Friday, 23 December 2022

வாழ்க்கை விநோதம் (நகைச்சுவை கட்டுரைகள்) - அழ. வள்ளியப்பா

 வாழ்க்கை விநோதம் 

(நகைச்சுவை கட்டுரைகள்) 

ஆசிரியர் - அழ. வள்ளியப்பா

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய்   49

பக்கங்கள்  88


1945 ல், வெளிவந்த இந்த புத்தகம் ஆசிரியரின் சொந்த அனுபவங்களை நகைச்சுவை உணர்வுடன் மிக எளிமையாக எழுதியுள்ளார். ஒவ்வொரு கட்டுரையிலும் வரும் அனுபவங்களை நாம் நமது வாழ்வில் கண்டிப்பாகச் சந்தித்த ஒரு அனுபவகமாகே இருக்கும் என்பது தான் உண்மை. படித்துத்தான் பாருங்களேன் எந்த அளவுக்கு உங்கள் அனுபவம் ஒத்துப்போகிறது என்று பாருங்களேன்.

மொத்தம் 13 கட்டுரைகள். 

சில்லறைக் கடன், இந்த கதை எனக்கு மிகவும் நெருக்கமானது. ஒருவன் என்னிடம் கடன் வாங்கி 10 வருடத்திற்கு மேல் ஆகிறது ஆனால் அவன் இதுவரை கொடுத்தபாடில்லை ஆனால் அவனது வாழ்க்கை முறை நல்லாத்தான் இருக்கிறது. இவர்களைப் போல இருக்கும் ஆசாமிகளுக்கு அடுத்தவரிடம் எப்படி கடன் வாங்கிவிட்டு கையை நீட்டிவிட்டு போவது  என்பதை இவர்கள் கைதேர்ந்தவர்கள். அப்படிதான் ஆசிரியரும் கடன் கொடுத்து ஏமாந்து போகிறார்.

முடிதிருத்தகம் கடையில், முடிதிருத்திக் கொண்டிருக்கும் போது முடிவெட்டுபவர் அருகில் கேட்ட தாளத்திற்கு ஏற்ப இவரின் தலையில் விளையாடிவிட்டார், மழையில் பாதித்த போன சாலை போல அவர் தலை ஆனதும், மழைக்காலத்தில் சம்மர் கிராப் வெட்டிக்கொண்டு மீண்டும் வளர்த்துவிட்டாராம். 

அடுத்து சிதம்பரம் நடராஜரைத் தரிசிக்க வேண்டி நண்பர்களுடன் உல்லாச பிரயாணம் செய்ய ஆரம்பித்து, ரயில் டிக்கெட் இல்லாமல் மாயவரம் வரை டிக்கெட் எடுத்து பிறகு லேடீஸ் கம்பார்ட்மெண்ட்டில் ஏறிய பிறகு ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளை நகைச்சுவையுடன் விவரிக்கிறார்.

மறதியின் லீலை என்ற கட்டுரையில் ஒரு வாசகர் பத்திரிக்கை அலுவலகத்திற்குப் பணம் அனுப்பியிருக்கிறார். அதைப் பெற்றுக்கொண்ட குமாஸ்தா பணத்தை எடுத்துக்கொண்டு அவரின் முகவரியினை குறிப்பிடாமல் விட்டுவிட்டார். இது போல பல்வேறு நிகழ்வுகள் இந்த கட்டுரைகள் வழியே குறிப்பிட்டுள்ளார். ஒரு அரசு ஊழியர், தம் மனைவிக்கு எழுதிய கடிதத்தில் 'தங்கள் தாழ்மையுள்ள ஊழியன்' என்று மறந்து எழுதியிருக்கிறார். மாணவர்கள் இருவரில் ஒருவருக்கு எல்லாப் பாடங்களிலும் நன்றாக மதிப்பெண் வருகிறது ஆனால் கணக்கு மட்டும் வரவில்லை அதேபோல அவரின் நண்பருக்குக் கணக்கு மட்டும் தான் வருமாம் அதனால் இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தில் கணக்கு பேப்பரில் பெயரை மாற்றி எழுதிவிடுவோம் என்று. ஆனால் மறந்து போய் தனது பெயரையே எழுதியதால் கணக்கில் இரண்டு பேப்பர் ஒரே பெயரில் இருந்ததாம்

அதைப்போலவே சலவை காரரின் ஒரு சில அனுபவங்களை குறிப்பிட்டுள்ளார்.  கோவிலுக்குப் போய் செருப்பை வெளியில் விட்டுவிட்டு பிறகு தரிசனம் முடிந்து வந்து பார்த்தல் செருப்பு காணோம் அப்போது அவர் சொன்ன அதே வார்த்தைகளைச் சொன்னாராம் மற்றவர் அதாவது ஏதாவது பரதன் உன்மேல் இருக்கும் அன்பில் பெருக்கால் எடுத்துப்போயிருப்பான் என்றாராம்.

பல மேதாவிகள் தங்கள் வாழ்க்கையில் பல்வேறு விநோதமாக வாழ்வார்கள் என்றும் அதே போல அவருக்கு ஏற்பட்ட ஒரு சில அனுபவங்களைக் குறிப்பிடுகிறார்.

தனக்குப் பலநாளாக மேடையில் பேச வேண்டும் என்ற ஆசை இருந்ததால், அதற்காக ஒரு நேரம் வந்த போது அதைப்பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று முயல்கிறார் ஆனால் அவருக்கு அதுவரையில் பேசிய அனுபவம் இல்லையென்பதால் அவரை பேசவேண்டாம் என்றார்கள். ஆனால் இறுதியில் அவரை பேசச்சொல்லி அவரால் பேசாமல் போய்விட்டதைக் குறிப்பிடுகிறார்.

கரிக்கார்,  கரியில் இயங்கும் இந்த வாகனத்தில் பயணித்த அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். ஒரு நாள் அவரின் நண்பரின் வீட்டுக்கு விருந்திற்காகச் சென்றாராம் அன்று பார்த்து அவர் பயணித்த வண்டி அவரை படு மோசம் செய்துவிட்டதாம். ஒருவழியாக அவர் நண்பர் வீட்டிற்குச் சென்ற பிறகு அவர்களெல்லாம் சாப்பாட்டை முடித்துவிட்டுத் தூங்கியே விட்டார்களாம். பாவம் என்ன செய்வது அன்றிரவு பட்டினியாகவே அவர்கள் வீட்டில் உறங்கினாராம்.

லஞ்சம் வாங்குவதை அருமையாக விவரிக்கிறார் அதாவது வரியில்லாத வருமானம் என்று பல்வேறு விதமான லஞ்சங்களைக் குறிப்பிடுகிறார். 

அலுவலகத்திற்கு வரும் தொலைப்பேசியை எடுக்கும் மேலாளரின் வீட்டு வேலைக்காரனுக்குக் கிடைக்கும் அனுபவத்தால் ஏற்படும் இடர்பாடுகளை விளக்குகிறார். 

பணப்பித்து என்ற கட்டுரையில் கஞ்சனாக இருந்து என்ன சாதிக்கப்போகிறோம் என்று மிக அருமையாக விவரிக்கிறார். பணத்தைச் சேமிக்க பல்வேறு வழியிருக்க, தனது வயிற்றைக் கட்டி வாயைக் கட்டி அதைச் சேர்க்க வேண்டாம் என்று சொல்கிறார். பணம் செலவழிக்க பல்வேறு நல்ல வழிகள் இருக்கிறது அதுபோலவே பணம் செலவாகிக்கொண்டே தான் இருக்கவேண்டும்.

வெள்ளைக்காரரும் வெள்ளிக்கிழமையும் என்ற தலைப்பில், நாம் பார்க்கும் நல்ல நேரம், ராகு காலம் போன்ற பல்வேறு விதமான வழக்கத்தினை பார்த்து பலரும் பேசுவது பற்றி  அவர் குறிப்பிடுகிறார். அதே சமயத்தில் வெள்ளைக்காரர்கள் பார்க்கும் பல்வேறு சகுனத்தினை பற்றிக் குறிப்பிடுகிறார். அவர்கள் வெள்ளிக்கிழமையில் எதுவும் புதிதாகச் செய்ய மாட்டார்கள் அது போலவே 13 நம்பர் அவர்களுக்கு உதவாது. அவர்கள் 13 நம்பர் என்றாலே அலர்ஜி தான். 


