Saturday, 20 June 2020

ஊர் திரும்புதல் -18

மன்மதரும் ரதியும் 

அவன் ஒரு  முறை ஊருக்கு வந்திருந்த போது அது   மாசி மாதம். மாசி மாதம் என்றாலே மன்மதர் கோவிலின் விழாதான் அவனுக்கு  நினைவு வந்தது.  அவன் மிகவும் ஆவலுடன் காத்திருந்தான், அவனது விடுமுறை முடிவதற்குள் விழா பார்த்துவிட்டு செல்ல வேண்டுமென்று.



திருவிழாவும்  வந்தது. ஒரே நாளில்  மன்மதர் கோவில் காப்பு கட்டி மறுநாளே விசேஷம் முடிந்து விட்டது. ஆச்சரியத்துடன் அம்மாவிடம் கேட்டான் ஏன் ஒரே நாளில் முடிந்துவிட்டது என்று.

அம்மா, "ஆமா, இப்பல்லாம்  எங்கப்பா.... இப்ப  ஊரு இருக்கிற நிலைமையில் எடுத்து கட்டி செய்ய முன்னைப்போல  ஆளு கெடையாது. எல்லாம்  டக்கு டக்குன்னுதான் செய்வேண்டியிருக்கு",   என்று  சற்று  வருத்தத்துடன் சொன்னார்கள்.

அவன் தனது சிறு வயதில் நடந்த திருவிழாவினை மெல்ல அசைபோட தொடங்கினான்.

அவனுக்கு நன்றாக அந்த  நாட்கள்  நினைவில்  இருந்தது. இந்த திருவிழா முன்பெல்லாம் பதினைந்து நாட்கள் நடக்கும். நிறைவாக பதினெட்டாம்  நாள்தான் குழியை மூடி மன்மதர் உருவம் ரதிக்கு மட்டும் தெரியும் என்று பரமேஸ்வரன் வரம் கொடுப்பார்.

ஆம், பொதுவாக மன்மதர் கோவில் எல்லா ஊர்களிலும் இருக்காது.  அவனுடைய  ஊரில்  மன்மதருக்கு  கோவில்  உண்டு. அப்படி பெருமைக்குரிய  ஊர்தான் அவன் ஊர்.  அந்த ஊரின் நடுத்தெருவின்  முகப்பில் நுழையும்போதே சாலையோரமாக  சிறியதாய், அந்தக்கோவில்   அமைத்திருக்கும். 

மாசி மாதம் வந்ததும், ஊர் பெரியவர்கள், அதிலும்  முக்கியமான நான்கு   பெரியவர்கள்,  இந்த திருவிழாவில் முக்கிய பங்கு வகிப்பார்கள். அதில் ஒருவர் மன்மதன் ரதி கதையினை சொல்லி ஒவ்வொரு நாளும் பூஜை செய்பவர். இரண்டாமவர் மன்மதரும் ரதியும் ஊருக்கே காட்சி கொடுக்க சப்பரம் அழகாக வடிவமைத்து அதற்கு உருக்கொடுத்து அலங்காரம் செய்பவர். மூன்றாமவர்  இவைகள் எல்லாம் சீரும் சிறப்பாக நடக்க எல்லா வழிகளையும் முன்னின்று வழிகாட்டுபவர். நான்காவது  பெரியவர்தான் அந்த  ஊரின்  பண்ணையார், மொத்த  கிராமத்திற்கும்  முதன்மையாய்  நின்று  வழிகாட்டுபவர்.      ஆனால் அவன் ஊர் அந்த நான்கு முக்கியமான  பெரியவர்களையும்   இழந்து நிற்கிறது இன்று.  



மாசிமாதம் பிறை  கண்டவுடன் மன்மதர்  கோவிலுக்கு   காப்பு
கட்டுவார்கள்.  பின்னர் பதினைந்து நாட்கள் மண்டகப்படி  நடக்கும்.  ஊரில் உள்ள எல்லோரும் ஒரு நாளைக்கு ரெண்டு மூன்று குடும்பங்களாகவும் சேர்ந்தும், சில நாட்கள் பெரிய வீட்டில் தனியாகவும் மண்டகப்படி நடக்கும்.  அந்த பதினைந்து நாட்கள்  இரவெல்லாம் சின்ன சிறுசுகளுக்கெல்லாம்   ஒரே கொண்டாட்டம்தான்.  பதினைந்து  நாட்கள்   கழித்து பௌர்ணமி அன்று மன்மதர் எரிக்கப்படுவார். சிவபெருமான்  கோபத்திற்கு  ஆளான  மன்மதனை  அவர்  நெற்றிக்கண்   திறந்து எரித்ததை  உணர்த்துவதுதான்  இந்த  நிகழ்வு.   தேவர்களின்  வேண்டுகோளினாலும்  உலகமக்கள்  வேண்டுகோளின்படியும்  மூன்றாம்நாள்  சிவபெருமான்  மன்மதரை  உயிர்த்தெழச்செய்து   ரதிதேவிக்கு கொடுப்பார். இப்படியாக  அந்த 
விழா  முடியும். 



விழாவுக்கு  காப்பு கட்டிய நாளிலிருந்து யாரும் வெளியூரில் சென்று தங்கக்கூடாது. அது அவனது ஊரின் வழக்ககமான  சம்பிரதாயம்.


அந்த பதினைந்து நாட்களில், ஒவ்வொரு நாளும், மன்மதரின் கதையினையும் அவரின் சிறப்புகளையும் மிக அழகாக விவரித்து சொல்லிக்கொண்டே பூஜை செய்வார் பெரியவர் அந்த  முதல் பெரியவர். அவர்கள் அந்த மண்டகப்படிக்கு கொண்ட கடலை சுண்டல், பருப்பு வடை, சில நீருருண்டை போல நெய்வேத்தியங்கள் செய்வது வழக்கம்.     

அப்படியாகவே, பௌர்ணமியும் வந்தது, அன்று இரவு பெரிய விமர்சையாக அந்த வைபவம் நடந்தது.

மன்மதர் கோவிலின் அருகில் புங்கை மரத்தின் ஒரு பெரிய கிளை வெட்டி எடுத்துவரப்பட்டு, நட்டு வைக்கப்படும். அதன்  அடியில் மரத்தினால் செய்த உரல் ஒன்று  போடப்படும். அதுதான் பரமசிவன் அமரும் இடம்.  அவரின் பார்வையில் அந்த கோவிலின் முழுப்பகுதியும் தெரியும். 

உடல் முழுவதும் வெண்மையான விபூதி பூசி, வெள்ளை நிறத்தில் கோவணம் மட்டும்  அணிந்த  சிவன், தட்சணை அழித்து விட்டு அதே  உக்கிரத்துடன், அந்த உரலின் மீது அமர்ந்து தியானம் செய்துகொண்டிருக்க  அமைக்கப்படும்  ஆசனம்தான்  அந்த  உரல்.       

பௌர்ணமியின் நடு ராத்திரி நிலவின் ஒளி பரவியிருக்கும் நேரத்தில்,  அந்த ஊரின் நடுவே அமைந்திருக்கும் குளத்தில், சிவனாகவும், ரதி  மன்மதர்களாகவும் வேஷம் கட்டுபவர்களை நீராடச்செய்து,  பின்னரே  வேஷங்கள் கட்டிவிடுவார்கள்.  பரமசிவனுக்கு இடுப்பில்  ஒரு  கோவணம்  மட்டும்  உடுத்திவிட்டு, நெற்றியிலும்  உடலெங்கும்  விபூதி  பூசிவிடுவார்கள். சிவன் வேஷம்  போட்டவரை  பார்த்தாலே  கோரமாக  இருக்கும். மன்மதருக்கு உடலில்  நீல நிற வண்ணம் பூசப்படும்.  இடுப்பில்  வேட்டி கட்டிவிடுவார்கள். கூடவே ரதி வேடமிடும் ஆணுக்கு பச்சை நிறம் பூசி பாவாடை சட்டை அணிவித்து  விடுவார்கள் இருவருக்கும் அரளிச்செடியினால் செய்த வில் அம்பும் கொடுக்கப்படும்.  



குளத்தின் கரையில் வான வேடிக்கைகளும், வேட்டுகளும்  வெடிக்க, உறுமி  மேளம்  ஒலிக்க, குறவன் குறத்தி ஆட்டத்துடன் ரதி  மன்மதன்  வீதி உலா இனிதே ஆரம்பமாகும். அந்த  வீதியுலா நேரத்தில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமென,  அந்த ஊரே திருவிழாக்  கோலத்தில் களைகட்டும். 

பொதுவாக இந்த ஊர்வலத்தில் எல்லா வீட்டு ஆண்களும். சின்னச்  சின்ன பெண் பிள்ளைகளும் கலந்து கொள்வார்கள். அப்படியே ஒவ்வொரு வீட்டுக்கும் தரிசனம் கொடுத்து,  தீப ஆராதனைகள் எடுத்து முடித்துவிட்டு   விட்டு வருவதற்குள் பொழுது விடிந்து விடும்.

ஊர்வலம் முடிந்து வந்ததும், அங்கேயிருக்கும் பரமசிவனின் தவத்தை மன்மதன்  கலைத்து விட்டபடியால் கடும் கோபம் கொண்ட சிவன், அவனை தனது நெற்றிக்கண் திறந்து  எரித்துவிடுகிறார். தனது கணவனை சிவபெருமான் எரித்ததை கண்டு அழுது புலம்பிக் கொண்டிருக்கிறாள் ரதிதேவி. 




