடக  வாத்தியார் தன் பேத்தியினை இங்கு படிக்க வைக்க வேண்டாம் என்று முடிவெடுப்பதும் இறுதியாக ஏன் என்று அங்கே சேர்த்து விட்டு வருவதும் என கதை முடிகிறது.

13. திணிப்பு.

அமுதா என்ற ஒரு பள்ளி மாணவி, தன் ஒருநாளய தன் பள்ளி மற்றும் எடுத்துக்கொள்ளும் மற்ற வகுப்புகள் என எல்லாவற்றியிலும் அவள் படும் அல்லல்களை அட்டவணைப்படுத்திக்கிறது . அவள் உடல் உபாதையால் ரெட்டை சடை போடாமல் போனது ஒரு குற்றம் என அவளை தண்டிக்கும் ஆசிரியை என்ன சொல்லுவது. 

14. தாவணி.  

தாவணி போட்டுவந்தால் தான் பள்ளிக்கூடத்திற்கு அனுமதி என்று சொன்னதும், ஆர்வத்துடன் படிக்கும் ஒரு ஏழை மாணவி ஒரு தாவணி வாங்குவதற்க்காக பருத்தி எடுக்க வயலுக்கு செல்கிறாள் அங்கேயும் தாவணிப்போடாத பிள்ளைகளை வேலைக்கு வைத்துக்கொள்வதில்லை என்றதும் கிழிந்து போன அம்மாவின் சேலையின் பாதியை கிழித்து தாவணியாய் அணிந்து கொண்டு செல்வதை பதிலேதும் சொல்லமால் தன் இயலாமையில் தவிக்கும் அவளின் அம்மா.. இங்கே ஒரு "வரலாறு டீச்சர் சொல்லும் பழையகதையினை" கேள்விகேட்காமல் ஏற்று கொள்ளவேண்டும் என்று புகுத்துவது எந்த விதத்தில் உகந்தது என்ற கேள்வியினை கேட்காமல் இல்லை ...

நல்லொதொரு சிறுகதை தொகுப்பினை வாசித்த அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்துகூடத்தில் ஒரு மகிழ்ச்சி. 


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

25 ஜூன் 2021                        

         

                 

                

Wednesday, 23 June 2021

நாளை மற்றுமொறு நாளே... - வாசிப்பு அனுபவம்

 நாளை மற்றுமொறு  நாளே... 

எழுத்தாளர் - ஜி. நாகராஜன்  

முதல் பதிப்பு - பித்தன் பட்டறை 

மறு பதிப்பு - காலச்சுவடு 

விலை ரூபாய் - 175

பக்கங்கள் -143




நாளை மற்றுமொரு நாளே, கடந்த வருடம் காலச்சுவடு அறிவித்த கழிவு விலையில் வாங்கி இருந்தேன். இப்பொழுது வாசிக்கலாம் என்று எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன், இதற்கிடையில் எழுத்தாளர் சி. மோகன் அவர்கள் இலவசமாக கொடுத்த ஜி.நாகராஜன் எழுத்தும் வாழ்வும் நூலினை வாசிக்க நேர்ந்தது. இந்த நூலினை வாசித்த பிறகு எனக்கு "நாளை மற்றுமொரு நாளே.." நூலினை வாசிக்கும் ஆர்வம் தூண்டிகொண்டே இருந்தது. ஒரு வழியாக தற்போது இரண்டு நாட்களில் வாசித்து முடித்துவிட்டேன்.

நூலாசிரியர் ஜி. நாகராஜன் அவர்களை பற்றி எழுத்தாளர் சி.மோகன் அவர்களின் நூலிலிருந்து முழு விவரமும் தெரிந்துகொண்டேன், மிக எளிமையாகவும் தெளிவாக விவரித்துள்ளார். ஜி.நாகராஜன் நூல்கள் அவரின் காலத்தில் அத்தனை வரவேற்பகவில்லை இருந்தாலும் அவர் மறைந்த பிறகு அவரின் நூல்கள் பல்வேறு தளங்களில் சிறப்பாக பேசப்படுகிறது. ஏன் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளிலும் மொழிப் பெயர்க்கப்பட்டுள்ளது. அவர் மண்ணை விட்டு மறைந்தாலும் அவரின் எழுத்துக்கள் இவ்வுலகில் நீண்டு நிலைபெற்றுள்ளது தான்.

இவரின் கதைக்களம் ஒரு வித்தியாசமானதாகவே இருக்கிறது. எல்லோரும் எழுத்துக்களில் கொண்டுவர நினைக்காத ஒரு தளத்தில் இவர் கதையினை கொண்டு செல்கிறார்.

குறிப்பாக ஆசிரியர் கீழ்வரும் ஒரு நிலையினை சொல்லித்தான் இந்த கதையினை நம்மிடம் சொல்கிறார்..... 

"இது ஒரு மனிதனின் ஒரு நாளைய வாழ்க்கை. 

நீங்கள் துணிந்திருந்தால் செய்திருக்கக்கூடிய சின்னத்தனங்கள், 

நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தால் காட்டியிருக்கக்கூடிய துணிச்சல், 

விரும்பியிருந்தால் பெற்றிருக்கக்கூடிய நோய்கள், 

பட்டுக்கொண்டிருந்தால் அடைந்திருக்கக்கூடிய அவமானம், 

இவையே அவன் வாழ்க்கை. 

அவனது அடுத்த நாளைப்பற்றி 

நாம் தெரிந்துகொள்ள வேண்டாம்; 

ஏனெனில் அவனுக்கும் - நம்மில் பலருக்குப்போலவே - 

நாளை மற்றுமொரு நாளே"


இவர் தனது கதையின் மாந்தர்களை அறிமுகப்படுத்தும் பொழுது அவர்களுக்கே என ஒரு சிறு கதையினை சொல்லியே அங்கு வரவழைக்கிறார், இந்த நடை மிகவும் ரசிக்கவும் ஆர்வமுடன் வாசிக்கவும் தூண்டுகிறது.

கதையின் பிரதான நாயகன் கந்தன், நாயகி மீனா என இவர்கள் இருவரையும் மிக அழகாக கட்சி படுத்தியிருக்கிறார். கதை ஆரம்பிக்கும் முதல் சில வரிகளிலேயே கந்தனின் முழு நிலவரத்தை அழகாக அறிமுக படுத்தியிருக்கிறார். அதுபோலவே மீனா கதைக்குள் வரும் நிகழ்வு அவளை கந்தன் சந்திக்கும் தருணம் ,மேலும் அவன் அவளை மணந்து கொள்ள நினைக்கும் விரதம் அதற்காக அவன் கொடுக்கும் விலை என இந்த கதையின் போக்கு ஒரு எதார்த்தவாதியின் குரலாகவே செல்கிறது.

கந்தன் மீனாவை கல்யாணம் செய்துகொள்ள விரும்புவதும் ஆனால் மீனாவோ ஒரு விலைப்பெண் என்பதால் அவன் தரகர் சோலையிடம் போய் பேசுகிறான் அப்போது அறிமுகமாகும் சோலைக்கு ஒரு சிறுகதை சொல்லும் ஆசிரியர் அற்புதமாக அந்த பாத்திரத்தை அறிமுகப்படுகிறார்.   

மீனா வீட்டில் இல்லாத பொழுது வலியனே வந்து கந்தனிடம் வம்புயிழுக்கும் ராக்காயின் கதையாகட்டும் அதிலும் ராக்காயி கந்தனிடம் உரையாடும் வார்த்தை ஜாலங்கள் அவளும் ஒரு விலைமகள் தான் என்றாலும் கந்தன் காட்டும் கனிவும் அவன் தன் நண்பனின் ஆள் நீ என்று சொல்வதும் மட்டுமல்லாமல் குடிப்பதற்க்காக மீனாவின் பெட்டியை அலசிப்பார்க்கும் கந்தனிடம் வம்புயிழுத்துவிட்டு இறுதியில் அவளே போய் அவனுக்கு சரக்கு வாங்கி கொண்டு கொடுப்பதும் நிகழ்வுகள் அபரிமாதானது.