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

23 டிசம்பர் 2022

      

Thursday, 22 December 2022

மெஸ்ஸி - கால்பந்தின் தேவதூதன் - ஆசிரியர் : முகில்

மெஸ்ஸி - கால்பந்தின் தேவதூதன் 

ஆசிரியர் : முகில் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 49

பக்கங்கள் 26 


நாம் பெரும்பாலும் கிரிக்கெட் பின்னாலே செல்வதால், கால்பந்தின் மீது அவ்வளவாக நாட்டம் இல்லை. ஆனால் நான் வசிக்கும் துபாயில் கால்பந்து தான் பிரதான விளையாட்டு. பெரும்பாலும் சிறுவர்கள் மெஸ்ஸியின் டீசர்ட் அணிவது வழக்கம்.  ஒரு சில விளையாட்டினை இங்கே இருக்கும் உள்ளூர் தொலைக்காட்சியில் பார்த்து ரசித்திருக்கிறேன் ஆனாலும் மொழி தெரியாமல் இருந்தாலும் கால்பந்தாட்டத்தின் ஒரு பெருமை என்றே தான் சொல்லவேண்டியது அந்த விளையாட்டினை பார்த்து ரசிக்கும் அதனை ராசிகளையும் பந்து செல்லும் திசையில் ஓடவைப்பது தான். 

லியோனெல் மெஸ்ஸிஅர்ஜெண்டினாவின் நீண்ட நாள் கனவை நினைவாக்கிய வீரன். கடந்த ஒரு வாரக் காலமாக மெஸ்ஸியின் படமும் செய்தியும் இல்லாத நாளேடுகள் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அவர்களின் நாடே அவனைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஊர்வலம் செல்கிறது, ஒரே நீலக்கடலின் (அர்ஜெண்டினாவின் கால்பந்து சீருடை அணிந்த அந்நாட்டு மக்கள் கூட்டத்தின்)  நடுவே சட்டை அணியாத மெஸ்ஸி தந்து கையில் தங்கப் பதக்கத்துடன் நீந்திச் செல்வது,  அவனும் தங்கமாய் மிளிர்ந்து செல்வது போல தோற்றமளிக்கிறது. 

அப்படிப்பட்ட மெஸ்ஸியின் வாழ்க்கை வரலாறு பற்றிய புத்தகம் தான் இது. வெறும் 26 பக்கங்களே கொண்ட இந்த புத்தகம் மெஸ்ஸியின் பிறப்பு முதல் கத்தாரில் நடக்கும் 2022 பிபா இறுதிப் போட்டிக்கு முந்தைய தினம் வரையிலான நிகழ்வுகளை மிக அருமையாகவும் தெளிவாகவும் கொண்டுள்ளது.

சிறுவயதிலே கால்பந்தின் மீது நாட்டம் கொண்ட மெஸ்ஸி தனது நான்காவது வயதிலே ஆட ஆரம்பித்தான்.  வளர வளர அவனின் ஆட்டத்தின் திறமையும் மெருகேறிக்கொண்டே இருந்தது. அவன் சேர்ந்த அணைத்து அணியிலும் அவன் ஒரு நட்சத்திரமாகவே ஜொலித்தான்  என்று தான் சொல்லவேண்டும்.

இயற்கை அவனின் உயரத்தின் மீது ஒரு தடை போட்டு அவனைக் கால்பந்தின் ஆசையினை தடுக்க முயன்றது ஆனால் அவற்றையும் தாண்டி தனது லட்சியம் ஒன்றே அது கால்பந்து தான் என்ற வேட்கையுடன் இருந்தான். அதற்கான தருணம் வந்து சேர்ந்தது. அவனின் திறமையினை அறிந்துகொண்ட பார்ச்சிலோனாமெஸ்ஸியை தங்கள் நாட்டில்  தங்கி இங்கிருக்கும் கிளப் அணிகளில் விளையாட முன்வந்தால் நாங்கள் அவனின் மருத்துவசெல்வுக்கு உதவிபுரிவதாகச் சொல்லி அவ்வாறே நடந்தது.

பிறகு ஸ்பெயினின் குடியுரிமை இல்லாத காரணத்தால் ஏற்பட்ட பல்வேறு இடையூறுகளைத் தாண்டி இடை இடையே ஏற்பட்ட விபத்துகள் அதனால் ஏற்பட்ட சோர்வுகள் என எல்லாவற்றையும் கடந்து  பார்சிலோனாவின் பல்வேறு போட்டிகளில் விளையாடி தனது தடத்தைப் பதித்தான் மெஸ்ஸி. அதே வேகத்தில் பார்சிலோனாவின் அணியில் முதல் கோல் அடித்த இளம் வீரர் என்ற பெருமையினை 2004 ஆம் ஆண்டில் பதிவுசெய்தான். பார்சிலோனாவின் அணியில் 2014 வரை விளையாடும் ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது. ஸ்பெயின் நாட்டின் குடியுரிமையும் கிடைத்தது. ஆனால் அப்போது மெஸ்ஸி மக்கள் மத்தியில் கால்பந்தின் தேவதூதன் என்று வர்ணிக்கப்பட்டான். அதே நேரத்தில் மக்களிடம் ஒரு கேள்வியும் அதற்கான விடை மெஸ்ஸியிடமே இருந்தது. தேசிய அணி என்று வந்தால் அவன் எந்த அணிக்காக விளையாடுவான் என்று. மக்களின் கேள்விக்கு, நான் அர்ஜெண்டினாவின் மகன், எனது தேசம் அதுதான் என்றும் அதே நேரத்தில் பார்சிலோனாவின் அணிகளில் விளையாடுவதை நான் நிறுத்தமாட்டேன் என்றும் சொன்னான்.

மெஸ்ஸி புரிந்த சாதனைகள்  ஒன்றல்ல இரண்டல்ல அது ஒரு நீண்ட பட்டியல். அந்த சாதனை பட்டியலில் பல்வேறு கோப்பைகள், தங்க காலணிஇளம் வீரர் சாதனை,அதிக கோள்கள் சாதனை என்று நீளும் இந்த பட்டியலில் 2022 ஆண்டு கத்தாரில் நடந்த  உலகக்கோப்பை போட்டியில், உலகக்கோப்பை வென்று  தனது தேசத்தின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றியதும்  ஒன்று ஆகும்.               


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

22 டிசம்பர் 2022

Tuesday, 20 December 2022

விருந்தாளி  

ஆசிரியர் : ஆல்பெர் காம்யு

தமிழில்  - கா.நா. சு.

கிண்டில் பதிப்பு     

விலை ரூபாய் 49

பக்கங்கள் 32


'விருந்தாளி' என்னும் தலைப்பில் ஆல்பெர் காம்யு அவர்களால் 1957ஆம் ஆண்டு பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்ட இந்த கதை  அல்ஜீரியா நாட்டில் நடப்பதாக அமைந்துள்ளது. மேலும் இந்த கதை 'ஒரு கைதியின் பயணம்' என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. 

1913 ல் அல்ஜீரியாவில் பிறந்த கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் அங்கேயே வாழ்ந்து பல்வேறு தொழில்கள் செய்து, பின்னர் பிரான்ஸில் குடியேறினார். தனது எழுத்துக்கள் மூலமாக பல்வேறு விதமான அரசியல் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார். இவரின் பல்வேறு படைப்புகள் வெளிவந்துள்ளது. அவற்றுள் 1957ல் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. 

இந்த விருந்தாளி என்ற கதையும் அவரின் மனப்பான்மையினை மிகத் தெளிவாக வெளிப்படுத்துகிறது. 

பள்ளத்தாக்கின் உச்சியில் ஒரு அப்பள்ளிக்கூடம் அதை நிர்வகிக்கும் ஆசிரியர் டாரு அவர்கள். கடும் குளிரிலும் அவரும்  மற்றும்  அந்த பகுதியில் வாழும் மக்களும் வாழ்கின்றனர்.  அவர்களுக்கு உதவிபுரிய வேண்டி தனது முழு வாழ்வையும் அர்ப்பணிக்கிறார். அதற்காக அங்கே ஒரு பள்ளிக்கூடம் வைத்து நடத்தி வருகிறார் மேலும் அந்த பகுதி மக்களுக்கென அரசாங்கம் கொடுக்கும் கோதுமை மற்றும் உணவுப் பொருள்களை அவரின் பள்ளிக்கூடத்தில் வைத்துக் கொண்டு அனைவருக்கும் பகிர்ந்து பிரித்துக் கொடுப்பதும்  அவரின் ஒரு முக்கிய வேலையாகக் கொண்டிருக்கிறார்.

அன்று பள்ளத்தாக்கின் கீழிருந்து அவரை நோக்கி இருவர் வருகிறார்கள் அதில் ஒருவன் குதிரை மீதமர்ந்தும் மற்றவன் நடந்தும் வருகிறான். அவர்கள் நெருங்கி வந்தவுடன் அவருக்குப் புரிந்துவிடுகிறது,  அவரை நோக்கி வருபவரின் ஒருவன் போலீஸ் என்றும்  அவன்கூடவே வருவது ஒரு கைதியாக இருக்கும் என்று யூகித்துக்கொள்கிறார். கடுமையான  பனி பெய்துகொண்டிருந்த நேரம் கூடவே  கடுங்குளிர் அந்த பகுதியினை வெகுவாக மூடிக்கொண்டிருந்தது.

