Friday, 24 July 2020

ஊர் திரும்புதல் - 22


பொங்கல் 4



அவன் மறுநாள் காலையில், மாட்டு பொங்கல் நாளன்று,  அவனுடைய  வீட்டு ஆடு, மாடுகளை ஆற்றில் குளிப்பாட்டி கொண்டுவர புறப்பட்டான்.

அன்று ஊரில்  கால்நடைகளில் மாடுகளுக்கு  கொண்டாட்டம். அதிகாலையிலே, ஊரின் ஒதுக்கு புறத்தில் கசாப்புக்கடையில்  கூடுதல்  எண்ணிக்கையில்  ஆடுகள்  வெட்டப்பட்டு  தயாராகிக்கொண்டிருந்தன. ஒவ்வொரு கிராமத்திலும் மாட்டு பொங்கல் அன்று ஆட்டுக்கறி இல்லா மல் கொண்டாட்டம் கிடையாது.




அவனது அப்பா அன்று காலையிலே மாட்டு பொங்கலுக்கு தேவையான மாலையினை வேப்பக்கொத்து, நெல்லிக்கொத்து, மாங்கொத்து கொண்டு அழகாக மாலைகளை தயார் செய்து கொண்டிருந்தார். வேப்பங் குச்சிகளை  சீவி,  வீட்டை சுற்றியும், மாட்டு கொட்டகையிலும் அடிப்பதற்கு முளைக் குச்சிகளும் தயார் செய்து வைத்திருந்தார்.

மற்றொரு பக்கம், பக்கத்து வீட்டு மாமா வந்து,  புதிதாக வாங்கி வந்த தலை கயிறு, மூக்குக்  கயிறு, கழுத்துக்கட்டிகள், வெண்கலம்  மற்றும் இரும்பினால் செய்த மணிகளையும் கொண்டு அவன் வீட்டு  மாடுகளுக்கு அலங்காரம் செய்தார். 

வண்ண வண்ண நெட்டி தக்கைகளால் கோர்த்த நெட்டி மாலைகள், வீட்டின் தாழ்வாரத்தில் ஒரு புறம் மாடுகளின் கழுத்தினை அலங்கரிக்க தவமாய் காத்துக்  கொண்டிருந்த.  எத்தனை அழகாக இருந்தாலும் வாழ்வில் ஒவ்வொரு வருடமும் அந்த ஒரு நாள்தான் அந்த நெட்டி மாலைகளுக்கு வாழ்வு. அதனால்தான் அவைகள் தனது பிறப்பு பயனுக்காக தவமிருந்து என்று சொன்னால் அது மிகையாகாது.





அவனது ஊரெங்கும் காலையிலேயே ஆட்டுக்கறி குழம்பு  வாசம் வீடுகளிலிருந்து வந்துகொண்டிருந்தது.

அவனது அம்மா மாட்டு பொங்கல் படைப்பதற்காக பொங்கல் செய்ய தொடங்கினார்கள்.  ஊரே மாட்டு பொங்கலினை விமர்சையாக கொண்டாட கோலாகலமாக நல்ல நேரத்துக்காக காத்துகொண்டிருந்தனர். ராமசாமி அய்யர் கொடுத்த அட்டையில் இருந்த நேரத்தின் படி மாட்டு பொங்கல் கொண்டாட்டம் ஆரம்பமானது.




ஒவ்வொரு வீட்டிலும் தெருவின் சிறுவர்கள் ஒன்று கூடி கையில் ஒரு தாம்பாளமும், ஒரு குச்சியும் எடுத்துக்கொண்டு, குச்சியை தாம்பாளத்தில்  தட்டித்தட்டி ஆனந்தமாக ஓசைகளை எழுப்பிக்கொண்டு பொங்கலோ பொங்கல் என்று பாடிக்கொண்டே மாடுகளை சுற்றி வருவார்கள். பெரியவர்கள் ஒவ்வொரு மாட்டுக்கும் பொங்கல்  ஊட்டி விடுவதும், கொஞ்சம் மஞ்சளும் குங்குமமும் கலந்து மாட்டின் நெற்றியிலும் மற்றும் முதிகிலிம் தடவி விடுவதும், நெட்டி மாலையும் இலைகளினால் செய்த மாலையும் மாட்டு அணிவித்து விடுவதும், மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த நீரினை மாடுகளின் மீது தெளிப்பதும் என ஒரே கொண்டாட்டமாக இருந்தனர்.