ஒருமுறை இட்லிக்கடை யில் வேலை செய்துக்கொண்டிருக்கும் மீனாவை கூட்டிட்டு வர சொல்ல கந்தன் தனது பக்கத்துவீட்டு "ஜீவா" என்ற குட்டி பெண்ணை அழைக்கிறான். அவள் வந்து போகும் அந்த தருணத்தில் ஜீவாவின் கடந்த கால வாழ்க்கை கதையினை சொல்லும் விதம் அருமையாக இருந்தது. அவளுக்கு ஏற்பட்ட ஒரு வினோதமான நோய் அதனிலிருந்து குணமடைய தெரிந்தவர்கள் வழியாக கந்தன் செய்யாத உதவி அதற்க்கு பிறகு அவள் இப்போது நல்லாயிருக்கிறாள் எனபது வரை அழகாக செல்கிறது ஜீவா என்ற குட்டிதேவதையின் கதை.

ஒரு நிகழ்வில் அறிமுகமாகும் சலூன் கடையும் அந்த கடையினை விவரிக்கும்போது ஓவ்வொரு வார்த்தையும் அழகாக கொடுத்திருக்கிறார். ஒரு இளைஞன் சலூன் கடைக்காரரிடம் அங்கு இருக்கும் ஓவியத்தை பற்றி கேட்பதும் அதற்க்கு அவர் சொல்லும் பதில் யதார்த்தத்தின் அழகு.

அன்று காலையில் வீட்டிலிருந்து எழுந்து  வெளியில் செல்லும் கந்தனின் இந்த நாள் அவன் சந்திக்கும் முழு நிகழ்வுகளும் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து வருகிறது. இந்த நாள் போனாலும் அவன் அனுபவித்த அத்தனையும் நம்மில் பலர் வெவ்வேறான சமயத்தில் சந்திருக்கும் பிரச்சினைகளே என நம்பி தான் ஆகவேண்டும்.

கந்தன் சந்திக்கும், விறகுக்கடை சிறுவன், அங்கிருந்து புறப்பட்டு போகும் வழியில் காத்திருக்கும் தினக்கூலி மக்கள் கூட்டம் அந்த கூட்டத்தில் இருந்த ஒரு பெரியவருக்கும் மற்றொரு  சிறுமிக்கும் வேலையில்லை என்று சொல்லிவிட்டு மற்றவர்களை அழைத்து செல்லும் தலைவர் அங்கே அந்த சிறுமி கர்ப்பமாக இருப்பதை கண்ட கந்தன் அவளிடம் ஏன் பாதுகாப்பாக இருந்துருக்கலாமே என்று சொல்லி ஒரு மருத்துவரின் விலாசமும் கொடுப்பது என அவனின் சமுதாய அக்கறை காட்டுகிறது. 

நண்பனின் காதலை சேர்த்து வைக்க வரும் கந்தன் அவனையும்  அவன் ஒருதலையாக காதலித்த விதவை பெண்ணையும் சேர்த்து வைத்துவிட்டு அருகில் இருக்கும் விடுதிக்கு செல்கிறான். அந்த தேவி லாட்ஜ், அதன் வரலாறு என கதை மிகவும் தெளிவாக நாட்டு நடப்பில் எப்படி கோவில் நிலம் கையகப்படுத்தப்பட்டது அதை எவ்வாறு பராமரிக்கிறார்கள் என்றும் புனிதமான கோவில் இடத்தில இருக்கும் லாட்ஜ் எவ்வாறெல்லாம் இருக்கிறது என்பதை சொல்லுவதாகட்டும் அதற்காக கந்தன் வந்து பஞ்சாயத்து செய்துவைத்து என அது ஒரு நீண்ட கதை. 

தேவி லாட்ஜ்ல் நடக்கும் ஒரு உரையாடலில் பேசப்படும் அரசியலும், சோஷலிசமும் ஜி நாகராஜனின் சிந்தனையினை மிக தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறார்.ஒரு கிலோ சீனி தயாரிக்கும் செலவுக்கும் அது வந்து நுகர்வோரை சேரும்போது இருக்கும் விலைக்கும் இருக்கும் லாபம் உற்பத்தியாளருக்கு போகிறது இது கொள்ளை அடிப்பது போல் இல்லையா? என தனது கேள்வியினை சொல்லிச்செல்கிறார்.  

திருவாளத்தான் கந்தன் என்ற ஒரு பாத்திரம் அவனுடைய அறிமுகம் வழக்கம் போல ஒரு துணை கதையினுடே வருகிற்து. 

ஜி. நாகராஜனின் சமுதாய அக்கறை கதையில் சிதறிக்கிடக்கிறது. இந்த கதையின் தளமும் பாத்திரங்களும் பெரும்பாலும் விலைமாதர்களை பின்பலமாக வைத்தே நகர்கிறது ஆனாலும் ஆசிரியர் அவர்கள் ஒரு இடத்தில கூட விபசாரம் என்ற வார்த்தையினை உபயோகப்படுத்தாமல் மிக அழகாக அவர்களையும் கதை மாந்தர்களாக சித்ரரித்து இருப்பது பெருமையான விஷயமே.

சாராயக்கடை, அதில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகையை மையமாக வைத்து நடந்த ஒரு நிகழ்வு அதற்க்கு பிறகு இப்போது இருக்கும் பதாகை மாறியிருக்கும் தோற்றம் என கதையின் நாயகன் கந்தன் செல்லும் இடமெல்லாம் அவன் பதித்த தடங்கள் இல்லாமல் இல்லை என்று தான் சொல்லவேண்டும். சாராய கடையின் கூடவே இருக்கும் சால்னா கடை என விவரிக்கும் விதம் அருமை. 

வண்டியில் செல்லும் போது பேசப்படும் கதை சாதாரணமாக தோன்றினாலும் சொத்துக்கு ஆசைப்பட்டு ஒரு குழந்தைக்கு விஷம் கொடுப்பது என மக்களின் கொடூரமான சில அவதாரங்கள் இருப்பதையும் சொல்லியிருக்கிறார்.

நாவலாசிரியர் சி. மோகன் அவர்கள் சொல்லியிருப்பார் ஜி நாகராஜன் அவர்களின் உணவுப்பழக்கங்கள் பற்றி , அது போலவே தான் இந்த கதையிலும் வருகிற ஷேக் ராவுத்தர் கடை பரோட்டா பற்றி பேசும்போது அவருடைய உணவின் மீதிருந்த எண்ணங்களை தெளிவாக சொல்லியிருக்கிறார்.

சுப்பய்யா செட்டியார் என்ற ஒரு கதா பாத்திரம் அவருக்கு என்று ஒரு கதை,  அவருக்கு இங்கிலீஸ் காய்கறிகள் மீதுகொண்ட ஆர்வம் மட்டுமல்லாம் அவரின் சில ஆசைகள் அதனால் அவருக்கு ஏற்படும் இன்னல்கள் பிறகு அங்கு பஞ்சாயத்திற்கு வருவது நமது நாயகன் கந்தன் தான்.     

கந்தன், தான் ஆசைப்பட்டு கட்டிக்கொண்ட மீனாவிற்கு எதாவது ஒரு நல்ல இடத்தில தோது பன்னிவிடலாம் என்று தரகரை அணுகும் கந்தன்.... என்னவென்று சொல்லுவது. தரகர் சொல்லாமல் சொல்லும் விதமே கந்தனுக்கு தெரிந்து கொண்டு மீண்டும் நடக்கிறான். இந்த நடையின் பொது நிகழும் ஒரு கொலை அதுவும் இவனே நீண்ட நாளாக செய்ய துடித்த அதே மனிதன் கொலையாகி கிடக்கிறான்.

இப்படியாக பயணிக்கும் இந்த கதையும் நாயகனும் இறுதியில் இருப்பது சிறையில் ...

எதார்த்தமான மனிதனின் வாழ்வியலை, எல்லோரும் ஆசையாக நினைக்கும், மறைமுகமாக செய்யும், அல்லது செய்ய ஆசைப்படும் விஷயங்களாகட்டும் என எல்லாவற்றையும் ஒளிவு மறைவு என்று  மறைமுகமாக சொல்லாமலே மிக தெளிவான ஓடையில் ஓடும் தெளிந்த தண்ணீரை போல கதையினை சொல்லிச்செல்கிறார் ஆசிரியர்.