மூன்று நாட்கள் கழித்து  பரமசிவன், ரதி  அழுது புலம்புவதை காணசகியாமல் மனமிரங்கி , ஒரு வரம் கொடுக்கிறார்.  அதில் மன்மதர் ரதியின் கண்ணுக்கு மட்டும் தெரிவார். இந்த  வரம்  கொடுத்துவிட்டு  "நீ தீர்க்க சுமங்கலியாக இருப்பாய்",  என்று வாழ்த்தி மங்களத் தாம்பூலம் கொடுப்பார்.

இப்படியாக  அந்த  விழா  இனிதே  முடியும்.





ஊர் திரும்புதல் - 1

Tuesday, 16 June 2020

ஊர் திரும்புதல் - 17


பம்பரம் விளையாட்டு


அவன் அந்த மாதத்தில்  பம்பரம் விளையாட்டுக்காக பம்பரம் வாங்குவதற்கு தினமும் சிறுக சிறுக காசு சேர்த்து வைப்பது வழக்கம். அப்படித்தான் இந்த வருஷமும் அவன் தனது செலவை குறைத்து காசு சேர்த்துவைக்க தொடங்கினான். தினமும் பள்ளி கூடம் விட்டு வரும் போது 'இருக்கி பாய்' கடையில் ஒரு பம்பரம் பார்த்துவிட்டு அதனை தனக்காக எடுத்து வைக்கவும் சொல்லிவிட்டு வந்தான். ஒரு வாரத்தில் அந்த பம்பரத்தினை சேர்த்து வைத்த காசுக்கு வாங்கிவந்தான்.    




அவன் ஆசை ஆசையாய் அந்த பம்பரம் வாங்கிய சந்தோஷத்தில், வீட்டுக்கு வந்ததும் அந்த பம்பரத்துக்கு,  வேறு ஆணி அடிப்பது  என்று  திட்டம்  போட்டான். வீட்டுக்கு  வரும்போது  இருட்டிவிட்டது. ஆணியெல்லாம்  அடித்து  பம்பரத்தை  பக்காவாக  தயார்செய்து  வைத்துவிட்டான். மறுநாள் விடுமுறை நாளென்பதால், அதிகாலையிலே  நண்பர்கள் எல்லோரும் கூடி பம்பரம் விளையாட வேண்டும் என்று ஆசையின் காரணமாக இரவெல்லாம் தூங்காமல்  பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருந்தான் அவன்.    










மார்கழி மாதத்தின் அதிகாலையில் விக்ரமன் ஆற்றின் சல சல எனும் மெல்லிய சத்தத்துடன் அரையடி அளவில் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. சூரியன்  உதயமாக தொடங்கும் காலைவேளை, பனி மூட்டம்  வெண்மையான போர்வை போர்த்தியது போல் இருந்தது. இளம் மங்கையர்கள் தங்களின் தெருவில் பசுவின் சாணம் தெளித்து மார்கழி கோலம் இடுவதற்கு ஆற்றில் இருந்து தங்களின் இடுப்பில் பித்தளை குடத்தில் தண்ணீர் எடுத்து கொண்டு வந்தனர்.  அரச மரத்தில் குடியிருந்த பறவைகள் எழுப்பிய  கீச் கீச் கீச் ஒலி ஆட்கள்  கூட்டம்  கூடி கதைபேசிக்கொள்வதுபோல  கேட்டுக்கொண்டிருந்தது. கோழி கூண்டு வேண்டாம் என்று விரைப்பாக கொய்யா மரத்தின் மீது ஒய்யாரமா உறங்கி கொண்டிருந்த சேவல், கொக்கரக்கோ கொக்கரக்கோ  என்று  கூவி  விடியலை  அறிவித்தது. அவனும்  இதையெல்லாம்  கேட்டபடி  விடியலில்  வெளிச்சம்  வரக்காத்திருந்தான்.   

அந்த அதிகாலை வேளையில் அவர்கள் ஒருவருக்கொருவர் பேசுவதே காதில் கேட்காத வண்ணம் அவனது ஊரின் ராமமூர்த்தியின் ரேடியோ சர்வீஸின்  ஒலிபெருக்கியில்

'திருச்செந்தூரில்
கடலோரத்தில்
செந்தில் நாதன்
அரசாங்கம்'

என்ற தெய்வீக கானம் இசைத்து கொண்டிருந்தது.   தெருக்களில் வீடுகளின் வாசல்  விளக்குகள்  மின்ன தொடங்கியது.

அவனது ஊரின் மாணிக்கம் டீ கடையில் அடுப்புவெளிச்சம்  தெரியத்தொடங்கியது. அந்த அதிகாலையிலே அவன் மாணிக்கம் டீ கடையில் டீ குடிப்பது வாடிக்கை. அப்படித்தான் அவன் அன்று டீ குடிப்பதற்க்காக மாணிக்கம் கடைக்கு சென்றான். அறுவடைக்கு  ஆட்கள்  தேவைப்படும்  வயல்  உரிமையாளர்கள்  மாணிக்கம்  டீக்கடை  வாசலிலிருந்து  கூட்டிபோகலாம்  என்பதே  அந்த  ஊரின்  வழக்கம்.    அன்றும் வெளியூரில் இருந்து நெல் அறுவடை வேலைக்காக கும்பல் கும்பலாக வந்து அந்த டீ கடையின் ஆட்கள்  காத்திருந்தார்கள். இது ஒவ்வொரு மார்கழியிலும் கடைசி வாரத்தில் வழக்கமாக நடக்கும் நிகழ்வுதான். மாணிக்கம்  கடை  டீயுடன்  அவனின் அந்த நாள் இனிதே தொடங்கியது.

அந்த  மார்கழி  மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில் இருந்து காலையில் பிள்ளையார் கோவிலுக்கும்  மாரியம்மன் கோவிலுக்கும்  பூஜை  நடக்கும். அந்த  பூஜைக்கு  பிறகு  வெண் பொங்கல் பிரசாதம் கொடுக்கப்படும்.  அந்த பொங்கலுக்காகவும் மார்கழி மாதத்தின் இளங்காலை வெயிலை  ரசிக்கவும் காலையிலேயே காலையில் ஊரின் சின்ன சிறுசுகளெல்லாம் கோலி குண்டு மற்றும் பம்பரம் விளையாடுவது வழக்கம். அதில்  அவனும்  உண்டு.





அவன் தனது பம்பரத்தில் கயிற்றை விரைவாக சுற்றி வீசி  தரையில்  பட்டுவிடாமல்  நின்ற  நிலையிலேயே கையில்  பிடித்து  சுழல விடுவான்.  அந்த  தனித்திறமை  எல்லோருக்கும்  வருவதில்லை. அதுவும் அந்த சாட்டை கயிறினை நுனி நாக்கில் நனைத்து, பம்பரத்தின் மேல் வேகமாக சுற்றுவதும் உடனே வீசுவதும், லாவகமாக கையில் ஏந்துவதும், ஏந்திய பம்பரம் கையில் சுற்றுவதும் தனி அழகானது. 




அந்த  காலைநேரத்தில்  பம்பரம்  விளையாட  அவனையும்  சேர்த்து  ஆறெழுபேர்  கூடியபோது  கோவில்  ஸ்பீக்கர் செட்டில்,

'செல்லாத்தா செல்ல  மாரியாத்தா'

பாடத்தொடங்கியிருந்தது.

அப்போதே  பம்பர விளையாட்டு  தொடங்கியது. அந்த  விளையாட்டுக்கு  திட்டமாக  ஒரு  வட்டம்  வரைந்துகொள்ளவேண்டும். எல்லோரும்  அவரவர்  பம்பரங்களை வைத்து  அபிட் எடுக்கவேண்டும். சாட்டைகயிற்றை  பம்பரத்தில்  சுற்றி, வீசி  சுழலவிட்டு கையில்  எடுக்கவேண்டும். அதுதான்  அபிட். கடைசியாக யார் அபிட் எடுக்கிறானோ அவனுடைய பம்பரம்  வட்டத்துக்குள் வைக்கப்படும். அதன் படியே கடைசியாக அபிட் எடுத்த ஒருவனது பம்பரம் வட்டத்துக்குள் வைக்கப்பட்டது. அடுத்த  கட்ட  அபிட் எடுக்கும்போது  வட்டத்தின்  நடுவில் இருக்கும்  பம்பரத்தை  குத்தி வெளியில்  கொண்டு  வந்துவிடவேண்டும். கில்லாடியான பையன்கள் பம்பரத்தை  வீசும்போதே  ஒரே  குத்தில்  மையத்திலிருந்து  மாட்டிக்கொண்ட  பம்பரத்தை  வெளியில்  எடுத்துவிடுவார்கள். இல்லையென்றால்  பம்பரத்தை  சுழலவிட்டு  கையில்  எடுத்து, நடுவில்  மாட்டிக்கொண்ட  பம்பரத்தை நோக்கி  அதை வீசி  இரண்டு பம்பரங்களும்  வெளியில்  வரும்படி  செய்யவேண்டும். சிலநேரம்  நடுவில்  இருக்கும்  பம்பரம்  வெளியில்  வந்து, காப்பாற்றப்போன  பம்பரம்  உள்ளே  மாட்டிக்கொள்வதும்  நடக்கும்.