எல்லாம் முடிந்த பிறகு வீட்டிற்கு வரும் பிள்ளைகளை வீட்டில் ஆரத்தி எடுத்து அழைப்பதும் ஒரு வழக்கம். முந்தய  காலங்களில் வீர தீர காரியங்களை செய்து வருபவர்களை  வரவேற்கும்  வழக்கம்  இருந்திருக்கும்  போல. அதுவே  இன்றளவும் தொடர்த்துக்கொண்டு  இருக்கிறது போலும்.  பிறகு வீட்டில் அசைவ சமையலினை படையல் செய்து விருந்தோம்பல் நடைபெறும். அதன் பிறகு ஒரு உண்ட மயக்கம் அனைவரையும்  ஆட்கொள்ளும்.  

அன்று மாலை வேளையில் எல்லா சிறியவர்களுக்கு, கலைஞர்களும் ஊரின் பெரியவர்களிடம் சென்று ஆசீர்வாதம் வாங்கிக்கொள்வதும் ஒரு வழக்கம். அதற்காக அவனும் அவனது நண்பர்களும் சேர்ந்து ஊரின் பெரியவர்களின் வீடுகளுக்கு போய் வணங்கி ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டனர்.  பெரும்பாலான வீடுகளில் தங்களின் தாளடி வயலில் உளுந்து பயறு விதைக்க தொடங்கினார்கள். பொதுவாக மாட்டு பொங்கல் நாளன்று உளுந்து பயறு விதைப்பது வழக்கம்.  


அவரவர் வீட்டின் மாடுகளையும், கன்று குட்டிகளையும், மாட்டு வண்டிகளையும் அலங்கரித்து கொண்டு அம்மன் கோவில் வரை ஊர்வலமாக போய் வருவதும் ஒரு வழக்கமாக இருக்கும். திரும்பி வீட்டுக்கு வந்தவுடன் தொழுவத்தில் கட்டும் மாடுகளை மறுநாள் நல்ல நேரம் பாத்து உலக்கை வைத்து தொழுவதிலிருந்து வெளியே அழைத்து வருவதும் ஒரு வழக்கம். 

மறுநாள் காணும் பொங்கல். ஆனால் கிராமத்தில் இதற்கு கன்னி பொங்கல் என்றும் சொல்லுவோம். கன்னி பொங்கலன்று மதியம் ஊரின் எல்லையிலுள்ள மந்தகரையில் காளையர்கள் எல்லாம் ஒன்று கூடி பொங்கல்  வந்துகொண்டாடும்  நாள். இளைஞர்கள்  ஒன்று  கூடி ஊரின் எல்லா வீடுகளிலும் அரிசி, வெல்லம், கரும்பு வாழைப்பழம் வாங்கி  சேர்த்துக்கொண்டு  வருவார்கள். அதனுடன்  பொங்கலுக்கு தேவையான  நெய்  முதலிய  மளிகைப்பொருட்களை வாங்க கொஞ்சம்  காசும்  வாங்கிவருவார்கள். விக்ரமன் ஆற்றின் கரையில் இருக்கும் மந்தகரையில் கன்னி மேடை கட்டி, அதற்கு மாலை போட்டு அருகிலேயே  அடுப்பு வெட்டி பொங்கல் பொங்கி வழிபடுவதும் ஒரு வழக்கம். அது  இன்றளவும் நடந்து கொண்டிருக்கிறது.





அன்று எல்லோரும் அவர்கள் வீட்டு மாடுகளை மந்தகரைக்கு ஓட்டிவருவார்கள். அந்த மாடுகளை பார்த்துக்கொள்ள அவர்களில்  சிலர் பொறுப்பெடுத்துக்கொள்ள, மற்றவர் எல்லாம் பொங்கல் வேலையினை தொடர்ந்து செய்தனர். அவர்களில் ஒரு சிலர் கடைவீதிக்கு போய் தேவையான மற்ற பொருள்கள் வாங்கி வருவதற்கு சென்றனர்.   அந்த காளையர்கள் பொங்கும் பொங்கலும் அந்த பொங்கலினை அவர்கள்  பரிமாறும் விதமும் இன்றளவும் பார்பதற்க்கே ஒரு இனிமை. அவ்வழியே போகும் சிலருக்கும் அவர்களின் பொங்கலினை கொடுப்பது மகிழ்வார்கள்.

இடையே மாரியம்மன் கோவில் வாசலில் உள்ள மைதானத்தில்,  மங்கையர்கள் வண்ண கோல போட்டிகளுக்காக வண்ண வண்ண கோலங்களை  தங்களின் திறமையால் வரைந்து கொண்டிருந்தனர். மறுபுறம் சிறுவர்களுக்கு விதவிதமான, ஏராளமான விளையாட்டுகள் நடைபெற்றன. இவையெல்லாம் முடிந்து அதற்கு ஊர் பெரியவர் தலைமை தாங்கி பரிசுகளை கொடுப்பதும் நடக்கும்.  மறுபுறம் முனீஸ்வரன் கோவில் முன், குளத்து கரையில் இளசுகள் கபடி விளையாடுவதும் அதில் ஒருசிலர் கை  கால் அடிபட்டு ஒதுங்கி வருவதும், மற்றவர்கள் எல்லாம் கொண்டாட்டமாக  விளையாட்டினை தொடர்வதும் என்று  ஒரே அமர்களம்தான்.     