வாழ்வின் விளிம்பில் இருக்கும் மனிதர்களை பற்றிய அழகான மற்றும் ஆழமான உயிருள்ள ஒரு கதை இந்த "நாளை மற்றொமொரு நாளே!...


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

23 ஜூன் 2021    

               


Sunday, 20 June 2021

தந்தையர் தின வாழ்த்துகள்



 அகிலமும் அடங்கும் அப்பா என்ற ஒற்றை வார்த்தைக்கு 

அப்பா கூட இருந்தால் !!!

ஆயிரத்திற்கு மேல்  வழி கிடைக்கும்! 

இயலாது என்பதே இல்லாமல் போகும்!

ஈகையின் அர்த்தம் புரியும்

உலகமாக   உனக்கு இருப்பவர் 

ஊர்களில் உனக்கு அடையாளம் 

என்றும் பக்க பலமாய் இருப்பவர் 

ஏணிப்படியாய் ஏற்றிவிட்டவர் அப்பா

ஐயம் கொள்ளாமல் பார்த்துக்கொண்டவர் அப்பா

ஒழுக்கம் கற்றுக்கொடுத்தவர் அப்பா

ஓர் யுகமானாலும் மாறாது  அப்பா கொடுத்த முகவரி

.....
ஓய்வின்றி உனக்காக உழைப்பவர் அப்பா  

அன்புடன் 

இவன் 

தேவேந்திரன் ராமையன் 

Friday, 18 June 2021

இருளர்கள் : ஓர் அறிமுகம் - வாசிப்பு அனுபவம்

இருளர்கள் : ஓர் அறிமுகம்

ஆசிரியர் : க. குணசேகரன்  

கிழக்கு பதிப்பகம் - விலை ரூபாய் 102

கிண்டில் பதிப்பு - விலை ரூபாய் 84
பக்கங்கள் 128


"இருளர்கள் ஓர் அறிமுகம்" என்ற இந்த புத்தகத்தினை நான் ஒரு வருடத்திற்கு முன்பே அமேசானில் வாங்கிவைத்திருந்தேன். ஒவ்வொருமுறையும் வாசிக்கலாம் என ஆரம்பிக்கும் போதெல்லாம் வேறேதாவது ஒரு புத்தகம் முந்திக்கொண்டு வாசிக்க தூண்டிவிடும்.  இன்று ஒரு மாறுதலுக்கு இருளர்களை பற்றி வாசிக்கலாம் என எடுத்து இரண்டே நாட்களில் வாசித்து முடித்துவிட்டேன். இந்த நூல் இருளர்களை பற்றிய ஒரு அறிமுகம் என்று தான் தலைப்பு இடப்பட்டிருக்கிறது ஆனால் முழுமையாக இருளர்களின் தோற்றம் முதல் நிகழ்கால வாழ்க்கை  வரை அவர்களின் வாழ்வியல் முறைகள் மற்றும் அவர்களின் வரலாறுகள் என மிக அழகாகவும் தெளிவாகவும் கொடுத்துள்ளார் ஆசிரியர்.

ஆசிரியர் "க. குணசேகரன்", 30 ஆண்டுகளுக்கு மேலாக  வானொலி, தொலைக்காட்சி, மற்றும் பத்திரிகைகளில் பணியாற்றியிருக்கிறார் மற்றும் இவரது எழுத்துக்கள் பெரும்பாலன முன்னணி இதழ்களில் வெளிவந்துள்ளது. தொடர்ந்து சமுகம், கல்வி மற்றும் வரலாறு போன்ற துறைகளில் ஆராய்ச்சியும்  செய்துகொண்டிருக்கிறார்.     

இருளர்கள் இனத்தின் உறவுகள் உலகெங்கும் பரவியிருக்கிறது, தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கர்நாடகம் , கொங்கணப்பகுதிகளில் பரவி வாழும் பல்வேறு இனக்குழுக்கள் மட்டுமல்லாமல் இந்தோனேசியா, பிலிபைன்ஸ் தீவுகள், ஆஸ்திரேலிய, பாப்புவா நியு கினியா, தாய்லாந்து, மலேசியா என இவர்கள் உலகெங்கிலும் பரவி பல்வேறு இனமாக வாழ்கின்றனர் என்று கூறுகிறார் ஆசிரியர்.
          
இருளர்கள்மட்டுமல்ல பதினெட்டு விதமான குடிமக்கள் வாழ்ந்ததாக கல்வெட்டுகள் குறிப்பிடுவதாகவும் அதன்படி சேரர், சோழர், பாண்டியர், ஒளியர், நாகர், பல்லவர், கொங்கர், துறவர், கார்காத்தார், தொண்டை நாட்டார், குறவர், ஆயர், வேடர், பரதவர், மருதநில மள்ளர், கள்ளர், மறவர் மற்றும் அகப்படியார் என இருந்ததாகவும் அவற்றில் இருளர் இனமும் ஒரு வகையான மக்கள் அவர்கள்  நீலகிரி மலைத்தொடரிலும், கூடலூர், கோவை மலைப்பகுதிகள் மற்றும் திருச்சி என பல்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தனர் என பல்வேறு ஆதாரங்கள் கூறுகிறது என்று சொல்கிறார்.

இந்திய பழங்குடியினரில் இருளர்கள் தனித்துவம் பெற்றவர்கள். இருளர்கள், காலத்தின் சூழ்நிலைகளாலும்  ஏனைய மக்களின் சுயநலம் பெருகி போனதாலும் நாகரிக மோகத்தினாலும்  மக்கள் இருளர்களை இருட்டடிப்பு செய்துவிட்டனர்.

தனியாக பந்திப்பூர் காட்டுப்பகுதியில் பிரவேசிக்கும் கோபால் ராவ், எதிர்பாராமல் ஒரு தருணத்தில்  சந்திக்கும் இருளர்கள், கொஞ்சம் கீழே போயிருந்தால் கருநாகத்தின் விஷம் உன்மீது ஏறியிருக்கும் என்றபோது படபடத்து போகும் கோபால் ராவ், தொடர்ந்து  அவர்கள் வேட்டையாடும் முறைகள் அந்த அடர்ந்த வனத்தில் கருநாகம் ஒன்றை பிடித்து கொண்டுவந்ததும், முள்ளம்பன்றியை வேட்டையாடியதையும் பிறகு தரையின் மீதுள்ள பாம்பின் தடத்தை வைத்துக்கொண்டு அது என்ன வகை பாம்பு என்பதை சொல்லும் திறமையும்   மற்றும் அவர்கள் வாழும் இருப்பிடம் சென்று அங்கே ஒரு நாள் இரவு தங்கி அவர்களின் உணவுமுறை மற்றும் பழக்கங்கள் விருதோம்பல் மற்றும் அவர்களின் அறிய மருத்துவகுணங்கள் என மிக தெளிவாகவும் ஒரு பயணத்தின் வழியே சொல்லியிருக்கிறார். இருளர்கள் இன்றளவும் வாழும் முறைகளை எடுத்து சொல்லுவது ஒரு வியப்பாகவும் சுவாரஷ்யம் கலந்ததாகவும் இருக்கிறது.

இருளர்களுக்கு தொடக்க காலத்தில் இருளர்கள் என்ற பெயர் இருந்திருக்கவில்லை ஆனால் காலப்போக்கில் அவர்கள் இருந்த அடர்ந்த வனங்கள் மற்றும் காடுகளை சார்ந்த இடங்களில் வாழ ஆரம்பித்ததால் இருளர்கள் என அழைக்கப்பட்டார்கள் என்கிறார்.

பாம்புகளின் வகைகள் மற்றும் அவற்றின் விச தன்மை என இவர்கள் அறிந்துவைத்திருக்கும் நுட்ப்பமான அறிவு உண்மையில் வியக்க வைக்கின்றது. பெரும்பாலும் ஆராய்ச்சியாளராகள் முதலில் நாடுவது இருளர்களையே ஏனெனில் இருளர்களிடம் இருந்து பாம்புகளை பற்றிய விவரங்களை பெற்றுக்கொண்டு வெளியுலகில் ஆராச்சியாளர்கள் நாங்கள் தான் இவற்றை எல்லாம் கண்டுபிடித்து அறிந்து கொண்டோம் என்று எல்லா பெருமையையும் இவர்களே  பெயர்வாங்கி கொள்கிறார்கள் முக்கிய காரணமாக இருக்கும் இருளர்கள் இருட்டடிப்பு செய்யப்படுகிறார்கள் அவர்களின் அறிவு சுரண்டப்படுகிறது.