அவர்கள் வந்துசேர்கின்றனர், பிறகு போலீஸ் அவனுடன் வந்த கைதியினை டாருவிடம் ஒப்படைத்துவிட்டு அவனை அடுத்த பகுதியில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனலில் கொண்டு சேர்க்குமாறு சொல்லிவிட்டு அவர் சென்றுவிடுகிறார்.

டாரு,  அந்த கைதியை ஒரு விருந்தாளி போலவே பாவித்து அவனுக்கு உன்ன உணவும் குளிருக்கு உடுத்திக்கொள்ளக் கம்பளியும் கொடுத்து அவனை உபசரிக்கிறார். கூடவே அவரின் மனம் அவனைக் கொண்டு ஒப்படைக்க மனமில்லாமல் தீவிர யோசனையில் இருக்கிறார்.

மறுநாள் காலை அவரும் அந்த கைதியும் செல்கின்றனர். ஒரு குறிப்பிட்ட தூரம் சென்றவுடன் டாரு, கைதியிடம் சொல்கிறார். இவருக்கும் தான் நான் வருவேன். இந்த இந்த பணத்தை வைத்துக்கொள், போலீசிடம் போனால் அவர்கள் உன்னைத் தண்டிப்பார்கள் அதனால் இந்த பக்கமாகச் செல் அங்கே உனது மக்கள் இருப்பார்கள் அவர்கள் உன்னைப் பார்த்துக்கொள்வார்கள் என்று சொல்லிவிட்டு அவர் திரும்பிவிடுகிறார்.      ஆனால்  அந்த கைதி போலிஷ்காரர்கள் மற்றும் நீதிபதிகள் இருக்கும் பக்கம் நோக்கியே நடக்கிறான்.

திரும்பி வந்த டாரு, தனது அறையில் இருக்கும் பிரான்ஸ் தேசத்து நதிகளின் வரைபடத்தில் எழுதியிருந்த வார்த்தைகள் அவரை நோக்கிச் சொல்கின்றன" நீ எங்கள் சகோதரனை போலீஸில் ஒப்படைத்துவிட்டாய் அதற்கான தண்டனை உனக்குண்டு"...

டாரு, தன்னிடம் வந்து சேர்ந்த கைதியை அவர் ஒரு விருந்தாளியாகவே கருதி அப்படியே பாவித்து அவனிடம் பணமும் கொடுத்து அவனைப் போலீசிடம் ஒப்படைக்காமல் உன்விருப்பப்படி நீ செல் என்று தான் சொல்கிறார் ஆனால் அவர் மனம் அவரை ஒரு குற்றவாளியாகவே கருதுகிறது.


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

20 டிசம்பர் 2022 

Monday, 19 December 2022

 டார்த்தீனியம் 

ஆசிரியர் : ஜெயமோகன்

ஸ்டோரி டெல் - கதை ஓசை 

ஜெயமோகன் இணையதளம்  

பக்கம் 54





டார்த்தீனியம் - கணையாழி 1992 இதழில் வெளிவந்த குறுநாவல்தி.ஜானகி ராமன் குறுநாவல் போட்டியில் பரிசு பெற்றது.  இந்த குறுநாவலை முதலில் ஸ்டோரி டெல் ஆப்பில் கேட்டு ரசித்தேன். அதன் ஆர்வம் என்னை எழுத்து வடிவில் வாசிக்கத் தூண்டியது. கிண்டிலில் கிடைக்கவில்லை - பிறகு ஆசிரியர் ஜெயமோகன் இணையதளத்தில் வாசித்தேன்.  வாசித்து முடித்த பின்னர் எதோ ஒரு வலையில் மாட்டிக்கொண்ட பிரமை.

அழகான குடும்பம், அலுவலகத்தில் வேலை பார்க்கும் அப்பா, வீட்டோடு இருக்கும்  அம்மா இவர்களுக்கு ஒரு மகன் இவர்களுடன் உறவாய் வாழும் கருப்பன் என்ற நாய், கனகு என்ற பசுவும் அதன் குட்டி மக்குரூணீ என இவர்கள் வீடே ஒரு அருமையான வீடாக அந்த ஊரில் இருக்கிறது. 

அப்படியான வீட்டில் எழும் ஒரு பிரச்சினை அது ஆலமரமாக வளர்ந்து அந்த குடும்பத்தினை சின்னா பின்னமாக ஆக்கிய கதைதான் இது. 

அப்பா அலுவலகத்திலிருந்து வந்த போது தனது கையில் ஒரு செடியை எடுத்து வந்து அதை உடனே இரவோடு இரவாக நட்டுவைக்கின்றனர். அன்றிரவே மகனுக்கும் மனைவிக்கும் ஒரு சில நிகழ்வுகள் நடக்கிறது அதைக் காரணம் காட்டி மறுநாள் காலையில் இதை பிடுங்கிவிட வேண்டும் என்று  கேட்கின்றனர். ஆனால் அப்பா மறுத்துவிடுகிறார். இதை என்றாய் டாக்டரிடம் இருந்து வாங்கிவந்தேன் இது வெளிநாட்டிலிருந்து வந்தது என்று சொல்லி இதை நான் தூக்கியெறியமாட்டேன் என்று முடிவாகச் சொல்லுகிறார்.

அந்த செடி நாளுக்கு நாள் வளர்ந்து அவர்களின் வீட்டையே ஆக்கிரமித்து ஒவ்வொரு உயிரையும் பலி வாங்குகிறது. முதலில் கனகு பிறகு மக்குரூணீ, பிறகு அம்மா அப்படியே கருப்பன் தனது நிலையினை மாற்றி அவனும் அப்பாவும் அந்த செடியுடன் சேர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.அது கருநாகம் போல வளருகிறது. 

அவன் அங்கிருந்து தப்பித்து வெளியில் சென்றுவிடுகிறான். வேளையிலும் சேர்ந்துவிடுகிறான். அம்மா இறந்த தகவல் தெரிந்து தனது பயிற்சியிலிருந்து ஊருக்கு வருகிறான் அப்படி அவன் வருவதற்குள் அவனின் அம்மா எரியூட்டப்படுகிறாள். 

அவனையும் அந்த கருநாகம்  ஆட்கொண்டுவிடுகிறது. அவன் திரும்பிப் போகும்போது அவனுக்கு உடல்நிலை சரியில்லால்மற் இருக்கிறது அவன் உடல் முழுவதும் விசம் ஏறியிருந்தது  என்று மருத்துவர்கள் சொல்கின்றனர். 

பிறகு ஒரு நேரத்தில் அப்பாவும் இறந்துவிட்டதாகவும் அப்போதுதான் கருப்பன் வெளியில் வந்ததாகவும் அது ஊரில் ஒரு சிலரைக் கடித்து அவர்களும் இறந்து விட்டதாகவும் சொல்கின்றனர். திரும்ப  அந்த ஊருக்குப் போக அவனுக்கு மனதில் ஒரு ஓரத்தில் கூட இடமில்லாமல் இருந்தான். அவன் அதன் காரணமாக பல்வேறு இடங்களுக்குச் சுற்றித்திரிந்தான். அவன் மனமும் உடலும் வலுப்பெற்றது.

இறுதியில் ஒரு கணத்தில் அவன் மனதில் அவனுக்கே தோன்றியது அதுவரை அவன் வாழ்ந்த வாழ்விற்குள் ஒரு மாயை இருந்தது என்றும் கட்டாயம் அடுத்த விடுமுறை ஊருக்கு போக வேண்டும் என்றும் அப்படியே ஊருக்கு வருகிறான். அவன் கண்களில் படும் காட்சிகள் எல்லாம் அவனை மேலும் அதிர்ச்சியடைய வைக்கிறது. 

ஒற்றை செடி வீட்டிற்குள் வந்து ஒட்டுமொத்த குடும்பத்தையும் சிதறடித்து விட்டது ஒரு பிரமையாகவே இருக்கிறது. டார்த்தினியும் என்ற அந்த ஒற்றை செடி எப்படி ஆட்கொண்டது என்பதை அருமையாகச் சொல்கிறது. 

அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

19 டிசம்பர் 2022  


                      

      


இரண்டாம் உலகப்போர் ஆசிரியர் : பா. ராகவன்

இரண்டாம் உலகப்போர் 

ஆசிரியர் : பா. ராகவன் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 75

பக்கங்கள்   69



இந்த புத்தகம், இரண்டாம் உலகப்போர் பற்றிய ஒரு சுருக்கமான புத்தகம், பல்வேறு  விவரங்களைத் தாங்கிய இந்த புத்தகம் மிகவும் எளிமையாக இரண்டாம் உலகப்போரை பற்றி பேசுகிறது. கிட்டதட்ட 4-5 ஆண்டுகள் நடந்த முதலாம் உலகப்போர் ஒருவழியாக முடிந்து உலகம் அமைதியான   சூழலுக்கு திரும்பிக்கொண்டிருந்த நிலையில் மீண்டும் 1939 ல்  இரண்டாம் உலகப்போருக்கான ஆரம்பத்தை  ஆரம்பித்தார் ஹிட்லர்.