நண்பர்களில் ஒருவனின் பம்பரம் வட்டத்துக்குள் வைக்கப்பட்டது, அதை தொடர்ந்து ஒவ்வொருவராக தங்களின் பம்பரத்தினால் வட்டத்தினுள் இருக்கும் பம்பரத்தினை வெளியில் எடுக்காமல் உக்கு வைக்க முயல்வார்கள்.  உக்கு  வைப்பதென்றால், பம்பரம்  கொடுக்கப்படும்  வேகத்தில்  நடுவில்  இருக்கும்  பம்பரத்தில்  அதனுடைய  ஆணி  இறங்கி சேதப்படுத்தும். அப்படி  குத்தும்போது நடுவில்  இருக்கும்  பம்பரம்  வெளியில் வந்துவிட்டால் அவனும் ஆடலாம். பம்பரம் உள்ளே இருந்தால் உக்கு வைப்பார்கள். வட்டத்தினுள் இருக்கும் பம்பரத்தின் மீது ஒவ்வொருமுறையும் உக்கு விழும் பொது பம்பரக்காரனின் முகம் வாடுவதை கண்டு எல்லோரும் பார்த்து சந்தோசப்  படுவார்கள்.

அவனுக்கு மட்டுமல்ல அவனின் நண்பர்கள் அனைவருக்கும் தனது பம்பரத்தில் உக்கு விழாமல் பார்த்து கொள்ளுவது பெருமையாக இருக்கும்.

அப்படியே கடைசி வரைக்கும் ஒருவனின் பம்பரம் வட்டத்துக்குள்ளே இருந்தால் ஆட்டத்தின் இறுதியில் எல்லோரும் சேர்ந்து அந்த பம்பரத்தை உக்கு வைத்தே உடைப்பது வழக்கம். அதுபோல ஆக கூடாது என்று ஒவ்வொருவரும் கவனமாக இருப்பார்கள். அந்த ஆட்டம் ரொம்பவும் சூடாகவே இருக்கும்.  அவர்களின் காலை நேரமும், மாலை நேரமும் இந்த விளையாட்டுதான் எல்லாருக்கும். அதுவும் சில பையன்களுக்கு , எப்போதும் இரண்டு பம்பரங்கள் கால் சட்டையின் பாக்கெட்டில் இருந்து கொண்டே இருக்கும்.

விளையாட்டின் இடையே அவன் அம்மாவின் அழைப்பு வந்தது. பொங்கல் வேலை செய்வதற்காக வீட்டுக்கு மண் போடுவதற்கு ஆற்றின் மறுகரையில் இருந்து களிமண் எடுத்து வரவேண்டும். "தோ வர்றேன்", என்று கூவிக்கொண்டே  அரை மனதுடன் அங்கிருந்து தனது புத்தம்  புதிய  ஆசை  பம்பரத்துக்கு எந்த சேதமும் இல்லாமல் சென்றான்.

அந்த  நேரத்தில்  கோவில்  செட்டில்,

'மாரியம்மா  எங்கள்  மாரியம்மா'

ஒலித்துக்கொண்டிருந்தது.



Friday, 12 June 2020

ஊர் திரும்புதல் - 16

வயல்களமும் - உப்பு நீரும் 



அருள்மிகு  அய்யனார்  

அவனது ஊரின் வயல்களில், காவல் தெய்வமாக இருப்பது, அய்யனாரும், முனீஸ்வரரும்தான் என்பதே  அவனது ஊரின் நம்பிக்கை. அதற்காக அவர்கள் வருசத்துக்கு ஒரு முறை காணிக்கை செய்து அறுவடை முடிந்ததும் படையல் வைப்பது வழக்கம் .

ஒவ்வொரு  வருடமும் அய்யனாருக்கு   கிடா மற்றும் சேவல்  வேண்டி விடுவது மக்களுக்கு  வழமையான ஒன்று.   அந்த வருஷம் நான்கு கிடாக்கள் நேர்ந்து  விடப்பட்டிருந்தன,   அறுவடை முடிந்ததும் படையல் செய்வதற்காக.     

அவனது ஊரின் முக்கிய நபர் பண்ணையார் அண்ணாச்சி தான்,   அண்ணாச்சி வீட்டுக்கு   கிராமத்தின்  எல்லா திசைகளிலும் நிலங்கள் இருக்கும்.  அதில் கிழக்கு திசையில் உள்ள பதினைந்து மா கட்டளையில் அந்த நிலங்களில் சாகுபடி செய்த விளைச்சலை  அறுவடை செய்து கண்டுமுதல் பார்பதற்கு ஒரு களம் தேவைப்பட்டதனால் அதன் முதல் வயலினை களமாக  மாற்றிக்கொண்டனர்.  

அதுபோல, தங்கச்சிமா கட்டளை,  நடு செராகம், ஆப்பிரிக்கா பங்கு மற்றும் மேற்கில் செண்பகச்சேரி பங்கு உள்ளது, ஒவ்வொரு தலப்புக்கும் ஒரு களம்  உண்டு. மொத்தத்தில் மிகவும் சிறப்பானது இந்த வயல் களம். இதற்கு வண்டி வாகனம் எல்லாம் போகமுடியாது, கொஞ்சம் தூரம் எல்லாம் நடந்தேதான் போக வேண்டி வரும். அப்படி வயல்களின் நடுவில் இந்த களம் அமைந்திருக்கும் .

அப்படியென்ன சிறப்பு?!. ஆமாம் இந்த களத்தில் ஓரத்தில் இருக்கும் பனை மரத்தில்தான் அய்யனார் அந்த பகுதிக்கு காவலாக இருப்பது என்றும், அதற்குதான் படையல் செய்யவேண்டும் என்ற  மக்களின் நம்பிக்கை பல தலைமுறைகளாக தொடர்கிறது. 

அவனுக்கு நன்றாக  ஞாபகம் வருகிறது, அந்த வருஷம் விழா நடக்கும் பொழுது அவனும் இருந்தான். 

அன்று மதியத்திலிருந்தே ஆட்கள் புற்களை எல்லாம் அகற்றி சுத்தம் செய்வதும் , சாயங்காலம் ஆனவுடன் அந்த களம் முழுவது விளக்குகள் வைப்பதும்,   என்று தங்களின் வேலைகளை செய்வனே செய்து கொண்டிருந்தனர்.   மறுபுறம் வானாதிராஜபுரத்தில் இருந்து சமையற்காரர் தனது ஆட்களுடன் வந்திறங்கியிருந்தார். 

அந்த நடு வயல்வெளியில்  அந்தி  வானம்  சிவந்து  மாலை  மயங்கத்தொடங்கும்  மனோகரமான வேலையில் ஒருபுறம் ஒரு  குழு அய்யனாருக்கு பலியிட  ஆடுகளைய் தயார் படுத்திக்கொண்டிருந்தது. 


ஊரில் உள்ள எல்லா ஆண்களும் பங்கு பெரும் நிகழ்வு அது.  சில வீடுகளுக்கு  விருந்தினர்களும் வருவதுண்டு. சுற்றுப்பட்டு  கிராமங்களின்  முக்கியஸ்தர்களும் கூட  வருவார்கள்.  

ஆடுகளை  பலியிடுவற்கு என்றே ஓரிரு ஆள்கள் இருப்பார்கள். எப்போதும் ஆடுகளை பலியிடுவதும் அதை வெட்டி சமையலுக்கு தயார் செய்வதும்  அவர்களின் வேலை.

சமையல்காரர் ஒரு புறம் வயலில் அடுப்பு வெட்ட ஆள் வைத்து அவர்க்கு தேவையான சரியான அளவுகளை சொல்லிக்கொண்டிருந்தார். 

ஒரு பக்கம் ஆறேழு ஆட்கள் யூரியா சாக்கில் தைத்த படுதாவில்  அமர்ந்துகொண்டு வெங்காயம், பூண்டு, இஞ்சி உரித்துக்கொண்டிருந்தனர். இங்கே முழுவதும் ஆண்கள்தான் என்பதால் எல்லாவற்றையும் அவர்களே பார்த்துக்கொள்ள வேண்டும். உரித்த பூண்டும் இஞ்சியும் மிளகாயும்  அருகிலேயே  இருந்த  மோட்டார்  கொட்டாயின் வைத்து  வீட்டில்  இருந்து  எடுத்து வரப்பட்ட அம்மியில்  அரைக்கப்பட்டுக் கொண்டிருந்தது.  உப்பு  நீருக்கு  தேவையான  கொஞ்ச  நேரத்தில் தயாராகிவிட்டது.  சமையற்காரர் பூஜை போட்டு அடுப்பை பற்ற வைத்தார்.

சற்று  தள்ளி  படையல்  போடும்  இடத்தில, பூசாரி மூன்று புது செங்கற்களை வைத்து அய்யனாரை தயார் செய்துகொண்டிருந்தார்.



அவன் எப்போதும் வழக்கமாக சாப்பிடும் நேரத்தில் மட்டும்தான் வருவான். ஆனால் அவனுக்கு அந்த உப்பு நீர் செய்வதை பார்க்க வேண்டும் என்ற ஆர்வமுண்டு, அதனால் அவனின்  ஆசையினால் அப்பாவின் அனுமதி வாங்கி இந்த முறை முன் நேரத்திலேயே அவன் அங்கே  வந்து சேர்ந்தான்.     
              