இருளர்கள் தாய் வழி சமுத்தினை பெரும்பாலும் பின்பற்றுகிண்டனர். கன்னி தெய்வம் தான் இவர்களின் பிரதான தெய்வம், இவர்களின் கன்னி தெய்வம் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றது. குறிப்பாக சொல்லலாம் என்றால், எல்லையம்மன், வாட்படையாள், வனதேவதை மற்றும் பகவதி மேலும் பல பெயர்களை கொண்டு வழிபடுகின்றனர்.

இருளகர் இசையினை மிகவும் விரும்புவதும் அவர்களின் எல்லா விதமான கொண்டாட்டங்கள், வழிபாடு, விழாக்கள் என எங்கும் இசை நிறைந்தியிருக்கும் அதுவும் பாணர்களின் பாடல்களையே மிகவும் விரும்பி இசைத்து கொண்டிருக்கின்றனர். பாணர்களை பற்றிய அதிகமான அறிய தகவல்களை  ஆசிரியர் இந்த நூலின் வழியே கொடுத்திருக்கிறார். 

இருளர்கள் பெண்களுக்கு அதிக முக்கியயத்துவம் கொடுத்தார்கள் என்றும் வீட்டின் பெண்ணை முதன்மை படுத்தி தெய்வத்திற்கு இணையாக நடத்தினார்கள் என்றும் அவர்களின் சமூகத்தில் நடக்கும் எல்லா விதமான சடங்குளையும் பெண்களே முன்னின்று நடத்துகிறார்கள் என்றும் முக்கிய தகவல்களை சொல்லாமல் இல்லை.

இருளர்கள் பெண்களுக்கு, தங்கள் வாழ்க்கை  துணையினை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் கொடுத்துள்ளார்கள். இவர்களின் திருமண முறையில் தாய் மாமனுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள். அதேபோல பெண்களுக்கு மறுமணம் செய்துகொள்ளும் உரிமையும்  இருந்தது அதன் படி பெண் விதவையாகிப்போனால் அவளுக்கு மறுமணம் செய்துவைக்கின்றனர்.

இருளர்கள் பெண்களை பயிர் செய்யும் நிலத்திற்கு சமமாக மதிக்கின்றனர். பெண்கள் நிலம் போல தங்களது சங்கதியினை பெருக்கும் ஆற்றல் படைத்தவர்கள் என்பதுதான் இதன் பின் உள்ள உண்மை.  பெண்கள் நிலத்தை விட ஒருபடி மேலாகவும்  பெரிதாகவும்   அவர்களை தாவரங்களுடன் ஒப்பிட்டு பார்க்கின்றனர். தாவரங்கள் போல பூ பூத்து, காய் காய்த்து, கனிந்து வருவதைப்போல ஒரு பெண்ணும் சங்கதிகளை ஈன்று எடுக்கின்றாள்  எடுத்து சங்கதியினரை வளர்கிறாள்  அதனால் இவர்கள் பெண்களை புனிதமாக பார்க்கின்றனர்.   

இருளர்கள் அதிக பக்தி கொண்டவர்கள், ஆனால் இவர்களின் வாழ்வியல் முறை எப்போது ஒரே இடத்தில நிரந்தரமாக வாழ முடியாது காலநிலை, உணவு கிடைக்கும் முறை என வாழ்வாதாரம்  தேடி அலைந்து கிடைக்கும் இடத்தில கொஞ்சம் காலம் வாழ்வார்கள் அதற்காக அவர்கள் தங்களின் தேவைக்காகவும் இறைவனை வழிபட ஏழு செங்கல்கள் வைத்து கன்னியம்மன் கோவிலினை உண்டுபண்ணுவார்கள், இந்த வழிமுறைகள் இன்றளவும் பெரும்பாலான கிராமங்களில் நடக்கிறது.  வேப்பமரத்தின் அடியில் கன்னி அம்மன் இருப்பதாக இருளர்கள் நம்புகின்றார்கள்.

பொதுவாக இவர்களின் வாழ்க்கை முறை பெரும்பாலும் காடுகள் இருக்கும் இடத்தை சுற்றியே இருக்கிறது. இவர்கள் சிறுவயதுமுதிலே சின்ன சின்ன வேட்டைகள் செய்து உணவுகளை சேகரிக்கின்றனர். பெரும்பாலும் இவர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு படிக்க அனுப்புவதில்லை அதில் அத்தனை ஆர்வமில்லை என்றே சொல்லாலம்.  

இருளர்களின் வாழ்வில் ஒரு விடியல் வராதா? என்ற கேள்விகளுக்கு இன்னும் உலக அளவில் விடை கிடைக்காமலே இருக்கிறது.    

இருளர்களும் நம்மை போன்ற சக மனிதர்கள் தானே! ஆனால் நமக்கும் நமது சங்கதிகளுக்கும் கிடைக்கும் கல்வி இன்னும் ஏன் அவர்களுக்கு போய் சேரவில்லை?. அப்படி கிடைத்தாலும் அவர்கள் தொடர்ந்து மேற்படிப்புக்கு முன்னேற "சாதி "  சான்றிதழ் தேவைப்படுகிறது. இன்றைய சூழ்நிலையில் அவ்வாறான சான்றிதழ் வாங்குவது எவ்வளவு கடினமான வேலை , எத்தனை முறைகள் இழுக்கடிப்பவார்கள் இதெல்லாம் நாமும் தெரிந்த உண்மையே.

இதனாலே அவர்கள் தங்கள் சமுதாயத்தில் மேல்படிப்பு போவது ஒரு குதிரை கொம்பாவே இருக்கிறது எனறால் அதில் தவறேதுமில்லை என்றே சொல்லலாம்.

இந்த நூலின் வழியே ஒரு சமூகத்தின் வாழ்வியல் முறைகளும் அவர்களின் தோற்றமும் இன்றைய நிலையையும் மிக பயனுள்ளதாக அறிந்து கொள்ளமுடிந்தது.

ஆர்வமுள்ளவர்கள் தவறாமல் வாசித்து பாருங்களேன் எண்ணற்ற தவகல்களை உள்ளடக்கி இருக்கிறது இந்த "இருளர்கள் - ஓர் அறிமுகம்.  

அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 
18 ஜூன் 2021        
        
      

Tuesday, 15 June 2021

கானகத்தின் குரல் - வாசிப்பு அனுபவம்

 கானகத்தின் குரல்

(ஒரு நாயின் வாழ்க்கை கதை )

ஆசிரியர் - ஜாக் லண்டன்

தமிழி்ல் - பெ. தூரன்

பக்கங்கள் 187




அமெரிக்காவின் ஆகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான "ஜாக் லண்டன்". அவருடைய படைப்பான ‘கானகத்தின் குரல்’ அவரின் புகழைப் பலமடங்காக பெருக்கி அவரின் நிலையை உறுதிப்படுத்தியது. ஆமாம் இது வசதியாக வாழ்ந்து ஒரு துரோகியினால் வஞ்சிக்கப்பட்டு பல இன்னல்களை எதிர்கொண்ட "பக்" என்ற ஒரு நாய் அதன் வாழ்வினை மையமாக வைத்துப் புனையப்பட்ட நாவல் தான் இந்த கானகத்தின் குரல். ஆனால் படித்து முடித்ததும் மிருகங்களை போல நடத்தும் மனித வாழ்க்கையின் அர்த்தத்தைப் பற்றிய கேள்விகளே மேலோங்கியிருக்கிறது.

"கானகத்தின் குரல்" - தன்னலம் பெருகிப் போன மனித குலத்தின் வன்மம் எப்படி ஒரு நாயின் வாழ்க்கையினை புரட்டிப் போடுகிறது என்பதை உற்சாகத்துடன் அடுத்து அடுத்து என்ன என்று எதிர்பார்க்க வைக்கும் நோக்கத்துடன் உருவாக்கியிருக்கிறார் ஜாக் லண்டன்.