ஹிட்லர் என்ற ஒரு மனிதன் இல்லாமல் இருந்திருந்தால் இரண்டாம் உலகப்போர் நடந்திருக்க வாய்ப்பே இருந்திருக்காது. என்ன செய்ய, அது  நடந்து முடிந்துவிட்டது. இப்போது அது வரலாறு இனி நாம் அதை பற்றி படிக்கத்தான் முடியுமே தவிர வேறென்ன செய்ய முடியும்.

ஜெர்மனி  நாடு முதலாம் உலகப்போரின் போது தோல்வியடைந்து உலகநாடுகளுக்கு அடங்கி போனதால், அந்நாடு பல்வேறு இழப்பீடுகள் கொடுக்கவேண்டிய கட்டாயதிற்குள்ளானது. மட்டுமல்லாது பல்வேறு நிலங்களையும் இழந்து ஒரு நிபந்தனைக்குரிய அரசராகவே இருந்துவந்தது.  ஹிட்லர் இதையே தனது தரப்பில் சாதகமாக எடுத்துக்கொண்டு, ஜெர்மனி மக்களிடம் தாக்கத்தினை ஏற்படுத்தி, அதையே முக்கிய பலமாக வைத்து கொண்டு ஹிட்லர் ஜெர்மனியின் ஆட்சி அதிகாரத்திற்கு வருகிறார். அவ்வாறு ஆட்சி பீடத்தில் வந்தவர் கொஞ்சம் கொஞ்சமாக தனது மக்களிடமும் உலகின் பல்வேறு நாடுகள் மீது விரோதத்தினை விதைத்தார். அது மக்களிடையே தீவிரமடைந்தது அதையே தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு இரண்டாம் உலகப்போரை ஆரம்பித்தார்.
 
முதலாவதாக, ஏன் நமது தேசத்தின் மண்ணையும் பொன்னையும் பிற நாடுகளுக்கு கொடுக்கவேண்டும் என்று எடுத்த தீர்மானத்தின் விளைவாக பக்கத்து நாட்டின் மீது போர் தொடுத்து அப்படியே கிடைத்த வெற்றியின் சுவையால் அவரின் அட்டூழியம் தொடர்ந்து மேலோங்கியது. அவருக்கு துணையாக இத்தாலியும் கைகோர்த்து கொண்டது.  இவர்களின் பசிக்கு இறையாகிப்போனது ஒட்டுமொத்த ஐரோப்பாவும்.

கிடைத்த வெற்றியின் ருசியில் மூழ்கிய ஹிட்லர், மேலும் மேலும் ஆடிய ஆட்டம் கூடிக்கொண்டே போனது தான் மிச்சம். இதற்கிடையில் சோவியத்திடம் ஒரு ஒப்பந்தம் கையெழுத்திட்டது. ஆனால் அதையும் மீறி ஹிட்லர் ஒரு கட்டத்தில் சோவியத்தின் மீது தனது ஆட்டத்தினை ஆரம்பித்தார். பொதுவாகவே எந்த ஒரு ஒப்பந்தத்தையும் அவர் மதித்தாக வரலாறே இல்லை. 

மற்றொருபுறம் ஜப்பான்,ஜெர்மனியுடன் கைகோர்த்து தனது தரப்பிலிருந்து முடிந்த வரை அட்டூழியம் செய்தது அதன் விளைவாக அமெரிக்காவின் மீது தனது தாக்குதலை காட்டியது. இதை கேட்ட ஹிட்லரும் அமெரிக்கா மீது போர் தொடுத்தார் அப்படியாக போன தருணத்தில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தங்கள் முழு பலத்தையும் காட்ட ஆரம்பித்தது. அமெரிக்கா,பிரிட்டன் மற்றும் சோவியத் நாடுகள் ஆடிய கடுமையான ஆட்டத்தில் தாக்குப்பிடிக்க முடியாயமால் திணறிய ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டார்.

ஹிட்லர் தற்கொலைக்கு பிறகு சரணடைய வேண்டியநிலைக்கு வந்தனர் ஜெர்மன் மற்றும் ஜப்பான்.  மொத்தம் ஆறு ஆண்டுகள் நீடித்த இந்த போர் கிட்டத்தட்ட 40,000,000 லிருந்து  50,000,000  உயிர்கள் பலிவாங்கியது மிகவும் கொடூரமான ஒரு நிகழ்வே. இவை அனைத்திற்கும் காரணம் ஒரு மனிதனின் வெறிச்செயல் என்று தான் சொல்லவேண்டும்.

அன்புடன்.     

தேவேந்திரன் ராமையன் 
19 டிசம்பர் 2022                      


Saturday, 17 December 2022

ஷேக்ஸ்பியர் - வாழ்க்கை வரலாறு ஆசிரியர் என். சொக்கன்

 

ஷேக்ஸ்பியர் - வாழ்க்கை வரலாறு 

ஆசிரியர் என். சொக்கன் 

கிண்டில் பதிப்பு

விலை : ரூபாய்  50

பக்கங்கள் 109


என். சொக்கன் அவர்களின் புத்தகங்கள் வாசிக்க வாசிக்கத் தொய்வே இல்லாத அளவிற்கு ஏராளமான விவரங்களைச் சொல்லிச்செல்வார். அந்த வரிசையில் இந்த புத்தகம் ஒன்றாகவே இருக்கிறது. 

கிட்டத்தட்ட ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒருவரை பற்றி விபரங்கள் சேகரிக்க எத்தனை மெனக்கெடல் தேவைப்படும். அத்தனையும் சாத்தியப்படுத்தி ஒரு அருமையான வரலாற்று புத்தகமாக இந்த "ஷேக்ஸ்பியர் - வாழ்க்கை வரலாற்றினை "  நமக்குக் கொடுத்திருக்கிறார் ஆசிரியர்.

தனது படிப்பை முழுவதுமாக முடிக்காத      ஷேக்ஸ்பியர் பிற்காலத்தில் ஒவ்வொரு மாணவரும் அவரை படிக்காமல் இருப்பதில்லை என்ற ஒரு வரலாறு படைத்தது சென்றிருக்கிறார் என்றால் அது அவரைமட்டுமே அதுவும் பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது இவரைப் பற்றிய வாசிப்பு.  

காலங்களால் அழிக்க முடியாத காவியங்களை இந்த உலகிற்குக் கொடுத்தது மட்டுமல்லாமல் அவரின் நாடகங்களை பெரும்பாலும் மக்கள் இன்றளவும் அரங்கேற்றி கொண்டே  இருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது. அதனால் தான் என்னவோ இவரை எல்லாக் காலகட்டங்களுக்கான மனிதர் என்று அழைக்கின்றனர்.

1564 ல் ஸ்டார்ட்போர்ட் என்ற ஊரில் பிறந்த இவர் தனது இளமைக் காலத்தில் பள்ளிப்படிப்பு கூட தொடரமுடியாத நிலையில் தனது குடும்ப வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். ஆனால் அவரிடம் எப்போது இலக்கியத்தின் மீது ஒரு நாட்டம் இருந்தது. அப்போதெல்லாம் அவர் பகுதிக்கு வரும் நாடகங்களைத் தவறாமல் பார்ப்பதுமட்டுமில்லாமல் அவற்றைக் கூர்ந்து கவனித்துவந்தார். இவரின் பிறந்த தேதி மற்றும் பெரும்பாலான குறிப்புகள் யுகத்தின் அடிப்படையில் தான் நாம் தெரிந்துகொள்கிறோம் என்பது ஒருபக்க இருக்க மற்றொரு பக்கம் பெரும்பாலான கருத்துக்கள் வெளிவருகிறது. என்னவாக இருந்தாலும் அவர் காலத்தால் அழிக்க முடியாத ஒரு கலை மேதை என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் இவரின் நாடகங்களும் இலக்கியங்களும் மேடையேறும் என்பது தவிர்க்கமுடியாத ஒரு உண்மை என்று தான் சொல்லத்தோன்றுகிறது.

இவரின் கற்பனையின் ஊற்றில் வந்த நாடகங்கள் 37.  மேலும் இவர் நடத்திய "கிங்ஸ் மென்" என்ற நாடகக் குழு பிரபலமானது. இவர்களின் குழு ஏறாத மேடைகள் இல்லையென்றுதான் சொல்லவேண்டும்.    