மாலை நேரம் ஊரில் கன்னிப்  பெண்கள் அவரவர் தெருவில் உள்ள கன்னியம்மன் கோவிலில் இரவு பொங்கல் வைத்து கும்மி அடித்து கொண்டாடுவதும்    வழக்கம். அதற்காக  தெருவில் எல்லா வீடுகளிலும் அரிசி, வெல்லம், நெய்,  கரும்பு மற்றும் வாழைபழம் எல்லாம் சேகரித்து  கொண்டுவந்து  வந்து பொங்கல் வைத்துக்  கொண்டாடுவார்கள்.   
  
அவனது வீட்டின் தோட்டத்தில் கன்னியம்மன் மேடை செய்ய அவன் ஒவ்வொரு வருடமும் சுத்தம் செய்து கொடுப்பது வழக்கம். அதற்காக அவன் அன்று வீட்டின் தோட்டத்தினை சுத்தம் செய்து, மேடை கட்ட தேவையான மண் கொண்டுவந்து குவித்தான். பின்னர் வெளிச்சதிற்கு மின் விளக்குகள் பொருத்திக்  கொடுத்தான். மேடையின் மீது கரும்பினால் பந்தல் போட்டு கொடுத்தான். 





அன்று இரவு பெண்கள் எல்லோரும் அவனது வீட்டில் உள்ள கன்னியம்மன் கோவிலில் வந்து பொங்கல் பொங்கி, கன்னி மேடைக்கு கோலமிட்டு விளக்கேற்றி பொங்கல் வழிபாடு செய்தனர். அப்பொழுது எல்லா பெண்களும் சேர்ந்து கன்னி அம்மன் சுற்றி சுற்றி கும்மி அடித்து பாடல் பாடி அந்த இரவினை மிக சிறப்பாக கொண்டாடினர்கள்.



அன்று இரவு ஊரின் மகா மாரியம்மன் வீதி உலா வருவதும் தொன்று தொட்டு வரும் ஒரு வழக்கம். அதற்காக மாலை முதல் அம்மன் சிலை  வண்ண பூக்களினால் தொடுத்த மாலைகளினால் அலங்கரிப்பட்டு கொண்டிருக்கும். வீதியெங்கும் அம்மன் வருகையினை முன்னிட்டு இரவு தண்ணீர் தெளித்து வண்ண கோலங்கள் இட்டு ஆவலுடன்  அம்மனின் வருகைக்காக ஒவ்வொரு வீட்டிலும் காத்துக்  கொண்டிருப்பார்கள்.






   
இரவில் அழகாக அலங்கரிக்கப்பட்ட அம்மன் தன் கிராமத்தின் பிள்ளைகளையெல்லாம் அவரவர் வீட்டின் வாசலில் போய் ஆசீர்வாதம் கொடுக்க புறப்பட்டது. அம்மன் அவன் ஊரின் ஒவ்வொரு வீதியும் சுற்றியபின்,  நள்ளிரவு திரும்ப கோவில் வந்து சேரும். அப்படி வந்தவுடன் அம்மனுக்கு அலங்கரிப்பட்ட மாலைகள்  ஒவ்வொரு  ஊரில்  ஒவ்வொரு  வீட்டுக்கும்  ஒவ்வொன்றாய்  பிரித்துக்  கொடுக்கப்படும்.

அந்த  மாலைகளை  பெற்றுக்கொண்டு  அம்மன் கோவிலில்  இருந்து  ஊர்க்காரர்கள் அறுவடை செய்வதை பற்றி பேசிக்கொண்டே  பொங்கல்  கொண்டாட்டங்களின்  இனிய  நினைவுகளோடு  கலையத்தொடங்குவார்கள்.  



ஊர் திரும்புதல் - 1


    

Wednesday, 22 July 2020

ஊர்திரும்புதல் - 21

பொங்கல் - 3







அவன் மறுநாள் காலையில் அவனது சகோதரி வீட்டுக்கு பொங்கல் வரிசைகளை கொடுக்கப்புறப்பட்டான். சைக்கிளின்  நீளவாக்கில் கரும்புக்கட்டுகளும், பக்கவாட்டில் ஒருபக்கம்  வாழைத்தாரும் மறுபக்கத்தில் புதிய பச்சரிசி, வெல்லம், மஞ்சள், இஞ்சி கொத்து,  தேங்காய் மற்றும் பொங்கலுக்கு  தேவையான அனைத்து பொருட்களும் எடுத்துக் கட்டியிருந்தான். அவனது அக்கா ஊர் அவன் ஊரில் இருந்து எட்டு கிலோமீட்டர் தூரம். அவன் வழக்கமாக போகும் அதே குறுக்கு வழியில்தான் அன்றும்  பயணிக்க தொடங்கினான். அவனுக்கு அந்த வழியில் வெகு பேர்கள் பழக்கம் என்பதால், அவன் அன்று பெரும் உற்சாகத்துடன் அக்கா வீட்டுக்கு பொங்கல் வரிசையினை எடுத்து சென்றான்.