அவன் அங்கு வந்த  நேரத்தில்தான் கொப்பரையில் சாதம் வெந்து கொண்டிருந்ததையும், மற்றொரு கொப்பரையிலிருந்து வெந்த சாதத்தை புதிய மூங்கில் கூடையில் வடிகட்டி அங்கே விரித்திருந்த பாயின் மீது போட்டிருந்த வெள்ளை காட்டன் வேட்டியில் கொட்டிக்கொண்டிருந்தனர். அதை இன்னொரு வேட்டியால் மூடிவைத்தனர். அந்த காட்சி அவனுக்கு பருத்தி வயலில் இருந்து எடுத்து பஞ்சினை கொட்டி வைத்தது போல தோன்றியது.  மற்றொரு பக்கம் சிலபேர் வாழை இலையினை நறுக்கிக்  கொண்டிருந்தனர். மேலும் பந்தி போட்டு சாப்பிட ஏதுவாக சின்ன சின்ன குழிகள் செய்யப்பட்டது.

உப்பு நீர் சமைக்கும் இடத்திற்கு சென்று அவன் செய்யும் முறையினை பார்க்க தொடங்கினான். அவர்கள் சமைக்கும் முறையை பார்ப்பதற்க்கே  சுவாரசியமாக  இருந்தது. அந்த வாசனையும், செய்முறையும் வித்தியாசமானது. அந்த  முறையில்  வீட்டில் எல்லாம் செய்யமாட்டார்கள். அது  அய்யனாருக்கு படையல் செய்யும் உப்பு நீருக்கு மட்டும்தான்.

பெரிய கொப்பரையில் தண்ணீர் கொதிக்க வைத்து  வெங்காயம், தக்காளி ,கத்திரிக்காய், உருளைக்கிழங்கு எல்லாவற்றையும் நேரடியாக  போட்டு மூடிபோட்டு  கொதிக்கவிட்டார்கள். வீட்டில்  செய்வதுபோல  எண்ணெய் ஊற்றி  வதக்குவது எல்லாம்  இல்லை.  காய்கள்  இருந்த  நீரில்  அடுத்த  கொதி வந்ததும்,  அரைத்து வைத்திருந்த மசாலா சேர்த்தனர். கொஞ்ச  நேரத்தில்  அதிலேயே  வெட்டி துண்டுகளாக்கப்பட்ட   ஆட்டு இறைச்சியினை போட்டனர். கறி  நன்றாக வேகத்தொடங்கியதும்,  கொஞ்சம் எண்ணெய் ஊற்றினார்கள்.    அது நன்றாக கொதிக்க ஆரம்பித்து விட்டது.  நன்றாக வாசனை வர ஆரம்பித்தபோது,   கடைசியாக கறிவேப்பிலையும் மல்லி தழையும் சேர்த்தனர். இதுமாதிரி மூன்று கொப்பரைகள் தாயாகி கொண்டிருந்தது.

எல்லாம், தயாராகி விட்டது பூசைக்கு தயாராக வேண்டும் என்று ஒரு புர த்தில் ஒரு சத்தம் கேட்டது. பூசாரி, அய்யனார்  படையலுக்கு  ஆயத்த வேலைகளை கவனித்து கொண்டிருந்தார். மூன்று நீண்ட தலை வாழையிலைகளை  அய்யனார்  முன்  பரப்பப்பட்டிருந்த வைக்கோல்  மீது  விரிக்க பட்டது. அதில் ஒரு இலையின் சர்க்கரை கலந்த அவலும், பொட்டு கடலையும், வெற்றிலை பாக்கும், ஒரு கட்டு சுருட்டும், ஒரு பாட்டில் சரக்கும், கொஞ்சம் பச்சையும் மஞ்சளும் கலந்த வண்ணமாக ஒரு  சீப்பு வாழைப்  பழமும் வைக்கப்பட்டது.

மற்றோரு இலையில் வெள்ளை சாதம்பரப்பப்பட்டு, அதன்  மீது  சமைக்கப்பட்ட  உப்பு நீரும் ஊற்றப்பட்டிருந்தது. அதன்  பக்கத்திலேயே  உப்பு நீரில் இருந்து தனியாக அரித்து  எடுக்கப்பட்ட ஆட்டிறைச்சி துண்டுகள், கறியும் எலும்புமாக  கலந்து வைக்கப்பட்டிருந்தது.
மூன்றாவது இலையில் சாதமும்  அதன்  மீது  ஊற்றப்பட்ட சேவல் கறியில் சமைத்த குழம்பும் பரிமாறப்பட்டிருந்தது.

பூசாரி, ஒரு பாக்கெட் ஊதுவதியை முழுவதுமாக கொளுத்தி வைத்தார். பின்னர்  சத்தமாக அய்யனாருக்கு, தீப ஆராதனையும், சாம்புராணி புகையும் காட்டி   பூஜை செய்தார். பின்னர்  வேகமாக எல்லோரையும் அய்யனாரிடம் வேண்டிக்கொள்ளுங்கள் என்று  பணித்தார்.  எல்லோருக்கும்  சூடம்  கொளுத்திய  தட்டுடன்  வந்து  விபூதி கொடுத்தார். எரியும்  சூடத்தில் அங்கே  இருந்த  ஒவ்வொருவரும் பயபக்தியுடன்  கைகளை  காட்டி  கண்களில்  ஒற்றிக்கொண்டு  விபூதிக்கு  பூசாரியிடம்  வலது  உள்ளங்கையை  நீட்டினர்.

அப்போது அங்கே ஒரு தாத்தா ஒரே சத்தத்துடன் எனக்கு ஏன் குறைவைத்தீர்கள் என்று சொல்லிக்கொண்டே ஆட ஆரம்பித்தார். அவருக்கு  சன்னதம்  வந்து  அய்யனார்  அவர்மீது  இறங்கியிருந்தார். உடனே பூசாரி அங்கே சென்று அவரிடம் என்ன குறைகள் என்று கேட்டுக்கொண்டார். அதற்குபின்  அய்யனார் மலையேறினார்.

இப்படியாக பூஜை இனிதே  நிறைவடைந்த பின்னர்,  பரிமாறும் குழுவினர்கள் தங்களின் பொறுப்பை எடுத்துக்கொண்டனர். இங்கே தான் முக்கியமான வேலை தொடங்குகிறது.  வந்திருக்கும் மொத்த நபர்களை கணக்கில் கொண்டு எல்லோருக்கும் கொடுக்கவேண்டும், அதே நேரத்தில் விருந்தினர்களையும் பக்கத்துக்கு ஊர் முக்கியஸ்தர்களையும் நன்றாக கவனிக்க வேண்டும்.

களத்தில்  முக்கால் பகுதிக்கு பந்தி விரிந்திருந்தது.  உட்காருவதற்கு தார்பாயும் உண்ணுவதற்கு லாவகமாக தோண்டி வைத்திருந்த குழியில் வாழை இலையும் போடப்பட்டது.   பந்தி  பரிமாறிய  ஆட்களில்  ஒருவர்  இலைகளில்  முதலில்  சாமிக்கு  படைத்த  சாதத்தை  வைத்துக்கொண்டே  போனார். அவரைத்தொடர்ந்த  அடுத்த ஆள்  சாதத்தை  அள்ளியள்ளி  வைத்தபடி சென்றார். அவருக்கும்  பின்  வந்த  ஆள்  உப்புநீர்  இருந்த  வாளிகளில்   அகப்பையைவிட்டு  உப்புநீரை திட்டமாக  கறியினையும்  வைத்துக்கொண்டே  போனார். பந்தியில்  உற்கார்ந்திருந்த  பெரியவர்கள்  சிலர்  அய்யனார் பெயரை  விளித்துவிட்டு சாப்பிடத் தொடங்கினர்.  இலையினை சரி செய்து கொண்டே எல்லோரும் உப்புநீரின் காரத்தின் விளைவாக கண்ணில் ஓரமாக  கண்ணீர் வர வர பரிமாறப்பட்ட  பிரசாதங்களை ருசிக்கத்  தொடங்கினர்.

சாப்பிட்டு முடிந்து, கும்பலாக வீடு திரும்பும் போது சின்ன பிள்ளைகளையெல்லாம் பயமுறுத்தி அழைத்து வருவதே அங்குள்ள பெருசுகளுக்கும் வழக்கம், வீட்டுக்கு வந்தவுடன் வீட்டுக்குள்ளே உடனே அனுமதி கிடையாது.  கெட்டது எதாவது வந்து வீட்டில் உள்ள பெண்களை பற்றி கொள்ளும் என்ற பயத்தோடு,   அவனும் அவன் பக்கத்து வீட்டு நண்பனும் வீட்டின் வெளியே காத்திருந்தார்கள்.  அவர்கள்  வீட்டில் நுழைய  அரை மணிநேரமாவது  காத்திருக்க  வேண்டும்.



           

             
     

Tuesday, 9 June 2020

ஊர் திரும்புதல் - 15

அவனுடைய  ஊர் 


நம்முடைய  விக்கிரமனாறு ஆறு காவிரியிலிருந்து பிரிந்து ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர் பாசனம் கொடுத்து, வைத்தீஸ்வரன் கோவிலுக்கு முன் மெயின் ரோடு கடந்து சீர்காழி அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது.  அந்த பாதையில் ஏகப்பட்ட தடுப்பணைகள், சிறிய நீர் தேக்க நிலைகள் உண்டு. ஏராளமான கிளை வாய்க்கால்களும் பிரிந்து செல்லும்.







குத்தாலத்தில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆற்றின் கரையிலே அழகாய் பசுமை சுமந்து இருக்கும் ஊர்தான் அவனுடய ஊர்.