தமிழில் இந்த நாவலைக் கிட்டத்தட்ட நாற்பதாண்டுகளுக்கு முன்னர் மொழிபெயர்த்தவர் பெ. தூரன். ஆங்கிலத்தில் இருக்கும் அதே விறுவிறுப்புடனும் எதிர்பார்ப்புடனும் கதையின் போக்கினை மாற்றாமல் செய்த மொழிபெயர்ப்பைப் படிக்க ஆர்வம் தூண்டுகிறது.
ஒரு நீதிபதியின் வீட்டில் சொகுசாக வாழ்ந்துகொண்டிருக்கும் "பக்" என்ற செல்ல நாய், எல்லாவற்றிலும் சிறந்து விளங்குகிறது. அப்படிப்பட்ட அந்த நாய், ஒருநாள் வீட்டில் யாரும் இல்லாத பொழுது அவர்களின் வீட்டின் வேலைக்காரன் திருடி காசுக்காக வேறொருவரிடம் விற்றுவிடுவதால் அதன் வாழ்க்கையே மாறிவிடுகிறது.

திடீரென யாரோ முகம்தெரியாத ஒருவன் தன்னை கடத்திகொண்டுபோவது தெரிந்தும் ஏதும் செய்யமுடியாமல், அந்த நேரத்தில் திக்கு தெரியாமல் தொலை தூரம் பயணிக்க வேண்டிய சூழல் அந்த "பக்" கிற்கு உண்டானது இவ்வளவும் ஒரு மனிதன் தன சுயநலத்திற்க்காக செய்த துரோகமே காரணம்.

அந்த கடுமையான பயணத்தின் போது "பக்" பட்ட இன்னல்களை வாசிக்கும் போதே கண் கலங்குகிறது. பாவம் அந்த வாயில்லா ஜீவன் என்ன பாவம் செய்தது. அதுவும் ஒரு சக உயிர்தானே ஏன் மனிதன் இதனை இத்தனை கொடுமை செய்கிறான்?. அதை விலை கொடுத்து வாங்குவரெல்லாம் அடித்து துவம்சம் செய்வது அதை அடிமையாக வைத்துக்கொள்ள முனைவதும் கொடுமையிலும் கொடுமை தான்.

மாறி மாறி இடைவிடாமல் ஏற்பட்ட தொலைதூரப் பயணத்தின் இறுதியாக ஒரு சிகப்பு சட்டைக் காரனிடம் வந்து சேர்கிறது. தனக்கு ஏற்பட்ட எல்லா கொடுமைகளுக்கும் திரும்பி கொடுக்க வேண்டிய அந்த தருணத்திற்க்காக காத்துக்கொண்டிருந்தது பக். அதற்க்கான சந்தர்ப்பம் இறுதியில் இந்த சிகப்பு சட்டைக்காரனால் கிடைத்தது, அது தனது எல்லையில்லா கோபத்தினை வெளிக்கொணர நினைக்கும் போது எதிராளியின் நீண்ட தடியினால் கொடுத்த அடி அதை நிலைதடுமாற வைத்தது. தான் உயிர் வாழ வேண்டுமெனில் இவனிடம் அடங்கிப் போக வேண்டும் என்பதை உணர்ந்த பக் சமத்தாக நடக்கிறது.

அமெரிக்காவின் பனிப் பிரதேசத்தில் தபால் கொண்டு செல்ல பயன்படுத்தும் வண்டிகளை இழுத்துச் செல்வதற்கு நாய்கள் பயன்படுத்துவார்கள், அங்கே தான் நமது பக்கும் கடைசியாகச் சேருகிறது. இங்கு ஏற்படும் இனச்சண்டை, உணவுக்கு ஏற்படும் சண்டை என ஏராளமான போட்டிகளை எதிர்கொண்டு வாழப் பழகிகொண்டது பக். இருந்தாலும் நான் தான் முதலிடம் வரவேண்டும் என்ற எண்ணம் பக்கின் மனசில் எப்போதும் இருந்து கொண்டே இருந்தது அதற்காக அதை அடைய வேண்டிய எல்லா முயற்சிகளும் அது எடுத்தது அதை அடைந்தும் காட்டியது.

இயற்கையும் காலமும் செய்த சூழ்சியினினால், "பக்" வேறொருவருடம் கை மாற வேண்டிவந்தது, இந்த முறை ஒரு முட்டாள் கூட்டத்தில் சேருகிறது, அவர்களிடம் பக் பெரும் துயரம் மிகவும் அதிகம். அப்படிப்பட்ட முட்டாள்கள் கூட பயணிக்கும் போது ஏற்படவிருக்கும் விபத்தினை முன்கூட்டியே அறிந்திருந்த பக் அந்த வழியில் பயணிக்க மறுத்து நின்றது அதற்கு அந்த மனிதன் கொடுமைப் படுத்தினான் அந்த நேரம் ஒருவன் வந்து பக் ஏற்பட்ட கொடுமையிலிருந்து காப்பாற்றினான். அது நாள் முதல் அவன் தான் அதன் எஜமானன்.
பக், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் அதற்கு உணவு கொடுத்து ஆதரவு கொடுத்துக் காப்பாற்றியதற்காக அவனுக்கு விசுவாசமாக இருந்தது. அவனை இருமுறை ஆபத்திலிருந்து காப்பாற்றியது. அவன்கூடவே வெகு தூரம் பயணப்படுகிறது. இடையே வெகுவான சன்மானம் வென்று கொடுத்தது. தங்க வேட்டைக்குப் போன எஜமானன் கூடவே அது பயணித்தது.
மனிதர்களிடமே வாழ்ந்து பழகிப்போன "பக்" தான் தற்போது இருக்கும் அந்த கானகத்தில் புதுமையாக ஒரு ஓநாயின் ஊளை கேட்டு அதை தொடர்ந்து பயணப்படுகிறது. நீண்ட பயணத்திற்கு பிறகு மீண்டும் தன் எஜமானை தேடி திரும்பி வந்துவிட்டது. மீன்டும் கானகத்திற்க்கு சென்றது ஆனால் இந்த முறை 15 நாட்கள் கடந்தும் வரவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு திரும்பியது ஆனால் இறுதியில் பக்குக்கு ஏற்பட்டது வெறுமையே, தனது எஜமானன் இறந்துவிட்டான்.

கானகத்தின் திரும்பவும் அந்த குரல் கேட்ட பக் மீண்டும் கானகத்தின் உள்ளே பிரவேசித்தது. இந்த முறை அதன் வாழ்க்கை வாழுவதற்கு இந்த கானகம் தான் என்று முடிவெடுத்து நடக்க தொடங்குகிறது. அதைரியாமலே அதற்கு அதன் மூதாதையரின் மூர்க்க குணம் வந்துவிடுகிறது.

வேறுவழியில்லாமல் தனித்து விடப்பட்ட அந்த "பக்" தனது மூதாதையரின் மூர்க்க குணத்தோடு அந்த கானகத்தில் கம்பீரமாக வாழ தொடங்குகிறது.

இந்த கதை ஒரு நாயினை மையமாக வைத்து எழுதியது தான் என்றாலும் நமக்கு சொல்லிச்செல்லும் கதை "ஒரு வகையில் அடிமையாக இருக்கும் மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் அடிமையாகவே இருந்து தனது எஜமானருக்கு விசுவாசமாக அடிபணிந்தே வாழ்ந்து மடிகிறான்". இந்த கதையின் பக் போலவே..




அன்புடன்,
தேவேந்திரன் ராமையன்
15 ஜூன் 2021

Sunday, 13 June 2021

வாடிவாசல் (குறுநாவல்) - வாசிப்பு அனுபவம்

 வாடிவாசல் (குறுநாவல்)
ஆசிரியர் : சி.சு.செல்லப்பா
வெளியீடு: காலச்சுவடு
விலை: 100
பக்கங்கள்: 100




"வாடிவாசல்" இந்த குறுநாவல் நமது பாரம்பரியத்தின் அடையாளமாகவும் நம் பண்டைய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பற்றியும் ஆசிரியர் "சி. சு. செல்லப்பா" அவர்களால் 1959 ல் எழுதப்பட்டது. இந்த "வாடிவாசல்" நமது தமிழ் பாரம்பரியத்தைப் பற்றி பதிவு செய்த ஒரு முக்கியமான படைப்பு. இதன் முதல் பதிப்பு விலை ரூ 1 ஆக வெளியிடப்பட்டது.