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

06 டிசம்பர் 2022 

   

 

வாசகர்கள் விமர்சகர்கள் - ஆசிரியர் : வல்லிக்கண்ணன்

 வாசகர்கள் விமர்சகர்கள் 

ஆசிரியர் : வல்லிக்கண்ணன் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 99

பக்கங்கள் 131


இந்த புத்தகத்தின் ஆசிரியர் வல்லிக்கண்ணன் (ரா.சு. கிருஷ்ணசாமி) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். இவரது தந்தை ரா.மு. சுப்பிரமணிய பிள்ளை, தாய் மகமாயி அம்மாள். எழுத்தாளராக வேண்டும் என்பதற்காகவே அரசுப் பணியிலிருந்து விலகியவர். அரசுப் பணியிலிருந்து விலகிய பின்னர் தொடக்கத்தில் இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். பின்னர் சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை என ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார்.  இவர் காலகட்டத்தில் வாசகர்கள் மனநிலை எப்படி இருந்தது அதே சமயம் அவர்களுக்கான எழுத்துக்களை பெரும்பாலான பத்திரிக்கைகள் கொடுத்ததா இல்லையா என்றும் அதே சமயம் விமரிசகர்கள் எப்படி தங்களது பார்வையினை கொண்டிருந்தார்கள் என்பதையும் மிகத் தெளிவாகவும் பல்வேறு விதமான விவரங்களுடன் அருமையாகத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார். 

இந்த புத்தகம் 1987ல் முதல் பதிப்பாக வெளிவந்தது. அந்த காலகட்டத்தில் எவ்வாறு வாசர்கள் மற்றும் விமர்சகர்கள் இருந்தார்கள் என்பதையும் அவற்றில் என்னமாதிரியான குறைபாடுகள் மற்றும் நன்மைகள் இருந்தன என்பதையும் பற்றி தனது தரப்பு நிலையினை மிகவும் விரிவாக விளக்கியிருக்கிறார் ஆசிரியர் வல்லிக்கண்ணன்.  இவர் பெரும்பாலாக 1930 லிருந்து 1970 வரையினால தனது கண்ணோட்டத்தினை மிகவும் பல்வேறு விதமான குறிப்புகளுடன் தனது  ஆதங்கத்தையும் அதே சமயம் தனது தரப்பு நியாயத்தினையும் இந்த நூலின் வழியே பதிவு செய்திருக்கிறார்.

இந்த நூலினை வாசித்த போது, இவர் கூறும் கருத்துக்கள் அனைத்தும் எல்லாக்காலகட்டத்திலும் பொருந்துவதாகவே இருக்கிறது.

ஆரம்பக்காலத்தில் பத்திரிக்கைகள் எவ்வாறு நடத்தப்பட்டது என்பதிலிருந்து அவைகள் வாசகர்கள் என்னவெல்லாம் எதிர்பார்த்தார்கள் என்பதையும், அதே சமயம் வாசகர்கள் எப்படிப் பட்ட பத்திரிக்கைகளை வசிக்கின்றனர் என்பதும் அவர் சொல்லும் விதம் அருமையாகவே இருக்கிறது.

1930  மற்றும் 1940 களில் வெளி வந்த பல்வேறு சிறுபத்திரிக்கைகள் அவற்றில் என்னவெல்லாம் இருந்தது, மற்றும்  எவ்வாறு அந்த பத்திரிக்கைகள் தங்களின் இருப்பை காத்துக்கொள்ள என்னவெல்லாம் செய்தது என்பது அதாவது சினிமா செய்திகள்,நடிகர் நடிகைகள் பற்றிய கிசுகிசு செய்திகள் எனப் புறம் மற்றொரு புறம் பிளாக் மெயில் செய்யும் விதமான செய்திகள் என மக்களை ஒரு விதமான போதைக்குள் தள்ளி தங்கள் பத்திரிகைகளை வாசிக்க வைத்தனர் என்கிறார். இதுபோன்ற பத்திரிகைகளுக்கு வாசகர்கள் நீண்ட வரிசையில் நின்று பத்திரிகை வாங்கி சென்றார்கள் எனவும் மேலும் பிரதி கிடைக்காவிட்டால் வடைக்கு எடுத்துப் படிக்கும் பழக்கமும் இருந்தது என்கிறார்.

அதே நேரத்தில் தொடர்கதைகள் வெளிவரத் தொடங்கியது, அதன் வழியாகவே பெரும்பாலான வாசகர்கள் தங்கள் வசம் வைத்திருந்ததாக பல்வேறு பத்திரிகைகள் இருந்தது. ஆரம்பத்தில் அ.மாதவையா, மாயூரம் வேதநாயகப்பிள்ளை, வத்தலக்குண்டு ராஜமய்யர் என இவர்கள் எழுதிய தொடர்கதைகள் பிரபலமானது. இவற்றைத் தொடர்ந்து கல்கி அவர்களின் தொடர்கதை அதிகளவில் வெற்றிகண்டது. கல்கி ஆனந்த விகடனில் தொடர்கதை எழுதிவந்தார் பிறகு விகடனில் இருந்து பிரிந்து வந்து கல்கி என்ற என்ற பத்திரிக்கையினை ஆரம்பித்தார் அவற்றில் தந்து தொடர்கதையைத் தொடர்ந்தார் அதுவும் சரித்திர நாவல், இது பெரும் வெற்றியினை கண்டது.

மனோரஞ்சிதம் என்ற ஒரு பத்திரிக்கை வடுவூர் கே.துரைசாமி அவர்களின் நாவல்களைத் தொடர்கதையாக வெளியிட்டது மற்றும் வை.மு.கோதை  அவர்களின் கைதிகளை ஜகன்மோகினி என்ற மாதப் பத்திரிக்கை வெளியிட்டது இதன் விளைவாக ஏ.கே. செட்டியார் ஆரம்பித்தது குமாரி மலர் என்ற மாதப்பத்திரிக்கை இதன் மூலமாகத் தனது பயண கட்டுரைகளை வெளியிட்டார் செட்டியார்.

இதைப்போலவே பல்வேறு தினசரி பத்திரிக்கைகள் வெளிவந்தது, அவற்றிலும் கூட சினிமா செய்திகள், வதந்திகள், மருத்துவக்குறிப்புகள்,ஜோதிடம் என வாசகர்களைக் கவரும் வகையில் கட்டுரைகள் இடம்பெற்றிருந்தது என்கிறார்.

அதேபோல, பெரியார், அண்ணா போன்றவர்களின் வரவும் அவர்கள் வெளிப்படுத்திய கருத்துக்கள் வாசகர்களின் மனதில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியது, அதன் விளைவாக பெரும்பாலும் வாசகர்கள் இவர்களின் எழுத்துக்களை விரும்பி படித்தனர். 

இந்த காலகட்டத்தில் பெரும்பாலான பத்திரிக்கைகள் வணிக நோக்குடன் இயங்கிவந்தது என்றும் ஒரு சில பத்திரிக்கைகள் மட்டுமே வாசகர்களுக்காக என இயங்கிவந்தது  என்கிறார். பொழுதுபோக்கிற்காக வாசிப்பவர்களைக் கவரும் விதமாக பல்வேறு பத்திரிக்கைகள் வெளிவந்துகொண்டேதான் இருந்தது.

அதேகாலகட்டத்தில் விமர்சகர்கள் எவ்வாறு இருந்தனர் என்றும் தங்களது  கருத்துக்களை எவ்வாறு வெளிப்படுத்தினார்கள்.  பல்வேறுவிதமான விமர்சகர்கள், ஒரு சாரார் தங்களுக்குப் பிடித்த ஆசிரியர்களின் நூல்களை ஒருவிதமாகவும் அதே சமயம் பிடிக்காத ஆசிரியர்களின் நூல்களை வேறுவிதமாகவும் விமர்சனம் செய்தார்கள் என்கிறார்.          

அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

13 டிசம்பர் 2022               

வாசிப்பது எப்படி? ஆசிரியர் - செல்வேந்திரன்

 வாசிப்பது எப்படி?

ஆசிரியர் - செல்வேந்திரன் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 99

பக்கங்கள் 94



நீண்ட நாட்களாக இந்த புத்தகத்தினை வாசிக்கவேண்டும் என்ற ஆவல் இருந்தது. அது இன்று நிறைவேறிவிட்டது. என்னதான் இருக்கிறது இந்த புத்தகத்தில் என்று வாசிக்கும் பொழுது ஒவ்வொன்றும் நம்மை ஆழ்ந்த சிந்தனைகளைச் சிந்திக்க ஒரு அடித்தளமாக இருக்கிறது.

நம்மில்  பெரும்பாலோனோர்கள் நமக்கு எல்லாமே தெரியும் என்ற சிந்தனையுடன் எப்போதும் திரிவது வழக்கம். ஆனால் உண்மையில் அது சரியானதா என்றால் விடையேதும் நம்மிடம் இருக்காது அதுதான் நிதர்சனமான உண்மை நிலவரம், இது சில நேரங்களில் கலவரங்களாகக் கூட மாறிப்போயிருக்கும்   ஏனெனில் அது வீண் விவாதங்களால் ஏற்படும் விபரீதங்கள்.