அந்த ஊரின் முகப்பிலே அரசு  தொடக்க பள்ளியிருக்கும்.  அடுத்து அவ்வூரின் காவல் தெய்வமான மகா மாரியம்மன் கோவில்.  அதனைத்  தொடர்ந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அய்யா திரு கி. சத்தியசீலன் வீடும், அருகிலேயே நூறாண்டுகளுக்கு மேல் ஊருக்கே ஆக்சிஜன் கொடுக்கும் அரச மரமும், அதனடியில் வீற்றிக்கும் செல்வகணபதியும் காணக்கிடைப்பார்.  அவரின்  பார்வையில் பிள்ளையார் கோவில் வீதி, அருகே பிரியும் பிச்சன் வாய்க்காலும்  அதன்  மதகும் இருக்கும்.



கொஞ்சம்  போனால் மன்மதர் கோவிலும் நடுத்தெருவும் வரும்.  அப்படியே போனால் அந்த ஊரின் குளமும் அதற்கு காவலாக புளியமரத்தின் அடியில் ஒரு முனீஸ்வரரும் இருக்க அதையும் கடந்து போனால் நம்ம மாணிக்கம் டீ கடை.

அவனும் அவனது நண்பகர்களும்  அந்த ஊரின் மாணிக்கம் டீ கடையில் தான் தங்களது காலை பொழுதையே தொடங்குவார்கள். அதுவும் அவனது நண்பன் கரிகாலன் அவனுக்கு ஸ்பெஷல் டீ போட்டு கொடுப்பது வழக்கம். அந்த கடையில் ஒரு டீ குடித்தால்தான் அந்த நாளே நன்றாயிருக்கும் என்று ஒரு நம்பிக்கை அவர்களிடம்  இருந்தது. கூடவே தினகரன், முரசொலி, ஹிந்து பேப்பர் படிப்பதும் அவர்களது வழக்கம். என்னடா ஹிந்து பேப்பர் என்று உங்களின் உள்மனதில் உள்ள சந்தேகம் என் காதில் கேட்டுவிட்டது.




அந்த டீ கடையின் உரிமையாளர்,  தி மு க வின் முக்கிய தொண்டர் மட்டுல்ல அவர், அந்த ஊரின் ஆங்கிலம் பேசத் தெரிந்தவரும் கூட. ஆங்கில பேப்பர் வாசிப்பதிலும் கிரிக்கெட் மேலும் அவருக்கு அளவுமிகுந்த ஆர்வம்.  இந்திய அணி விளையாடும் கிரிக்கெட் போட்டி என்றால் அங்கு இருக்கிறவர்கள் எல்லாருக்குமே ஆபத்துதான். இந்திய அணி நன்றாக  விளையாடினால் பிழைத்தோம்.  இல்லையேல் தொலைந்தோம் . அந்தக்  கோபமெல்லாம்  கடையில் உற்கார்த்திருப்பவர்களுக்கு போய்ச்   சேரும்.

அவனது ஊரின் பிள்ளைகளையெல்லாம் ஆங்கில நாளேடு வாசிக்க சொல்வதிலும், அரசியல், விளையாட்டு மற்றும் பொது அறிவு என்று எல்லாவற்றையும் ஊர் பிள்ளைகளோடு பகிர்ந்து கொள்வதிலும் அவருக்கு நிகர் அவரே என்று சொல்லலாம்.  அவர் என்ன சொன்னாலும் அவன் மட்டும் பொறுமையாகவே இருப்பான்.

அதற்கு அவர் ஒரு முறை, "எல்லோரையும் நம்பலாம் ஆனா உன்ன மாதிரி அம்முகுல்லியை நம்பவே கூடாது !", என்று சொன்னார்.




அங்கே இளசுகள் எல்லாம் அரட்டை அடிக்கும் பொன்னூர் வாய்க்கால் மதகு கடக்கும் சந்திப்பில் அவனது ஊரின் எல்லோரின் மனதை விட்டு நீங்காத தெய்வம், அண்ணாச்சியின் (துரைசாமி வாண்டையார்) வீட்டுக்கும் போகும் மாணிக்க வாண்டையார் நினைவு நுழைவு வாயில் அந்த ஊரின் கீழத்தெருவுக்கு வரவேற்கும்.  




அப்படியே நுழைவாயில் வழியே உள்ளே சென்றால்,  குளத்தின் அடுத்த பக்கம் வரும்.  அந்த குளம் ஊரின் நல்லவரது பட்டாவில் உள்ளது.  ஆனால் ஊர் பொது பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது. அதில் வருஷத்தில் ஒரு முறை மீன் பிடிப்பதும் வழக்கம்.    குளத்தின் படியருகே ஒரு பெரிய வாதா மரம் இருந்தது. இரவில் அந்த மரத்தை கடக்கும் போது மனதுக்குள் ஒரு மரண பயம் இல்லாமல் இருக்காது அவனுக்கு.

அப்போது எல்லாம் அண்ணாச்சி வீட்டில் மட்டும்தான் டிவி இருந்தது. நித்தமும் எல்லா பொடிசுகளும் அண்ணாச்சி வீட்டில் போய் படம் பார்ப்பது ஒரு த்ரில். பார்த்துவிட்டு இரவு வரும்போது அந்த வாதா மரத்தை தாண்டித்தான் வரவேண்டும். அதனால் அவன் எப்பவுமே கூட்டமாக வருவதையே விரும்புவான்.

அன்று, அவன் ஊருக்கு வந்த நேரம் கோடைகாலமென்பதால் அந்த ஊரின் குளத்தில் மீன் பிடிப்பு நடந்தது.  அதில் கெண்டை மீனும், விரால் மீனும் கூடவே சேல் கெண்டைகளும் கொஞ்சம் இதர வகை மீன்களும் கிடைத்திருந்தது.

அவனுக்கு அவனது அம்மா  விறகு அடுப்பில் சமைக்கும் விரால் மீன் குழம்பும், அம்மாவின் ஸ்பெஷல் மீன் மசாலாவில் செய்த விரால் மீன் வறுவலும், பொன்னி அரிசி சாதத்துடன்  வாழையிலையில்  சாப்பிடப்பிடிக்கும்.  வாழை இலையில் குறைய குறைய அருகிலேயிருந்து இலையை அம்மா நிரப்பிக்கொண்டே இருப்பார்கள். அத்தனையும் அவன் வெளியூரில் இருக்கும் போது  கிடைக்காதது.

அவனும் அவன் நண்பர்களும் சாயங்காலத்தில், வயல்வெளிகளில் உலாவப்போவது வழக்கம்.  அவனுக்கும் அவனது நண்பர்களுக்கும் வயல்  வெளிகளில் விளைந்து கிடைக்கும் பயறு செடியில் குலை குலையாக இருக்கும் பச்சை பயறு பறித்துச்  சாப்பிடுவதும், சில இடங்களிலில் இருக்கும் தட்டை பயிரையும் ருசிப்பதிலும்  ஆர்வம் அதிகம்.



கரும்பு வயலில் திருட்டு தனமாக கரும்பு வெட்டி சாப்பிடுவதும், அப்படியே ஊர் குளத்தில் கும்மாளம் போடுவதும், ஒருகரையில் இருந்து மறு கரைக்கு நீரில் மூழ்கி போவதும் அதில் யார் முந்தி வருகிறார்கள் என்று  போட்டிவைப்பதும், அதிக நேரம் யார் நீரில் மூழ்கியிருக்கிறார்கள் என்ற விளையாட்டும் இன்றளவும் நினைவில் இருந்துது அகல மறுக்கிறது.



கரும்பு ஏற்றிப் போகும் டிராக்டரில் தொத்திக்  கொண்டே கரும்பு உடைத்து ருசிப்பதும்,  ஓடும் வண்டியில் ஒடித்துவிட்டு இறங்கி கீழே விழாமல் லாவகமா வண்டி கூடவே  சிறிது  ஓடுவது எல்லாமே பசுமையான நினைவாக மனதில் அவனுக்கு  பதிந்துவிட்டது.





Sunday, 7 June 2020

தாவணி தேவதையின் கனவு

தாவணி தேவதையின் கனவு

அதிகாலையில் ஐந்து மணிக்கே காவேரியின் நாள் தொடங்கும்.

அவள் எழுந்தவுடன் தன் வீட்டு மாடு கன்றுகளை பார்த்துவிட்டு, மாட்டு தொழுவத்தை சுத்தப்படுத்தி விட்டு, கல்லூரி  செல்ல  தயாராவாள். கல்லூரி  படிப்பு  அவளது  கனவு. எந்தத்தடை  வந்தாலும்   அவள் தனது கனவான கல்லூரி படிப்பை எப்படியாவது முடித்து விடவேண்டும் என்று  லட்சியம்  கொண்டிருந்தாள். அன்று  கல்லூரி  செல்ல எல்லா வேலைகளையும் செய்துவிட்டு தயாராகிக்கொண்டிருந்தாள்.

அவள் அப்பா சுந்தரம் ஒரு விவசாயி. அம்மா ரஞ்சிதம் ஒரு இல்லத்தரசி.  அவர்களுக்கு ஒரே ஒரு சுட்டி பெண்தான் இந்த காவேரி. அப்பா காலையிலேயே வயலுக்கு வேலைக்கு போய்விடுவார். அம்மா வீட்டு வேலையெல்லாம் முடித்துவிட்டு சமையல்  செய்யவேண்டும். பிறகு  அவர்களுடைய மகள்  காலேஜ் போனபிறகு ஆடு மாடுகளை மேய்க்கவேண்டும்.       

அப்படித்தான் அந்த திங்கள் கிழமை காலையில சிவப்பும் பச்சையும் கலந்த  செட் தாவணியுடன் அவள்  கல்லூரிக்கு  புறப்பட்டாள்.