100 பக்கங்களைக் கொண்ட இந்த குறுநாவலினை, நான் வாசிக்கத் தொடங்கியதும் எங்குமே இடையில் நிறுத்த முடியாத அளவு கதையின் வேகம் கூடவே அழைத்து சென்றது. ஆம், உண்மைதான் வாசிக்கும் போது அந்த ஜல்லிக்கட்டு களத்திலே , எண்ணற்ற பார்வையாளர்கள் நிறைந்த அந்த கூட்டத்தில் ஒருவனாகவும், பிச்சி, மருதன் மற்றும் பாட்டையா வுடன் அருகில் அமர்ந்து கொண்டு நடைபெறும் ஜல்லிக்கட்டுக்களத்தில் இருப்பது போன்ற ஒரு உணர்வைக் கொடுக்கிறது என்றால் அதில் தவேறேது இல்லை என்றே சொல்லலாம் அந்த அளவுக்கு நம்மை வசீகரித்து கொண்டு நம்மை அந்த ஓட்டத்துடனே அழைத்து செல்கிறது ஒவ்வொரு வரிகளும்.

முக்கிய கதாபாத்திரங்களான பாட்டையாவுடனான பிச்சியின் மற்றும் மருதனின் உரையாடல்கள் பெரும்பாலும் இடம் பெறுகிற முக்கியமாக 50 பக்கங்களுக்கு மேலாக வருகிறது. இவர்களின் அந்த உணர்ச்சிபூர்வமான உரையாடல்களினை வாசிக்கும் போது நம்மை ஒவ்வோர் பாத்திரத்தின் பிரதியாகவே உணர வைக்கிறது ஆசிரியரின் எழுத்து.

ஆசிரியர் "சி.சு. செல்லப்பா" அவர்கள் பயன்படுத்தியிருக்கும் வட்டார வழக்குகள் அந்த கதையின் களத்திற்கும், கதையின் காலத்திற்க்கும் மேலும் கதையினை வாசிக்க தூண்டுவதற்கும் ஒரு மிக பெரிய பலமாக இருக்கிறது என்றால் அது மிகையாகாது.

ஆசிரியர் "சி.சு.செல்லப்பா" அவர்கள் ஆரம்பத்தில் பத்திரிக்கையில் பணி புரியும்போது ஜல்லிக்கட்டு புகைப்படம் எடுத்துகொண்டிருந்தார். அவருக்கு இந்த ஜல்லிக்கட்டு மேல் ஏற்பட்ட தீராத தாகத்தினால் பின்னர் அந்த கள நிலவரத்தையும், அதை தங்கள் கையில் வைத்துக்கொண்டிருந்த ஜமீன்கள் மற்றும் நிலப்பிரபுத்துவம் கொண்ட நிலப்பிரபுக்கள், ஆதிக்க சாதிகள், மற்றும் ஒரு ஆண்மகனுக்கே உரிய ஆண்மை மற்றும் வீரத்தின் மறு உருவாக இருக்கும் மனிதன் தனது வீரத்தை வெளிப்படுத்த இருக்கும் ஒரு களமாகவும் இருக்கும் இந்த ஜல்லிக்கட்டு பற்றி எழுத ஆரம்பித்தார் அதன் விளைவு தான் இந்த "வாடி வாசல்".

மனிதனும் மிருகமும் எனப் பிரிக்கமுடியாத வகையில் நாம் நமது பாரம்பரியத்தில் பிணைந்திருந்தாலும் கூட அதனை எந்தவகையிலும் பாதிக்காமல் நமது கிராமப்புற வாழ்க்கையில் இடம்பெற்றுள்ள "ஜல்லிக்கட்டு கலாச்சாரத்தின்" முக்கியத்துவத்தை மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்.

"மிருக-மனித போராட்டம்" என இருவருக்கும் ஜல்லிக்கட்டு ஒரு மிருகம் போன்ற உணர்வை காட்டிக்கொள்ளும் போது, தன தகப்பனை கிழித்து போட்ட “காளை காரி” யை தனது பலமும் வியூகமும் கொண்ட திறமையால் அடக்கும் "வீரன் பிச்சி" என விறுவிறுப்பாக நடக்கும் அந்த நிகழ்வினை நாம் வாசிக்கும் போது "அங்கே அந்த களத்தில் ஜமீன்தார் எப்படி தனது இருக்கையின் நுனியில் பரப்பரப்போடு" அமர்ந்து இருந்தாரோ அதைவிட பன்மடங்கு ஆவலுடன் அதே பரபரப்புடனும் வாசிக்கும் நாமும் இருக்கையின் முன்பகுதியில் ஒரு வகையான படபடப்புடன் வாசிக்கிறோம் என்றால் அது இந்த அற்புத எழுத்துகள் நம்முன் ஒரு வண்ணத்திரையில் காணொளி போலப் படமாக காட்டிச் செல்கிறது.

ஜமீன் தனது காளை தோற்றுவிட்டதால் அதனை கொடூரமாகக் கொலை செய்வதை வாசிக்கும் போது கண்களில் ஒரு ஓரம் கசிந்துகொண்டுதான் வாசிக்கமுடிந்தது.
தன் தகப்பனைக் கொன்ற “காரியை” வீழ்த்த வேண்டும் என்றே வீரத்துடன் வரும் “பிச்சி” அதில் வெற்றி கொள்ள வகுக்கும் யூகங்கள் ஏராளமானதுமட்டுமல்லாமல் மதி நுட்பம் மிகுந்தது.
இந்த உணர்ச்சி மிகுந்த இந்த காவியத்திற்கு மேலும் மெருகு சேர்ப்பது போல் “பெருமாள் முருகன்” அவர்களின் முன்னுரையே சொல்லிவிடுகிறது மொத்த கதையின் சாரத்தையும்.
இந்த கதை அரை நூற்றாண்டிற்கு முன் எழுதப்பட்டிருந்தாலும், அதே விறுவிறுப்புடன் இன்றும் வாசிப்பவர்களை இந்த இரண்டரை மணி நேரம் “வாடிவாசலில்” கைகளைக் கால்களில் கட்டிக்கொண்டு பரவசமாக வேடிக்கை பார்க்க வைக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது.

"உணர்ச்சி மிகுந்த ஒரு ஜல்லிக்கட்டு களத்திற்கு ஒரு சக பார்வையாளனாக நம்மை அழைத்து செல்வது உறுதியானதே!!!

தவறாமல் வாசித்து பாருங்கள் நீங்களும் அந்த உணர்வினை பெறுவீர்கள் என்பது உறுதி.

அன்புடன்,
தேவேந்திரன் ராமையன்
13 ஜூன் 2021

Saturday, 12 June 2021

கோபல்ல கிராமம் - வாசிப்பு அனுபவம்


 கோபல்ல கிராமம்

ஆசிரியர்: கி ராஜநாராயணன்

காலச்சுவடு பதிப்பு
விலை ரூபாய் 225

பக்கங்கள் 199




ஏன் கோபல்ல கிராமம் உருவானது என்றும் அதன் ஆக்கத்திற்கும் கட்டமைப்புக்கு பின்னால் வாழ்ந்த மக்களின் கதையையும் அந்த கிராமத்தின் மீது ஆட்சி செலுத்த வந்த ஆங்கிலேயர்கள் வரை கதை அழகாக பயணிக்கிறது. பல தலைமுறைகளை கடந்து செல்கிறது இந்த கோபல்லகிராமத்தின் வரலாறு.

ஆரம்பமே மிக அழகாக கவித்துமாக ஆரம்பிக்கிறது. அந்த கிராமம் துயிலில் இருந்து எழுவதை அவ்வளவு அழகாக வர்ணித்திருப்பது மிக அருமை. ஒரு கிராமத்தில் எத்தனை நிகழ்வுகள் அதிகாலையிலே நடக்கும் என்பதையும் அதுவும் "ஒட்டியிருந்த உடம்பை பிரித்துக்கொள்ளும்போது ஏற்படும் முனகலில்" என ஒரு கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் ஒரு சிறுமுனகளில் ஆரம்பித்து அதிகாலை அரங்கேறும் அத்தனையும் அறிமுகத்தில் அச்சு பிசறாமல் கொண்டுவந்திருக்கிறார்.