வாசிப்பு நமது அறிவுக்கு ஒரு பெரிய வாசலாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

// ஏன் வாசிக்க வேண்டும் என்கிற கேள்விக்கு ஆசிரியரின் முதன்மையான பதில் "கூமுட்டையாக இல்லாமல் இருப்பதற்கு நீ வாசித்துத்தான் ஆகவேண்டும்" என்கிறார்.//

//சந்தர்ப்பங்கள் காற்றில் மிதக்கின்றன, அவற்றைச் சுவாசிக்கத் தேவை வாசிப்பு என்கிறார்// - நமது இளைய தலைமுறை மற்றும் நம்மில் பெரும்பாலோனோர் நமக்கு முன்னே இருக்கும் பெரும்பாலான நலத்திட்டங்கள்,வேலை வாய்ப்புகள் மேலும் பல்வேறு விதமான திட்டங்கள் எல்லாவற்றையும் நாம் தெரிந்து கொள்வதே இல்லை என்பதே உண்மையான நிலை. இன்றளவும் நம்மில் எத்தனைப் பேர் நாளிதழ் வாசிக்கின்றோம் என்ற கேள்விக்குப் பதில் பெரும்பாலும் இல்லை என்பதே தான் இருக்கும்.

ஆற்றில் குதித்து விட்டால் கரை சேரவேண்டும் என்றால் நீந்தியாக வேண்டும், ஒவ்வொரு கணமும் கை மற்றும் கால்களை அசைத்துக்கொண்டே முன்னேற வேண்டும் அதுபோலவே தான் நாம் ஒவ்வொரு நாளும் நமது அறிவினை வளர்த்துக்கொள்ள வேண்டும் அப்படி இருந்தால் தான் இந்த போட்டி நிறைந்த  உலகின் ஒரு வெற்றியாளனாக வலம் வரமுடியும் என்பது தவிர்க்க முடியாத ஒரு நிலை. அதற்காகவாவது நாம் வாசிக்க வேண்டும் என்பது கட்டாயம் ஆகும்.

வாசிப்பு என்பது இன்று நாம் அடிமையாகி வாசிக்கும் முகப்புத்தகம்இன்ஸ்டாகிராம்டிவிட்டர்வாட்ஸாப் போன்றவற்றில் வரும் அவதூறுகளையும், சினிமா மற்றும் கேளிக்கை நிறைந்த செய்திகளையும் வாசிப்பது அல்ல வாசிப்பு,வாசிப்பு நமது அறிவுக் கண்ணைத் திறந்து நமக்குத் தேவையான எத்தனையோ செய்திகள்,விவரங்கள் நிறைந்து கிடக்கிறது அவற்றை மட்டும் கிரகித்து கொள்வதே ஆகச் சிறந்த வாசிப்பாகும். அதனால் முற்றிலும் கவனம் சிதறவேண்டாம் என்று சொல்லவில்லை மற்றவற்றை ஊறுகாய் போலவும் தேவையானவற்றை உணவு போலவும் எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்கிறேன்.


நூல்கள் அளிக்கும் சுவாரஸ்யம் பற்றி ஆசிரியர் இவ்வாறாகக் கூறுகிறார். //ஒரு வாழ்க்கைக்குள் ஓராயிரம் வாழ்க்கை வாழும் நிகர் அனுபவம். வாழ்நாள் முழுக்க உடன் வரக்கூடியது. வாழ்வில் உக்கிரமான தருணங்களில் மனதின் அடியாழத்திலிருந்து எழுந்து வருவது. நாம் வாழும் வாழ்க்கைக்கு மேலும் நுண்ணிய அர்த்தங்களை சேர்ப்பது. இந்த வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்கும் பெருக்கிக்கொள்வதற்கும் வழிகாட்டுகிறது.// இவ்வாறான சிறப்புகளை டிவைசைகளால் ஒரு போதும் கொடுத்துவிடமுடியாது என்கிறார்.                    

//மேலும் நீங்கள் ஒரு நல்ல வாசகன் எனில் இன்னொருவனை வாசிக்கச் சொல்லாதீர்கள் மாறாக நீங்கள் வாசித்ததைச் சொல்லுங்கள் போதும் என்கிறார்// - இதைத்தான் நமது வாசிப்பை  நேசிப்போம் குழுமம் செய்கிறது.       

வாசிப்பு என்பது நமக்கான அறிவு வாசலைத் திறந்து நம்மை வேறொரு உலகிற்குக் கூட்டிச்செல்லும் என்பதில் எந்த ஐயமுமில்லை. வாசிப்போம் வாசிப்பினை ஒரு குறிக்கோளாக வைத்துக் கொண்டு வாழ்வோம்   


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன்

17 டிசம்பர் 2022   

Friday, 16 December 2022

நூறு நாற்காலிகள் - ஆசிரியர் - ஜெயமோகன்

நூறு நாற்காலிகள் 

ஆசிரியர் - ஜெயமோகன் 


நூறு நாற்காலிகள் - ஓர் பழகுடியினத்து சிறுவன் ஆசிரமத்தின் உதவியுடன் சிவில் சர்விஸ் வரை படித்து தனக்கான பணியில் சேரும்போது அவனுக்கு அது இட ஒதுக்கீட்டின் வழியே தான் கிடைத்தது என்று ஆதிக்க சாதியினர் பார்ப்பது ஒருபுறமும், அவன் மீது அலாதி பாசம் கொண்ட அவனது தாய், தெருவில் அலைந்து எச்சில் சோறு எடுத்துத் தின்று மேலும் பிச்சை எடுத்து வாழும் வாழ்க்கை ஒரு புறமும் அவனது பதவியின் மீது காதல் கொள்ளும் ஒரு உயர் சாதிப் பெண் திருமணம் செய்துகொள்வதும் என அவனது வாழ்க்கை மூன்று புறமும் இருந்தும் இடைவிடா தாக்குதல்களுக்கு ஆளாகித் தான் ஒரு நேரத்தில் தனித்து விடப்பட்டவன் போல நினைக்கும் அவனைப் பற்றிய   ஆழ்ந்த கருத்தை மிகவும் வலிமையான சொற்களால் அருமையாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். உண்மையிலே மனதில் ஒரு விதமான வலியினை ஏற்படுத்திதான் செல்கிறது ஒவ்வொரு வார்த்தையும். 

நாடோடியாகத் திரியும், நாயாடி என்ற ஒரு இனத்திலிருந்து  ஒரு சிறுவன் வயிற்றுச் சோற்றுக்காக ஒரு ஆசிரமத்தின் வாசலில் வந்து சேருகிறான்  ஆனால் அந்த ஆசிரமம் அவனுக்கு உணவு கொடுத்துக் கூடவே  அவனைப் பெரிய படிப்பு படிக்கவைக்கிறார். அதற்கு பாவக்கணக்காக அவன்  அந்த கணத்திலிருந்து அவனுடைய அம்மாவை விட்டு விலகி அந்த ஆசிரமத்திலே  தங்கிப் படிக்கிறான். 

அவன் பட்டம் படிக்கும் வரையில் அம்மாவைப் பார்க்காமலே தனது படிப்பைப் படித்துமுடிக்கிறான். பட்டம் படித்து முடித்து பிறகு அவன் சிவில் சர்வீஸ் படித்து அதற்கான நேர்காணலுக்கு அலுவலகம் செல்கிறான். 

அப்படியாக அவன் சந்திக்கும் முதல் அடி அவனது சாதியினை முன்னிறுத்தித் தான் ஆரம்பிக்கிறது. அப்படிதான் அங்கிருந்து அவனது வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு நிகழ்வும் ஒரு விதத்தில் அவனிடம் அவனுடைய சாதியினை முன்னிறுத்தியே சொல்லிக்காட்டுகிறது.

சிவில் சர்வீஸ் பணியிலிருந்தாலும் நீ எங்களுக்கெல்லாம் கீழ் தான் என்று அவனுக்குக் கொடுக்கும் நாற்காலியிலிருந்தே ஆதிக்க சாதியினர் சொல்கின்றனர்.

அவன் காதல் திருமணமும் செய்துகொள்கிறான்,   அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறக்கிறது. நன்றாக ஓடிக்கொண்டிருந்த அவனது வாழ்வில் இடை இடையே வந்துபோகும் அவனது அம்மா.

அவ்வாறாக வரும் அவனது அம்மா செய்யும் ஒவ்வொரு செயலும் அவனுக்கும் அவனது மனைவிக்கும் இடையே ஒரு பெரிய தாக்கத்தினை செய்கிறது. அவன் தாயோ வீதியில் சுற்றித் திரிபவள் அவள் எப்படி ஒரு கூட்டுக்குள் அடைபட்டுக் கிடப்பாள் அவளுக்கு அவளது சுதந்திர உலகமே தேவைப்படுகிறது ஆனால் அவள் ஒவ்வொரு முறையும் செய்யும் பல்வேறு காரியங்கள் முகம் சுழிக்க வைக்கிறது.

அவள் தனது மகன் காப்பானைச் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் அவள் தனது பலம்கொண்ட குரலில் அலறி கேட்கும் ஒரு சில வார்த்தைகளை ஒவ்வொரு முறையும் வாசிக்கும் பொது மனது ஒரு பக்கம் வலிக்கத்தான் செய்கிறது அதே சமயம் அவளின் வலியானது அவள் வார்த்தைகளாக வெளிப்படுத்துகிறாள்.