"அம்மா, நான் போயிட்டு வர்றேன்",  என்று உரக்கச் சொல்லிவிட்டு,  தனது நோட்டுப்  புத்தகத்தை எடுத்து மார்போடு அனைத்துக்கொண்டு  வீட்டிலிருந்து  நடக்கத்தொடங்கினாள்.

"ஏன்டி காவேரி, என்னடி இது,  இப்படி பண்ணுறவ,  காலையிலையும் ஒன்னும் சாப்பிடல, மதியானதுக்கும் சாப்பாடு டப்பா எடுத்துக்கல", என்று சொல்லிகொண்டே அடுப்பறையிலிருந்து வட்டமான டிபன்பாக்ஸ்சுடன்  வெளியே வேகமா ஓடிவந்தாள் அம்மா ரஞ்சிதம்.      
    
"நான் என்ன செய்றது, நம்ம வீட்டு பஸ்ஸா போகுது.....நாம எப்ப வேணும்ன்னாலும் போவரத்துக்கு",  என்று சற்றே புலம்பிக்கொண்டே நின்ற நிலையிலே இரண்டு இட்லிகளை அவசர அவசரமாக  பிட்டு  விழுங்கிவிட்டு  சரக்கென்று  கிளம்பினாள்.

அம்மா "மறக்காம டிபன் பாக்ஸ் எடுத்துகோடி", என்றாள்  கொஞ்சலாக.

"சரி, சரி  எடுத்துக்கிட்டேன்", என்றவாறு தனது நோட்டு புத்தகத்தையும் வட்டமான சில்வர் டிபன் பாக்ஸ்சையும்  எடுத்து அவள் தன் மார்போடு அனைத்துக்கொண்டே  நடக்க ஆரம்பித்தாள்.

அம்மா ஓடிவந்து, "காவேரி இந்தா  இந்த பூவை வச்சிக்கோ", என்றவாறு  அவர்களது  தோட்டத்தில்  பூத்த டிசம்பர் பூவும்,  கனகாம்பரமும்  கலந்து தொடுத்த  பூச்சரத்தை கொடுத்தாள்.

"அம்மா....நேரமாச்சும்மா ....சரி ...சரி... நீயே வச்சுவிடு கையில புக்ஸ் இருக்கு", என்றவாறு காவேரி  விறைப்பாக  நின்றாள்.

இந்த  நாடகம்  என்றுமே  காலைவேளைகளில்  அவர்களுடைய  வீட்டில்  நடப்பதுதான். காவேரி  கல்லூரிக்கு  சென்றுவிட்டிருந்தாள்.







மகளை  வழிஅனுப்பிவிட்டு  வீட்டுக்குள்  நுழைய  முற்பட்டவளை  பக்கத்துவீட்டு  வரதம்மாள் கூப்பிட்டு  நிறுத்தினாள்.


"ஏன்டி ரஞ்சிதம், என்னமோ நீதான் அதிசயமா பொண்ணு வளர்க்கிற, எதாவது ஒரு பையன பார்த்து காலா காலத்துல ஒரு கல்யாணம் காட்சி பண்ணி வைப்பியா. படிக்க வைக்கறாளாம்.... அதும் ஏதோ காலேஜியாம் காலேஜி, காலம்  கெட்டுக்கிடக்கு,  என்னமோ போடி நான் சொல்லுறத சொல்லிப்புட்டேன். நாமெல்லாம் எங்க படிச்சோம், ஏதோ  கல்யாணத்த  பண்ணமா, மூணு நால பெத்துக்கிட்டு லட்சணமா குடும்பம் பண்ணலியா என்ன",  என்று அலுத்துக்கொண்டே தன்னுடைய  வீட்டினுள்  நுழைத்தாள்.

ரஞ்சிதம்,  வரதம்மாளிடன் அந்த  அறிவுரையை  கேட்பது  முதல்  முறையல்ல.
அந்த அம்மாள்  சொன்னது  ரஞ்சித்தின்  தலையில்  ஏறவே  இல்லை. மெல்லச்சிரித்துவிட்டு  வீட்டினுள் சென்றாள்.

காவேரியின்  ஊரில் பஸ் வசதியே இல்லை. ஒரு பக்கம் போனால் திருமணச்சேரி ஒன்றரை கிலோ மீட்டர் நடந்தே போகவேண்டும். இன்றொருபுரம் ஒரு கிலோமீட்டர் போனால் திருமங்கலம். ஆனால் அந்த  பஸ்ஸுக்கு டைம் கேரண்டீ கிடையாது. அதனால் அவள் எப்போதும் நம்பிக்கையாக வரும் ஐந்தாம் நம்பர் பஸ்சுக்கே போவாள். அப்படியே வேக வேகமாக  நடந்தபடியே  தன் மனதுக்குள் எண்ணிக்கொண்டாள், "இதுவே ஒரு பையனாக இருந்த்தால் போறவன் எவன் வண்டிலயாவது லிப்ட் கேட்டுக்கொண்ட போய்டலாம் என்ன செய்ரது....பொண்ணா  பொறந்தாச்சு!, அதுவும் இந்த கிராமத்துல போய் பொறந்தாச்சு, தப்பி தவறி யாராச்சும் வண்டில  லிப்ட் குடுத்து போய்ட்டா அவ்வளது தான், அதுக்கு கண் காது மூக்குன்னு வைச்சு பேசுவாங்க ...அது  ரென களமா மாறிடும் ....அப்பறம் படிப்பு அம்பேல், அப்பறம் எவன் கையிலாவது புடிச்சு கொடுத்திட்டா போதுமுன்னு ஒரு கல்யாணம் பண்ணிவச்சுடுவாங்க ...அப்புறம் ... நம்ம கனவு கந்தல் தான்". எண்ண  ஓட்டத்தில்  அவளுடைய  நடை  சிறு  ஓட்டமாகவே  மாறியிருந்தது.



பாவம் அவள் என்ன செய்யவாள்.  காலையிலே ஏழரை மணிக்கு அந்த பஸ்சை பிடித்தால்தான் மாயவரம் போய்,  பஸ் ஸ்டாண்டில் இருந்து அவளது கல்லூரிக்கு நடந்து ஒன்பதரை மணிக்குள் சென்று சேரமுடியும்.  அவள்  நடந்தே  திருமணச்சேரி நெருங்கிக்கொண்டே இருந்தாள்.

திருப்பத்தில்  அவளுடைய  தோழி கண்மணி  நிற்பது  தெரிந்தது.

"வேகமா வாடி, பஸ் வந்துருச்சு", என்று  கண்மணி அவளை  சைகையில்  கூப்பிட்டாள்.    ஒரு வழியாக பஸ் ஏறி அவர்கள் இருவரும்    முன் படியின் அருகே  வழக்கமாக  அவர்கள் உற்காரும் அதே  சீட்டில்  அமர்ந்தார்கள்.   அந்த பஸ் அங்கிருந்து புறப்படுவதால் சீட் எல்லாம் பிரீயாக தான் இருக்கும். அது ஒரு நகர பேருந்து என்பதால் மயிலாடுதுறை போய் சேர ஒரு மணி நேரமாகும். அதுவும் இந்த பஸ் காலை உச்ச  நேரத்தில்  போவதால் குத்தாலம்-மயிலாடுதுறை மெயின் ரோட்டில் உள்ள எல்லா நிறுத்தத்திலும் நின்று நின்றுதான் போகும்.  கலையிலில பள்ளிக்கூடம் போற பசங்களும் , வேலைக்கு போற சில இளவட்டமும் கூடவே, புளி அடைப்பது போல் ஒரே கூட்டமாக  இருக்கும்  அந்த  பஸ்ஸில்.



"இந்த பஸ்ல....வர, வர பசங்க தொல்லை தாங்கமுடியலடி," என்று கண்மணியிடம் காவேரி  சொல்லிக்கொண்டே இருக்கும் போது, "ப்ளீஸ், இந்த புக்ஸ் வைச்சிக்குங்க",  என்று மல்லியம் பஸ் ஸ்டாப்பில் பையன்  குரல்  கேட்டது.  அவள், அது யாரென்று கூட பார்க்கவில்லை, அதற்குள் அவர்களின் மடியில் அந்த புத்தகங்கள்  வந்து விழுந்தது.  அது எவனோ புட் போர்டில் தொங்குகிறவனாக  இருப்பான், இறங்கும் போது அவனே வாங்கிக்கொள்ளுவான் என்று கண்மணி சொன்னாள்.




ஒரு வழியாக அந்த பஸ் ஒரு பக்கம் சாய்ந்தவாறே பஸ் ஸ்டாப் வந்த பஸ்ஸிலிருந்து இறங்கினார்கள் இருவரும். அதில் கண்மணி மாயவரத்தில்  மகாதான தெருவில் உள்ள ஒரு மெடிக்கலில் வேலை செய்பவள்.  அவளுடை காலேஜ் போகிற வழியும் அதே வழியென்பதால் இருவரும் சேர்ந்தே போவார்கள்.        

கல்லூரி முடிந்ததும் காவேரி வேகமாக பஸ்ஸ்டாண்டுக்கு ஓடி வரவேண்டும்.  ஐந்து மணிக்கு ஒரு பஸ், அதை விட்டாடால் பிறகு இரண்டு மணி நேரம் அங்கேயே இருக்கவேண்டும்.  வேறு வழியே இல்லை.  அடுத்த  பஸ்சில்  போனால் திருமணஞ்சேரியில் இருந்து நடந்து போகமுடியாது. இருட்டிப்  போயிருக்கும். அதனால் அவள் வீடு விட்டால் கல்லூரி, கல்லூரி விட்டால் வீடு  இருப்பாள். அதையே  அவளுடைய  தோழிகள் எல்லோரும் சொல்லி  அவளைப்  பரிகாசம்  செய்வார்கள்.