கோபல்ல கிராமத்தின் பெரிய வீடு "கோட்டையார் வீடு", அங்கே இப்போது வாழும் தலைமுறையிலிருந்து ஆரம்பித்து நம்மை பின்னோக்கி அழைத்து செல்கிறார். கோவிந்தப்ப நாயக்கர் மற்றும் அவரது சகோதரர்கள் வாழ்ந்த காலத்திற்க்கு செல்கிறது கதை. வாருங்கள் நாமும் பயணிப்போம் அந்த கதையின் காலத்திற்குள்.

கர்ப்பிணி பெண் தன் கணவனுடன் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேற நடக்கிறாள், கிடை அவிழ்த்து விடும் நேரம் ஆகிவிட்டது வெயில் உச்சிக்கு வந்து விட்டது அவள் நடந்துகொண்டே இருக்கிறாள், தாகம் தொண்டையை வரட்டுகிறது தண்ணீர் தேடி போகிறாள் அங்கே இருக்கும் ஊரணிக்கு சென்று தன் தாகம் தீர தண்ணீர் குடிக்கிறாள். அங்கு வரும் கள்வன் இவள் காதில் தொங்கும் பாம்படத்திற்க்காக தண்ணீருக்குள்ளே அழுத்தி கொன்றுவிடுகிறான் தான் சாகும் தருவாயில் தனது வாயால் அவனது கால் கட்டை விரலை கடித்துக்கொள்கிறாள், இந்த நிகழ்வு நமக்கு முதல் மரியாதை படத்தில் ஒரு காட்சியினை நினைவுக்கு கொண்டுவருகிறது.

எதேச்சையாக இங்கே வரும் கிருஷ்ணப்ப நாயக்கரும் பின்னர் தன் மனைவியை தேடிவரும் ஆசாரியாரும், ஒரு பெண்ணை காணும் என தேடுவதையும் கண்டுகொள்ளாமல் நிற்கிறான் அந்த கொலைகாரன் இறுதியில் அவன்தான் கொலைசெய்துவிட்டான் என்று தெரிந்துகொண்டு அவனை பிடித்து கிராமத்திற்கு அழைத்து செல்கிறார்கள். இவனுக்கு கொடுக்கும் தண்டணை ஆரம்பித்ற்குள் நம்மை பழைய தலைமுறைக்கு கூட்டிச்செல்கிறார். வாருங்கள் அங்கே போய்ப்பார்த்துவிட்டு பிறகு வந்து என்ன தண்டனை என்று பார்க்கலாம்.

கோவிந்தப்ப நாயக்கர், கிருஷன்ப்பா நாயக்கர், கோவப்ப நாயக்கர், ராமப்ப நாயக்கர், தாசப்ப நாயக்கர், சுந்தரப்ப நாயக்கர் இளையவர் கண்ணப்ப நாயக்கர் என ஏழு சகோதர்கள். பூட்டி மங்கயத்தாரு அம்மாள்.

மங்கயத்தாயாரு அம்மாள் தான் இப்போதைக்கு இருக்கும் வயது முதிர்ந்த பெண்மணி அதுவும் 137 வயதை கடந்து வாழும் ஒரு மனுஷி. இந்தஅம்மாள் தான் இங்குவரும்போது சிறுவயதில் இருந்தவர்.

மங்கயத்தாயாரு அம்மாள் வழியே நாம் இந்த கோபல்ல கிராமம் உருவான வரலாற்றினை அறிந்து கொள்வோம் வாங்க. மங்கயத்தாயாரு அம்மாவிற்கு எத்தனை அறிவுகள் அவள் ஒரு அறிவு களஞ்சியம்தான், அவளிக்குத்தான் எத்தனை அனுபவங்களும் சொல்லாத ரகசியங்களும்..

ஆந்திர தேசத்தில் இருந்து, முஸ்லீம் ராஜாக்களுக்கு பயந்துகொண்டு இங்கு பஞ்சம் பிழைக்க வந்தவர்கள். அபப்டித்தான் மங்கயத்தாயாரு அம்மாவின் ஒன்று விட்ட சகோதரி "சென்னாதேவி" அழகின் மருவுருவமே அவள்தான் அத்தனை அழகு. சென்னாதேவி அம்மனின் மரு உருவமென்றே சொல்லலாம் அப்படிதான் ஒருமுறை பல்லக்கில் திரும்பி வீட்டிற்கு வரும்போது கள்வர்கள் சிறைபிடித்து கொள்ளையடிக்கப்பார்த்தார்கள் ஆனால் நடந்தது வேற, சென்னாதேவி பல்லக்கை விட்டு வெளியே வந்ததும் அந்த தெய்வீக காட்சியினை பார்த்த "மல்லையா" என்ற பெரும் கொள்ளையன் மண்டியிட்டு வணங்கி தனது ஒரு வீரனை துணையாக காடு முடியும்வரை போய் விட்டு வரச்சொன்னான் என்றால் அவளது தெய்வீகமான முகமே காரணம். ஆனால் அந்த அழகே அவளுக்கு ஆபத்தாக வந்தது தான் கொடுமை.

சென்னாதேவி மீது ஆசைப்பட்ட துலுக்க ராஜா அவளை திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டு அதற்க்கான ஏற்பாடுகள் எல்லாம் நடந்தேறியது, வேறுவழியின்றி அப்பன் ஏழுமலையானை வேண்டிக்கொண்டு சம்மதிதார்கள் கடைசியில் எப்படியாவது தப்பித்துவந்தே ஆகவேண்டும் என்று அந்த அரண்மனையின் பக்கத்திலிருந்த அவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த குடில்களில் இருந்து தப்பித்து ஓடினார்கள். அவர்கள் தப்பித்து வரும்வழியில் எத்தனை அனுபவங்களும் அதிசயமானதும் மற்றும் அபூர்வமான சிலபல நிகழ்வுகள் நிகழ்ந்தது.

துலுக்க ராஜாவின் காவலாளிகள் குதிரையில் தொடர்ந்து வருவதை கண்டு முடித்த அளவுக்கு ஓடினார்கள் இறுதியில் கரைபுரண்டோடும் வெள்ளத்துடன் ஓர் நதி, இனிமேல் ஒன்னும் செய்யமுடியாது என்று நினைத்து துலுக்கர்களிடம் மாட்டிக்கொள்வதை விட வெள்ளத்தில் விழுந்து மடித்துபோகலாம் என்று முடிவெடுத்து விடுகிறார்கள் ஆனால் இங்குதான் அதிசயம் அக்கரையில் இருந்த அரசமரம் இக்கரைக்கு வளைந்து வந்து இவர்களை அக்கரைக்கு எடுத்து சென்றது. பின்னர் அவர்கள் போகும் வழியில் ஒருவர் கொட்டும் மழையிலும் வழியில் காத்துக்கொண்டிருக்கிறார், அவர் இவர்களை வரவேற்றுவிட்டு சொல்கிறார் நான் நேற்று ஓர் சொப்பனம் கண்டேன் அதில் நீங்களெல்லாம் தப்பித்து வருகிறீர்கள் அதற்க்கு நான் உதவவேண்டும் என்று அதனால் தான் இங்கு காத்து இருக்கிறேன் என்றார். அவரின் கவனிப்போடு அங்கிருந்து நடக்க தொடங்கினார்கள்.

தொடர்ந்த நடை வழியில் கிடைத்த அமமன் தரிசனமும் அம்மன் கொடுத்த கூடையும் பிறகு அங்குவந்த துலுக்க ராஜாவின் வீரர்களிடமிருந்து காப்பாற்றிய அம்மன். வழியில் சந்திக்கும் அறிந்துகொள்ளும் துளசியின் கதை. 16 அடி தலை முடிகொண்ட அந்த அழகி துளசிக்கும் இதேபோல துலுக்க ராஜாக்களால் ஏற்பட்ட கொடுமையிலிருந்து காப்பாற்ற பூமித்தாய் அவளை விழுங்கி விட்டது என்ற தகவல் கேட்டு நெகிழ்ந்து போவதும் என அவர்ளின் நடை பயணம் தொடர்ந்து கொண்டேயிருந்தது.