ஏலே மக்கா காப்பான், தனக்கு அந்த நாற்காலியும், சட்டையும், அந்த வெள்ளைத்தோல் பெண்ணும் வேண்டாமடே, ஏன் கூட வந்துடுடா காப்பான் நின்ன நான் பாத்துக்கிறேன் என்று மீண்டும் மீண்டும் சொல்லும் வார்த்தைகள் நம்மை ஒவ்வொரு முறையும் ஏதோ ஒன்றை நம்மை விட்டு விலகிச் செல்வதுபோல ஒரு வித உணர்வு  தோன்றுகிறது.

அவனுக்கும், அவனது பணியில் ஏற்படும் ஒவ்வொரு அடியும் ஒரு சேர ஒரு நேரத்தில் அவனுக்குள்ளேயும் அவனது மனம் சொல்லும், ஒரு விதத்தில் அம்மா சொல்வது அத்தனையும் உண்மைதானோ என்று மீண்டும் மீண்டும் அவனது மனதுக்குள் ஒரு போராட்டம் நடத்திச் செழிக்கிறது.

இறுதியில், அவனது அம்மா ஒரு இடத்தில் அதும் ஹாஸ்பிடல் என்று கூடச் சொல்லமுடியாத இடத்தில் இருந்து மரண படுக்கையிலிருந்து மீட்டுவருகிறான். அங்கேயும் அவன் சந்திக்கும் மருத்துவர், தனது சாதியின் பெயரால் வெறும் பேருக்கு மட்டுமே வேலை செய்ய அனுமதிக்கிறார். இதுவும் சாதியின் என்று கொடிய பேயின் கையில் சிக்கித் தவிக்கும் மனநோயாளிகளினால் அரங்கேற்றப்பட்ட அவலம் என்று தான் சொல்லவேண்டும்.

அவன் ஒவ்வொரு முறையும், தனது  மக்களிடம் இருந்து பெறுகின்ற மனுக்களுக்குத் தன்னால்  ஏதும் செய்யமுடியவே இல்லைய என்ற தனது இயலாமையை தனது மன வருத்தம் கொண்டு அது நேரும்  ஒவ்வொரு கணமும் அவன் தனக்குள்ளே அழுது சாகிறான்.

தனக்குப் படிப்பு இருந்தும், திறமை இருந்தும் தனக்கான நாற்காலி கிடைக்காதது என்ற உண்மை நிலையினை புரிந்துகொள்கிறான்.  இது என்று தீரும் என்ற நிலை புரியாமலே செல்கிறது..... 


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன்

16 டிசம்பர் 2022             



         

Thursday, 15 December 2022

யாருக்காக அழுதான்? - ஆசிரியர் - ஜெயகாந்தன்

 யாருக்காக அழுதான்? 

ஆசிரியர் - ஜெயகாந்தன் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 117

பக்கங்கள் 73



ஜெயகாந்தனின் எழுத்துக்கள் பிரமிக்க வைக்கும் என்பார்கள் அது உண்மைதான். நான் இந்த புத்தகத்தினை 2020 ல் வாங்கினேன் ஆனால் முதல் சில பக்கங்கள் வாசித்து விட்டு ஓரம்கட்டிவைத்துவிட்டேன். ஏனோ இன்று என் கண்ணில் பட்டது உடனே வாசித்துவிட்டேன் அதுவும் ஒரே நாளில். 

வாசித்து முடித்த இறுதிக்கணத்தில் அவனும் அழுகிறான் கூடவே நானும் அழுதேன் இதுதான் உண்மை.

வாருங்கள் கதைக்குள் செல்வோம்.      அந்த ஊரின் ரயில்வே நிலையம் அருகில் வெறும் நான்கு அறைகள் கொண்ட ஒரு விடுதி இருக்கிறது. அது முதலியாருக்குச் சொந்தமானது அங்கு வரும் வாடிக்கையாளர்களை கவருவதற்காகவே  மலிவு விலையில் உணவு வழங்கப்பட்டுவருகிறது .

இந்த கதை ஒரு நாள் இரவில் ஆரம்பித்து மறுநாள் மாலையில் முடிகிறது. எத்தனை கனமான இதயம் கொண்ட மனிதர்கள் வந்து செல்கிறார்கள்.

கதை இருவருக்கும் இடையே ஏற்படும் உரையாடல்களைக் கொண்டு பாதி முடிந்துவிடுகிறது. மறுநாள் விடுதி விடுமுறை என்பதால் பெரும்பாலான வேலைக்காரர்கள் அன்று இரவு  இரண்டாம் ஆட்டம் சினிமா பார்க்கச் சீவி சிங்காரித்துக் கொண்டு கிளம்பிவிடுகிறார்கள். ஆனால் கோவிந்தசாமி நாயுடுவும், சோசப்பு மட்டும் போகவில்லை. அவர்களை ஆச்சரியமாகப் பார்த்த முதலியார் நாயுடுவிடம் கேட்கிறார் ஏன் நீ மட்டும் போகவில்லை என்று அது அவர் மறுநாள் அவருடைய குடும்பத்தைப் பார்க்கக் கிராமம் செல்லவேண்டி இருப்பதால் சினிமாவின் மீது ஆர்வம் இல்லை  என்கிறார் ஆனால் இது எதையும் பொருட்படுத்தாமல் சோசப்பு தனது வேலையில் அந்த நேரத்திலும் மேசை எல்லாத்தியும் சுத்தம் செய்துகொண்டிருக்கிறேன்.

எப்போதும் அமைதியாகவே இருக்கும் சோசப்பு அன்று மூன்று குரங்குகள் சேர்ந்து இருக்கும் ஒரு குரங்கு பொம்மை கையில் வைத்துக்கொண்டு தூங்கப்போனான். அவனருகில் தூங்க வந்த கோவிந்தசாமி நாயுடு, சோசப்பிடம் கேட்கிறார்ஏன்டா நீ எப்போதுமே கவலையே இல்லாமல் இருக்கிறாயா, எப்படிடா என்றார். அவனின் சுபாவம் அவன் யாருக்கும் தீங்கு செய்யமாட்டான், அதுபோலவே அவன் எப்போதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்புடன் வேலை செய்துகொண்டே இருப்பான்.  அவன் தனது மனதில் பூட்டி வைத்திருக்கும் பல்வேறு ரகசியங்களை மனம் திறந்து சொல்கிறான். அவன் முருகேசனிலிருந்து எப்படி சோசப்பானான் பிறகு அவனது மனைவி, அவனின் நண்பன் தனது மனைவியின் கணவனானது எனத் தனது முகத்துக்குள் மறைத்து வைத்திருந்த சோகங்கள் அணைத்துக் கொட்டித்தீர்த்தான் அத்தனையும் கேட்ட கோவிந்தசாமி நீ சாதார மனிதன் இல்லடா நீ உண்மையாகவே ஆண்டவன் தான் என்று மனமுருகிச் சொல்கிறார்.

அவனுக்கு அழுகையே தெரியாது, அழித்ததும் கிடையாது. ஆனால் அன்று இரவு ஒரு ஆள் முழு போதையுடன்  ரூமிற்கு வருகிறான், அவன்  போதையில் தனது பரிசை தவறிவிடுகிறான்.  அந்த பரிசை எடுத்துக்கொடுத்த சோசப்பிடம் காலையில் மறக்காத கொடுடா என்று சொல்கிறான் ஆனால் அவன் அப்போதே முதலியாரிடம் கொடுத்துவிடுகிறேன்.

மறுநாள் காலையில், எழுந்த அவன் தனது பர்ஸை காணோம் என்றும் எங்கோயோ குடிபோதையில் தவற விட்டுவிட்டோனோ என்று கேட்கிறான். அவன் நேற்றிரவு தவறவிட்டதை  மறந்துபோனான் என்று நினைத்துக் கொண்ட முதலியார் அந்த பர்ஸை மறைத்துவைத்துவிடுகிறார்.

அவன் சந்தேகமெல்லாம் சோசப்பின் மேல் தான், இதனால் சோசப்பு பெரும் சோதனைக்கும் உள்ளாகிறான், அடிக்கிறார்கள் ஆனாலும் அவன் எதுவும் பேசாமல் மௌனமாகவே இருக்கிறான். முதலாளி முதலியார் தந்து தேவைக்குப் பணம் வேண்டுமென்று இருந்ததால் அந்த பர்ஸை மறைத்துவைத்து விடுகிறான். இறுதியில் ஒரு பெரும் நாடகத்திற்குப் பிறகு மாலை ஊருக்குப் போன கோவிந்தசாமி திரும்பி வருகிறான். சம்பவத்தைத் தெரிந்துகொண்ட அவன்,சோசப்பு ஒரு தெய்வமடா அவனையா திருடன் என்று சொல்கிறீர்கள் என்று ஆவேசமடைந்த தருணத்தில் முதலியார் எப்படியோ பர்ஸை கொண்டு அவனது அறையில் வைத்துவிடுகிறார்.