அவள், தன் மனதுக்குள், "இது எனக்கு  மட்டுமல்ல இன்னும் எத்தனையோ தாவணி தேவதைகள்....என்னை போன்றே இருக்கிறார்கள்",  என்று களுக்கென்று சிரித்தவாறு வண்டிக்காரத்  தெரு மாரியம்மன் கோவிலை அவசரமாக ஒரு சுற்று சுற்றிவிட்டு,  நெற்றியில் விபூதி, குங்குமம் இட்டுக்கொண்டே திரும்பினாள். எதிர்முனையில் ஐந்தாம் நம்பர் பஸ், அந்த   பஸ் ஸ்டாண்டுக்குள் நுழைந்தது.

வேகமாகவே ஓடி, அவளது  புத்தகங்களை பஸ்ஸின் ஜன்னல் வழியாக நுழைத்து  தனக்கே உரிய சீட்டில் போட்டு  ரிசர்வ்  செய்தாள்.

அவள்  அப்படியே, நடை போட்டு கொண்டிருந்தாள் தனது கனவை நோக்கி........          

Friday, 5 June 2020

ஊர் திரும்புதல் - 14



கோடை விடுமுறை


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு  பின்னர் கோடை விடுமுறை வந்தது. எல்லோரையும்  போல   கோடை விடுமுறை என்றாலே  அவனுக்கும் அவனது ஊர் நண்பர்களுக்கும் ஒரு கொண்டாட்டம்தான்.

அவனது ஊரின் விக்ரமனாற்றங்கரையிலும், வயல்வெளிகளிளும்   பனைமரமும், ஈச்சை மரமும் அணிவகுத்திருக்கும். பனைமரத்தின் நொங்கிற்காகவும் ஈச்சம்பழ  வேட்டைக்காகவும்  அவர்கள்  அணி வகுப்பார்கள்.  பனைமரம்  ஏற  அனைத்து இளம்வட்டமும் 'பெருசு' என்கிற  ஒரு அண்ணனை நாடியே இருப்பார்கள்.  இவரை  பற்றி  முந்தய  பதிவில்  பார்த்திருக்கிறோம். அந்த ஊரின் ஒட்டுமொத்த பனைமரத்தின் காய்களையும்  பறித்து நொங்கு வியாபாரம் செய்வதே  அந்த பெருசுக்கு வழக்கம்.


                             






விடியற்காலையே எழுந்து, ஈச்சம்பழம் எடுப்பததற்கு அவனும் அவன் நண்பர்கள் கூட்டமும் ஊரில் இருக்கும்  ஈச்சமரங்களுக்குகெல்லாம் போய் வருவார்கள். அதிலும் அங்கே  ஓங்கி உயர்ந்த ஒரு ஈச்சைமரம் இருந்தது.  அதன் பழத்தின் சுவையோ வாயில் எச்சில் ஊரும் சுவை. அதனால் எல்லோருமே அந்த மரத்தின் பழத்திற்காக முந்திப்  போவது வாடிக்கையாக  இருக்கும்.  அந்த மரம் ரொம்ப உயரமானதால் யாருமே ஏறி காய் பறிக்க முடியாது. அந்த மரத்தின் அருகே இருக்கும் சப்பாத்தி கள்ளியின் மேலேதான் அந்த மரத்தின் பழமெல்லாம்  கொட்டிக்  கிடக்கும். அதன்  முற்களுக்கு  தப்பித்து  அந்த  பழங்களை லாவகமாக   எடுத்து ருசிப்பதில் ஒரு ஆனந்தம்.



பொதுவாக ஈச்சமரமேறுவது கொஞ்சம் கடினம் என்பதால் அவர்கள்  அலக்கு ஒன்றை  கூடவே எடுத்துப்  போவார்கள், ஈச்சங்குலைகளை பறித்து வந்து வீட்டின் மறைவான இடத்தில தவிட்டு மூட்டையிலும், உப்பு தண்ணீர் தெளித்தும் பழுக்க வைப்பதும் வழக்கம்.  அதிகாலையிலே எழுந்து ஈச்சம்பழங்களை எல்லாம் தனியாக பிரித்து, வீட்டில் உள்ளவர்களுக்கு  கொடுப்பதும்  கூட ஒரு சுகமே.          



கோடை விடுமுறையில் அவன் ஊருக்கு, வெளியூரிலிருந்து வரும் எத்தனையோ பேரன், பேத்திகள், அக்காவின் குழைந்தைகள், அண்ணன் மற்றும் தம்பி வீட்டு குழைந்தைகள் என கிராமமே களைகட்டும். அதிலும்  பட்டிணத்தில் இருந்து வரும் சில நுனிநாக்கு ஆங்கிலம் பேசும் பிள்ளைகளைப் பார்த்தாலே ஊர் பிள்ளைகளுக்கு அள்ளுவிடும். அவர்களுக்கும் இவர்களுக்கும் இடையே நட்பு நெருங்குவதற்குள் விடுமுறை நாட்களே முடிந்துவிடும்.
    

அப்படித்தான் ஒருதடவை அவன் ஊருக்கு வந்த ஒரு பையனும் அவனும் ஆடு மேய்க்க போயிருந்தார்கள். அப்போது அவன் தனது பாடப்புத்தகத்தை வைத்து படித்து கொண்டிருந்தான்.  அப்போது ஊரிலிருந்து  வந்த  பையன்  அவனிடம்  கேட்டான், "அண்ணா என்ன புத்தகம் படிக்கிறிங்க", என்று.

அதற்கு அவன், "இது என்னோட பாட புத்தகம் அதான் சும்மா இருக்கிற நேரத்தை இப்படியாக படிக்கிறேன்", என்று சொன்னான்.

அதற்கு அவன் அண்ணா, "படிச்சு பாழா போறதைவிட ஆடு மாட மேய்ச்சு ஆளாகிடலாம் வாங்க" என்றான். அத்தனை  சிறிய பையன் இப்படி  பெரிய  மனிதன் போல  ஒரு  வார்த்தை  சொன்னது  அவனுக்கு  நகைச்சுவையாகவும்  வியப்பாகவும்  இருந்தது.

ஊர்காரப்பிள்ளைகள் தங்களுடைய  அன்றாட  முக்கியபணியான கால்நடை  மேய்ச்சலுக்கு  அவரவர்  கால்நடைகளை ஓட்டிக்கொண்டு  போவார்கள். அப்படி  போகும்போது, அவர்கள் கூடவே இலவச இணைப்பாக  சில வாண்டுகள் பனை நொங்கிற்காக  வருவதுண்டு. அப்படிக் கூட்டமாக  போகும்போது அவர்களுக்கு கூட்டான்சோறு சமைத்துச்  சாப்பிடுவது  மிகவும்  பிடிக்கும்.

கூட்டான்சோறு  சமைக்க அவரவர் வீட்டில் இருந்து தேவையான பொருட்களை எடுத்து வருவார்கள். சில  பொருட்களை  கடையில் வாங்கிக்கொள்வார்கள். சில  பாத்திரம், கரண்டிகளும்  இருக்கும். அந்த  கூட்டத்தில்  கொஞ்சம்  சமையல்  தெரிந்த  ஆள்  தலைமை  ஏற்கும். அந்த பிள்ளைகளில்  ஒவ்வொருவரும்  ஒரு  வேலையை செய்ய  வேண்டும்.  அங்கும்  இங்கும்  ஓடி  நான்கு  கற்களை  புரட்டிக்கொண்டு  வருவார்கள். வாழை  இலையோ , தேக்க  இலைகளையோ  கொண்டு  வரவேண்டும். தண்ணீர்  பிடித்துவர ஒரு  டீம். சமைக்கும்  இடத்தை  சுத்தம்  செய்து  கூட்டுவதற்கு ஒரு டீம். எல்லாம்  செய்து  முடித்து சமைக்க  வேண்டும். சமைத்ததை  எல்லோரையும்  வரிசையாக  உட்காரவைத்து பகிந்து  வைக்க  வேண்டும். அந்த  இடமே  மகிழ்ச்சி  கூச்சலும்  கும்மாளமாகவே   இருக்கும். அந்த நிகழ்வை  நினைத்தாலே  அவனுடைய  மனதுக்கு  இனிமையாக  இருந்தது.

கூட்டான்சோறு சமைக்கும் அதே அடுப்பில், நல்ல அரைப்பதத்தில் இருக்கும்  தேங்காயில் அதன்  கண்ணில் ஓட்டை போட்டு அதன் உள்ளே பொட்டுக்கடலை நாட்டு சர்க்கரை எல்லாம்  போட்டு  திணித்து, தேங்காயின்  கண்ணை  மறுபடியும்  தக்கைவைத்து  மூடி,  அப்படியே அந்த அடுப்பில் சுடுவார்கள். பிறகு  அதை  உடைத்து  சர்க்கரையோடும் பொட்டுக்கடலையோடும்  கலந்த அந்த  தேங்காய்களை சாப்பிடுவார்கள். அந்த சுவைகள்  எல்லாம்  பின்னாளில்  அவன்  சாப்பிட்ட  அறுசுவை  விருந்துகளில்  கூட  கிடைக்கவில்லை  என்று  நினைப்பான்.