அப்படியே நடக்கும் பொழுது அவர்கள் காண்பதெல்லாம் வித்தியாசமாக இருக்கிறது, வீடுகள், கால்நடைகள் மற்றும் பேசும் மொழி என எல்லாமே புதுமையாக இருந்தது ஒருகட்டத்தில் தான் அவர்கள் தெரிந்துகொண்டனர் அது அரவதேசம் (தமிழ்நாடு) என்று.

ஸ்ரீரங்கம் வந்த போது சென்னிதேவி மரணித்துவிட்டாள். அவளது மரணம் எல்லோரையும் துக்கத்தில் உறைய வைத்தது. கடைசியாக இங்குவந்து இந்த கிராமத்தை உருவாக்கினார்கள்.

காடாக இருந்த இடத்தை சீர்படுத்தி விவசாயம் செய்யும் நிலமாக மாற்றி காடுகளை அழித்து ஒரு புதிய நிலத்தினை உருவாக்கினார்கள். அங்கே இருந்த ஊரணியில் ஒரு பசுமாடு நிறைவயிற்றுடன் சகதியில் மாட்டிக்கொண்டது அதை சகதியில் இருந்து மீட்க வேண்டி 40க்கும் மேற்பட்ட இளவட்டத்தினர்கள் சேர்ந்து மீட்டுவந்தனர் அப்படியாக மீட்கும் அந்த காட்சியினை "40க்கும் மேற்பட்ட எறும்புகள் விழுந்து கிடக்கும் ஒரு புழுவினை சுற்றி நிற்பது போல" காட்சி அளித்தது என்று சொல்கிறார். பசு கிடைத்ததால் அந்த கிராமம் கோபல்ல கிராமம் என உருவானது.

அப்படி உருகுவாக்கப்பட்ட அந்த கிராமத்தில் முதலில் வாழ்ந்தவர்கள் எல்லோரும் அவரவர் பங்குக்கு ஒவ்வொரு மரம் கம்மாக்கரையினை சுற்றி நடவேண்டும் அப்படி நடப்பட்டு உயர்ந்து வளர்ந்து நிற்கும் மரங்களின் நிழலில் தான் இந்த ஊர்கூட்டம் நடக்கிறது.

கொலைசெய்த குற்றவாளிக்கு தண்டனை கொடுக்க ஊர்கூடுகிறது. சபையில் இருப்பது கோட்டையார் குடும்பம் அணைத்து சகோதர்கள் மற்றும் ஒவ்வொருவரையும் வரிசைப்படுத்தி அவர்களுக்கு ஏன் இந்த பெயர் வந்தது அவர்களின் சிறப்பு மற்றும் குணம் என எல்லாவற்றையும் அழகாகவும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு துணை கதை மிக அழகாகவும் அவர்களின் பெயருக்கு காரணத்தையும் மிக அருமையாக சொல்லிச்செல்கிறார்.

சின்னப்ப நாயக்கர்
மன்னுதிண்ணி ரெங்க நாயக்கர்
நல்லமனசு திரவத்தி நாயக்கர்
பெத்தகோந்து கோட்டையார்
பொடிகார கெங்கையா நாயக்கர்
காரைவீட்டு லெட்சுமண நாயக்கர்
கங்கனால் சுப்பன்னா
படுபாவி செங்கன்னா
பச்சைவெண்ணெய் நரசய்யா
பொறை பங்காரு நாயக்கர்
ஜோசியம் எங்கட்டராயலு
வாகடம் புல்லைய்யா
பயிருழவு பங்காரு நாயக்கர்
காயடி கொண்டைய்யா
ரகுபதி நாயக்கர்
ஜலதரங்கன்
கல்தொடு மரகதய்யா: மற்றும்
பஜனை மட பார்த்தசாரதி

என ஊர் பெரியவர்கள் எல்லோரும் மற்றும் ஊர்மக்கள் அனைவரும் சபைக்கு வந்துசேர்ந்து விட்டனர்.

கோவிந்தப்ப நாயக்கர் ஆரம்பிக்கிறார், எல்லோரும் வந்துவிட்டார்களா என்று கேட்டுக்கொண்டே குற்றவாளியை பேசச்சொல்கிறார் ஆனால் அவன் பேசாமல் இறுதிவரை இருந்துவிடுகிறான். மனைவியை பறிகொடுத்த ஆசாரியார் பேசமுடியாமல் பேசுகிறார். இறுதியில் தீர்ப்பு இவனை கழுவேத்துவது என்று முடிவாகிறது.

கழுவேத்துவதற்கு ஏற்பாடுகள் நடைபெறுகிறது ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் இருக்கும் மைதானத்தில் அவனை கழுவேத்துகிறார்கள் அதற்குமுன் அவனால் கொலையுண்ட அந்த பெண்ணின் உடலை அங்கேயே புதைக்கின்றனர். இந்த இடத்தில சுமைதாங்கியும் வைக்கின்றனர் பிற்காலத்தில் இது "கழுவன் மைதானம்" என்று பெயர் மாறிப்போய்விட்டது.

கழுவில் ஏறி இருக்கும், அவன் தான் உயிர்போகும் சமயத்தில் தண்ணீர் வேண்டுமென்று கேட்டதால் அதை கொடுக்க சொல்லுவது அந்த மக்களின் இரக்கத்தை காட்டுகிறது. மேலும் அவனுக்கு வேற எதாவது ஆசை இருக்கிறதா என்று கேட்கின்றனர் அதற்க்கு அவன் அங்கே அருகில் வேப்பமுத்து எடுத்துக்கொண்டிருக்கும் பெண் பிள்ளைகளை அழைத்து வந்து என்னை சுற்றி கும்மி பாட்டு பாட கேட்டுக்கொள்கிறான் அதன் படி அந்த குழந்தை களும் பாட அதை கேட்டுக்கொண்டே அவன் அவனின் தாய்க்கு செய்த குற்றங்களை நினைத்து அவன் எவ்வாறு ஊதாரியாக சுற்றி திரிந்ததும் ஆனால் இந்த கோபாலபுரம் மக்கள் எவ்வாறு இந்த காட்டை அழித்து விவசாயம் செய்கின்றனர் இவர்களின் உழைப்பே பெருமைக்குரியது என்று தனக்குத்தானே நினைத்துக்கொண்டே உயிர்விடுகிறான்.

பிறகு அங்கே வரும் ஆங்கிலேயர்கள் முதலில் நல்லவர்கள் போல வந்து பின்னாளில் அவர்களின் அட்டகாசம் தாங்கமுடியவில்லை அதனால் மக்கள் வெகுண்டுஎழுகிறார்கள்.

சமீபத்தில் நாம் சில இடங்களில் எதிர்கொண்ட விட்டில் பூச்சியின் தாக்குதல் போல அப்பவே கோபல்ல கிராமம் எதிர்கொண்டியிருந்தது. அப்போது அங்கு திடீரென வந்த விட்டில் பூச்சிகள் "ஒரு தேன் கூட்டில் மொய்க்கும் தேனீக்கள் போல் இருந்தது என்றும்" இங்கே தேன்கூடாக கோபல்ல கிராமத்தை உவமை சொல்லியிருப்பது மிக அருமை. கோவிந்தப்ப நாயக்கர் தங்கள் வீட்டில் சேர்த்து வைத்திருந்த தானியங்கள் மற்றும் கால்நடைகளுக்கு தேவையான கூளங்கள் எல்லாம் கிராம மக்களுக்கு பிரித்து கொடுத்து ஒரு தலைவனுக்கே உரித்தான ஒரு தனித்துவத்துடன் நிற்கிறார்.

கடைசியில், கோபல்ல கிராம மக்களின் சுதந்திர வேட்கை தணல் விட்டு எரியும் தீ போல சுடர் கொண்டு இருக்கிறதையும் அவர்கள் அதை ஒரு அமைதியாக இருந்து போராடுகிறார்கள்.

இப்போது கோபல்ல கிராமத்தில் நிலவும் அமைதி "ஒரு புயலுக்கு முன்னாள் இருக்கும் அமைதியே, இது கோபல்ல கிராம மக்களின் சுதந்திர தாகம் இன்னும் தீரவில்லை அது ஒருபுறம் சுடர்விட்டு கொண்டேயிருக்கிறது.....

என்று முடித்திருப்பது - அருமை

அன்புடன்,
தேவேந்திரன் ராமையன்
12 ஜூன் 2021