இறுதியில் அவனது பர்ஸை கண்டவன், சோசப்பிடம்  மன்னிப்பு கேட்கிறான் ஆனால் அவன் அப்போதும் மௌனமே சாதிக்கிறான்.

அதுவரையில் அழவே தெரியாதவன், தனது முழு பலம் கொன்டு வாய்விட்டுக் கதறி அழுகிறான். 


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

15 டிசம்பர் 2022                        

        


Wednesday, 14 December 2022

காஷ்மீர்: அரசியல் - ஆயுத வரலாறு ஆசிரியர் : பா. ராகவன்

 காஷ்மீர்: அரசியல் - ஆயுத வரலாறு

ஆசிரியர் : பா. ராகவன் 
கிண்டில் பதிப்பு 
விலை ரூபாய் 125
பக்கங்கள் 339

ஒரு தேசம் - மூன்று பக்கமும் நசுக்கபடுகிறது. எப்படி தாக்குப்பிடிக்கும், ஒரு நிலத்தின் மீது எத்தனை அத்துமீறல்கள். அதுதான் காஷ்மீரின் வரலாறு.  ஆங்கிலேயர் காலத்தில் கூட அமைதியாக இருந்த இந்த தேசம் இப்போது கலவர பூமியாக மாறியது எப்படி என்ற கேள்விகளுக்கு பல்வேறு வரலாற்றுச் செய்திகளை இந்த நூலின் வழியே நமக்குக் கொடுத்திருக்கிறார் ஆசிரியர்.

ஆம், மன்னராட்சி நடந்த காலத்தில் இந்த பூமி அமைதியாகவே இருந்தது. ஆங்கிலேயரின் காலத்தில் இந்த தேசத்திற்கென விலை கொடுத்து வாங்கி தந்து சொந்த நாடக வைத்திருந்தவர் மன்னர். 

காலப்போக்கில் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாகி போனதால் அங்கே மத பிரச்சினை சற்று தலை தூக்க ஆரம்பித்தது. இந்த பிரச்சினை தேசத்தில் மக்களாட்சி வேண்டும் என்ற ஒரு மந்திரத்தினை சொல்லிக்கொண்டே கலவரத்தில் தொடங்கியது.

இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் விடுதலை பெற்ற பிறகு இவற்றுக்கு இடையில் சிக்கிக்கொண்டிருக்கும் இந்த பூமி யாருக்குச் சொந்தம் என்று இவர்கள் சோறுபோட்டுச் சாப்பிட ஆரம்பித்தனர். ஆனால் உண்மையாகவே காஷ்மீர் மக்கள் தங்களுக்கென ஒரு சுதந்திர தேசம் வேண்டும் என்றுதான் கேட்டுக்கொண்டிருந்தனர்.

நேரு மற்றும் ஜின்னா காலத்தில் ஆரம்பித்த இந்த பிரச்சினை இன்றளவும் தீராத ஒரு பிரச்சினையாகவே தான் இருக்கிறது. அதற்கான காரணம் என்னவாக இருக்கமுடியும்  என்பதையும் அதற்கான பல்வேறு ஆதாரங்களையும் அடுக்கி வைக்கிறார் ஆசிரியர்.

நேரு, லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, வாஜ்பாயி,வி.பி.சிங் என பல்வேறு பிரதம மந்திரிகள் வந்தார்கள் சென்றார்கள் ஆனால் இந்த பூமியின் பிரச்சினை தீர்த்ததாக இல்லை.

சுதந்திரத்திற்குப் பிறகு காஷ்மீர் யாருடன் சேருவது என்ற போட்டியில் பாகிஸ்தான் தரப்பு முன்னெடுத்தது மதம் ஏனெனில் காஷ்மீர் பெரும்பாலும் முஸ்லீம் மக்கள் இருக்கிறீர்கள் அதனால் இது எங்கள் தேசம் என்றது, அதே சமயம் இந்தியா பூகோள ரீதியாகவும் மற்றும் மன்னர் எழுதிக்கொடுத்த ஆவணத்தின் அடிப்படையிலும் இந்த தேசம் எங்கள் நாட்டின் ஒரு மாநிலம் அவ்வளவுதான் என்றது. ஆனால் இங்கே கவனிக்கக் கூடிய விஷயம் இந்த இரண்டு பங்காளிகளும் மக்களின் ஆசை என்ன என்பதைக் கேட்கவே இல்லை அதற்கான எந்த வித முன்னெடுப்புகளை எடுத்ததாகத் தெரியவில்லை.  இவர்கள் இருவருக்கும் இருந்த அச்சம் வாக்கெடுப்பு நடத்தினால் அவர்கள் தனி தேசம் வேண்டுமென்றால் என்ன செய்வது அதனாலே கூடிய வரையில் இவர்களாகவே ஆட்சி செலுத்தினர். மக்களாட்சி என்ற முறையில் நடந்தது பல்வேறு ஆட்சி.

பாகிஸ்தான் ஒரு பக்கம் தனது நாடு என்று சொல்லிக்கொண்ட சுதந்திர காஷ்மீர் என்று வைத்துக்கொண்டு தங்களின் பொம்மை ஆட்சியாளர்களின் உதவியாக அங்கிருக்கும் வளங்களை எல்லாம் தங்களுடையதாக்கிக் கொள்கிறது மட்டுமல்லாது அங்கே பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டு தங்களுக்குச் சாதகமாக அந்த பகுதியினை தக்கவைத்துக்கொண்டுள்ளது.

இந்த தேசத்தின் வரலாற்றில் இன்றளவும் நடந்துகொண்டிருக்கும் பிரச்சினை இது யாருக்குச் சொந்தமான பூமி என்றுதான். ஒரு புறம் தனி சுதந்திர தேசம் வேண்டுமென்ற காஷ்மீர் பெரும்பான்மை மக்கள்,மற்றொரு புறம் பாகிஸ்தான், வேறொரு புறம் சீன ஆக்கிரமிப்பு, ஆனால்  சட்டத்தின் படி இந்த பூமி இந்தியாவின் ஒரு மாநிலம்    என்பது தான் நிதர்சனமான உண்மை. இதற்கெல்லாம் என்ன முடிவு என்று விடை தெரியாத பல்வேறு போராட்டங்கள், சூழ்ச்சிகள், மேல்மட்ட பேச்சுவார்த்தைகள், மாநாடு, அமைதி பேச்சுவார்த்தைகள் என ஒரு புறம்  அமைதி நிலவரங்கள் அதே சமயம் ஆங்காங்கே பொழிந்து கொண்டிருந்த குண்டு மழை என இந்த பூமியின் வரலாற்றில் குண்டு துளைக்காத இடமே இல்லையென்றே தான் சொல்லவேண்டும்.      

பாகிஸ்தான், தன்னால் முடிந்த வரை பல்வேறு விதமான இயங்களைச் சோறுபோட்டு வளர்த்து தன்பக்கம் இழுக்க முயன்றுகொண்டே தான் இருக்கிறது. அதே சமயம் தன்வசம் இருக்கும் மாநிலத்தில் தேர்தல் நடத்தி ஆட்சி செய்துவந்தது இந்தியா. 

எத்தனை போர்கள், போராட்டங்கள், குழப்பங்கள், அத்துமீறல்கள், இனக்கலவரங்கள், படுகொலைகள்,  இனத்தின் மீதான வெறி தாக்குதல்கள்,அகதிகளாகிப்போன பல்வேறு மக்கள், அண்டை தேசத்திலிருந்து வந்து ஆக்கிரமிப்புகள், சுரண்டல்கள் மற்றும் சுயநலன்களை மையமாகக் கொண்ட பல்வேறு தந்திரங்கள் என இந்த தேசம் பார்த்தது கொஞ்சம் அல்ல ஏராளமான அடையாளங்களை சுமந்துகொண்டு இந்த பூமி இன்றும் தனது இயற்கை எழிலை வைத்துக்கொண்டு பிரமிக்க வைக்கிறது.


இந்த புத்தகம் காஷ்மீரின் வரலாற்றுப் பக்கங்களை மிகத் தெளிவாக ஆராய்ந்து பல்வேறு விதமான விவரங்களை நமக்குக் கொடுத்துள்ளது.  இந்த புத்தகம் காஷ்மீர் பிரச்சினையின் முழுமையான வரலாற்றை ஆராய்வதுடன், அந்த பிரச்சினைகளை உயிர்ப்புடன்  வைத்திருக்கும் அரசியல் மற்றும் அவற்றிலிருந்து பெரும் பல்வேறு விதமான விளைவுகளையும் அதன்  ஆழங்களையும் விரிவாக ஆராய்ந்து நமக்கு ஒரு சரியான வரலாற்றுப் பதிவுகளைக் கொடுத்திருக்கிறது.


அன்புடன், 

தேவேந்திரன் ராமையன் 

14 டிசம்பர் 2022