அந்த  நாட்களில் கோடை என்பதால் எங்காவது ஓரிரு போர்வெல் பம்புசெட்டுகள்  ஓடிக் கொண்டிருக்கும். அவனுக்கு அந்த கோடை வெயிலின் தாக்கத்திற்கு இதமாக மற்ற  சிறுவர்களுடன்  சேர்ந்து  அந்த  மோட்டார்  தண்ணீரில் கும்மாளமாக குளியல் போடுவான். அதுவும் வெயில்  ஏறிய மதிய நேரத்தில் குளிப்பது, மணிக்கணக்கில் தண்ணீரில் ஆட்டம் போடுவதென்றால் எல்லோருக்கும் இஷ்டம். பிறகு  கண்கள்  சிவக்க  வீட்டுக்கு  போகும்போது  கப கப  என்று  பசியெடுத்திருக்கும். அந்த  பசிக்கு  சோற்றுடன் மீன்  குழம்போ  கறிக்குழம்போ இருந்துவிட்டால்  வானின்  சொர்க்கம்  அந்த  ஊருக்குள்  இறங்கிவிட்டது  போலவே அவனுக்கு  தோன்றும்.   

தொடரும் 

Wednesday, 3 June 2020

ஊர் திரும்புதல் - 13


பக்கத்து வீட்டு திண்ணையும் தாத்தாவும்  


அவன் விடுமுறைக்கு  ஊருக்கு  வந்து  சில  நாட்கள்  ஆகிவிடிருந்தது. அவன் தெருவிவில் ஒருநாள் சாயங்காலம் யாருமில்லாமல் வெறிச்சோடிக்  கிடந்ததை பார்த்து அவன் அம்மாவிடம் மிகவும் கவலையுடன், "என்னம்மா  நம்ம தெருவில் நிறைய  புள்ளைங்க  இருந்தும் ஒண்ணுகூட  வெளியில வந்து  விளையாடக்காணோம்?!", என்று கேட்டான்.

என்று அதற்கு அம்மா, "இப்போதேல்லாம் எங்கே புள்ளைங்க வெளியில  விளையாடுது. எல்லாம் டி.வி முன்னாடி உற்கார்த்திருக்கும்,   இல்லன்னா  மொபைலை வச்சிக்கிட்டு விளையாடிகிட்டு இருக்கும். எதாவது கரே  மொரேன்னு   பொம்ம படம் பார்த்திட்டு இருக்கும்", என்று சற்றே அலுத்துக்கொண்டு சொன்னார்கள்.

அவன் தனது பக்கத்து வீட்டு தாத்தாவிடம் போய் அமர்ந்து கொண்டு அவன் அந்த தாத்தாவிடம்  அவனது அனுபவங்கள் நினைவுகூர்ந்து பேச ஆரம்பித்தான்.   அதற்கு தாத்தா இப்போதெல்லாம் எங்கப்பா குழந்தைகள்  நம்மிடம் நேரம் செலவழிக்கிறார்கள் என்று முகத்தில் ஒரு விதமான வருத்தத்துடன் கூறினார்.

அந்த தாத்தாவின்  வீடு நல்ல உயர்ந்த இரண்டு திண்ணைகள் கொண்டது. நல்ல  நாட்டு ஓடு வேய்ந்த  வீடு.  அந்த வீட்டின் வாசலில் ஆறு அடி நீளமும் பத்து அடி அகலமும் கொண்ட ஒரு மேல் திண்ணையும், மறுபுறம்  இரண்டு அடி  அகலமும்  ஆறடி  நீளமும் கொண்ட  கீழ்திண்ணையுமாக, இரண்டு திண்ணைகள் இருந்தது.

அவனும் அவனது நண்பர்களும் அந்த  வீட்டு திண்ணைக்கு கோடைநாட்களில் தினமும் மாலை நேரம் தண்ணீர் ஊற்றி குளிரவிடுவார்கள்.  இரவுநேரங்களில் குளுமையாக இருக்க  இது  மிகவும்  அவசியம்.





அவன் பள்ளிக்கூடம் முடித்து தனது வீட்டு வேலைகளையெல்லாம் செய்து முடித்துவிட்டு வெளியில்  விளையாட  வருவான். தெருவில் பெண் பிள்ளைகள் கட்டம் போட்டு சில்லு கோடு விளையாட்டும், பையன்கள் பேய் பந்து விளையாட்டு, கிட்டி புல்,  திருடன் போலீஸ் போன்ற விளையாட்டுகளை விதவிதமாக விளையாடுவார்கள்.


அவனும் மற்றொரு நண்பனும் எப்போதும் மாட்டு வண்டி அவ்வழியே சென்றால் அதன் வண்டிக்காரர் பார்க்காதவண்ணம் பின்னாலேயே தொங்கிக்கொண்டே போவதும், வண்டிக்காரருக்கு தெரிந்தால் உடனே இறங்கி கீழே விழாமல் இருக்க வண்டி ஓடும் திசையிலே ஓடுவதுமாக இருப்பான்.

     

அவனுக்கு அந்த தெருவில் இருக்கும் குழந்தைகளுக்கு நடை வண்டி ஓட்டி கற்றுக் கொடுப்பது மிகவும்  பிடிக்கும்.




அப்போதெல்லாம், அந்தத்ததெருவின் பிள்ளைகள் சாயங்காலத்தில் அவனின் பக்கத்து விட்டு தாத்தாவின்  திண்ணையில் அமர்ந்து, தங்களின் பாட புத்தகங்களை படிப்பதும், வீட்டுப்  பாடங்களையெல்லாம்  செய்வதும் வழக்கமான  ஒரு நிகழ்வு. வேலியில் பூத்திருக்கும் அச்சுப்  பூக்களைப்  பறித்து, புத்தகத்தின் உள்ளே தங்களின் பெயர்களை அச்சிடுவதும், மறுநாள் காலையில் யாருடைய  புத்தகத்தில்  அச்சு  அழகாகச்  சிவந்து, பெயர் நன்றாக வந்திருக்கிறது  என்று பார்த்து ரசிப்பதும் அவர்களது வழக்கமான வேலைகளில்  ஒன்று.



இருட்டியபிறகு அவனும் மற்ற நண்பர்களும்  அந்த தாத்தா வீட்டுத் திண்ணையில் உற்கார்ந்து ஆடுபுலி ஆட்டம், பல்லாங்குழி விளையாடுவதும், அந்த தாத்தாவிடம் கதை கேட்பதுமாக அவர்களின் மாலை  நேரங்களைக் கழித்தனர். அந்த தாத்தா அவருடைய அனுபவங்களையெல்லாம் அழகாக கோர்த்து அவர்களுக்கு கதை  கதையாக  சொல்வார்.

அவன் அந்த தாத்தாவிடம், அவர்  திருவண்ணாமலை பக்கம் கிடை மாடுகள் வைத்திருந்ததும், அந்த நாட்களை அவர்கள் எப்படி கழித்தார்கள் என்று கேட்டு தெரிந்து கொள்வதிலும்  ஆவலாக இருப்பான். அந்த தாத்தாவும் அவரின்  மலை பயணம், மலையில் மலை பாம்புகளை கண்டது, சில பல விலங்குகளை பார்த்தது, அங்கே சமைத்துச்  சாப்பிட்ட அனுபவங்கள், அவர் மாடுகளுக்கு  வைத்தியம்  பார்த்த  அனுபவங்கள், குழந்தைகளுக்கு  சுளுக்கு  வலித்துவிட்டது, குடலேற்றத்தை  சரிசெய்துவிட்டது என்று  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்பில் அனுபவங்களை அவர்களுக்கே  புரியும்  வகையில் கதைகளாய்  சொல்லி அசத்துவார்.





அவனும்  அவனது  நண்பர்களும் கோடை இரவு நேரத்தில் அந்த வெளித் திண்ணையிலும், தாத்தாவின் கயிற்று கட்டிலிலும்    தூங்குவது வழக்கம்.  அப்படித்  தூங்கிக்கொண்டிருந்த ஒருநாள் அந்த  ஊரிலேயே சுற்றிக்கொண்டிருந்த மனநலம்  பாதிக்கப்பட்ட ஒரு பெண்  அந்த  வழியே  வந்ததைக்  கண்டு மிரண்டு போனான்.



பழைய  நினைவுகளுடன்  தாத்தாவுடன்  பேசிக்கொண்டிருந்தவன்  அந்த  வழியே  கடந்துபோன இளைஞன்  ஒருவனை  பார்த்தான். அவனும்  வணக்கம்  சொன்னான். அந்த  இளைஞன் வேறு  யாரும்  அல்ல, அவன் நடைவண்டி  பழக்கிய  குழந்தைகளில்  அந்த  இளைஞனும்  ஒருவன்தான்.

தாத்தா திண்ணையில் அமர்ந்துகொண்டு சுவாரசியமாக  வர்ணித்த கதைகள் இன்றளவும் அவனது நினைவில்  நின்றது. நடப்பு  நாட்களில்  நாகரீக  வளர்ச்சியில்  வீடுகட்டும்  முறையினில் வெளித்திண்ணைகளும்  இல்லை. இன்று தாத்தாபாட்டிகளும் பேரன்  பேத்திகளும்  இருந்தாலும், தாத்தாபாட்டிகளின்  கதைகளை  ஆர்வமுடன் கேட்பதற்கு  பேரன்  பேத்திகள்   தயாராக  இல்லை.


தொடரும்


ஊர் திரும்புதல் - 1





ஊர் திரும்புதல் - 7

ஊர் திரும்புதல் - 8

ஊர் திரும்புதல் - 9

ஊர் திரும்புதல் - 10

ஊர் திரும்புதல் - 11
   
ஊர் திரும்புதல் - 12