அப்படியாக போகி பண்டிகையும் வந்தது. அன்று அவன் மற்றும் நண்பர்கள் எல்லோரும் சேர்த்து பழைய துணிகள், பழைய பொருள்களை குப்பை குழியில் கொண்டு சென்று கொட்டினார்கள்.  கிராமங்களில் துணிமணிகளை எல்லாம் எரிப்பது வழக்கம் இல்லை. அதற்கு பதிலாக உரமாக உர குழியில் போடுவார்கள். பொதுவாக கிராமங்களில் எல்லா வீடுகளிலும் குப்பை குழி ஒன்று இருக்கும் அதில் நித்தமும் வரும் வீட்டு குப்பைகள் மற்றும் மாட்டு சாணம், வைக்கோல் கூளங்கள் என எல்லாவகையானவற்றையும் அக்குழியிலே போடுவார்கள். வருடத்திற்கு ஒரு முறை மக்கிப்போன அந்த குப்பைகள் எல்லாம் தங்களின் வயல்களுக்கு உரமாக போடுவார்கள்.

போகி பண்டிகை அவ்வளவாக விமர்சையாக இருக்காது. இரவில் வெண்பொங்கல் வைத்து,  ஒரு சிறிய குடத்தில் ஆற்றில் இருந்து புது தண்ணீரும் எடுத்து, வேப்பிலைக்கொத்துகளை இட்டு,  மஞ்சள்  தடவிய  தேங்காய் வைத்து,  கதம்பம் பூவினை குடத்திற்கு சுற்றி, ஒரு சின்ன பூஜை செய்வதுடன் போகிப்பண்டிகை முடிந்துவிடும்.

அவன் தெரு பொங்கலினை, அழகாக  வண்ண கோலங்களினால் வரவேற்க தொடங்கியது.  வண்ண கோலங்களுக்கு மத்தியில் பசுச்சாணத்தில் செய்த பிள்ளையார் உர்கார்த்திருக்கும்.  அந்த பிள்ளையாருக்கு, பரங்கி பூவினாலும் அருகம்புல்லாலும் அலங்காரம்  செய்யப்பட்டிருக்கும்.

அவன் ஊரில் பொதுவாக அந்த மாதங்களில் தெருவில் பெரும்பான்மையான இடங்களிலும்,  சில வீடுகளில் கூரைகளின் மீதும்,  வேலிகளில் மேலும் செழுமையான பசுமையான இலைகளுடன் பரங்கிக்கொடிகள் பரவி படர்ந்து கிடக்கும்.  அந்தக்கொடிகளில் மஞ்சள் வண்ணத்தில் குழல் போல மலர்ந்த பரங்கிபூக்கள் எல்லோரையும் மகிழ்விக்கும். ஆங்காங்கே  பரங்கி பிஞ்சுகள் வளர்ந்து கொண்டிருக்கும். 

அவன் அன்று காலையில் பொங்கல் வேலைகளினை மும்முரமாக செய்யத்தொடங்கினான்.  காலையில் அருகம்புல், தும்பை பூக்கள் எல்லாம் எடுத்துவந்து கொடுப்பான்.

அவன் ஊரில் சில வீடுகளில் தெருவில் அடுப்பு வெட்டி பொங்கல் வைப்பார்கள். சில வீடுகளில் கல் வைத்து அடுப்பு கட்டி பொங்கல் வைப்பார்கள். அப்படித்தான் அவன் வீட்டில் எப்போது அடுப்பு கல் வைத்துதான் பொங்கல் செய்வது வழக்கம். அந்த அடுப்பு கற்கள் பொங்கலுக்கு மட்டுமே பயன்படும். மற்ற நாட்களில்   அந்த கல்லை பயன்படுத்த மாட்டார்கள்.





அவன் அன்று காலையில் தெருவில் அடுப்பு கட்டுவதற்காக ஆயத்த வேலைகளினை செய்தான். அடுப்புக்கு மறைவாக படுதா வைத்து ஒரு பக்கம் அடைக்கத்  தொடங்கினான். வாங்கி வந்த கரும்பு கட்டுகளில் நீண்ட கரும்புகளை எடுத்து இரெண்டு பக்கங்களிலும் வைத்து சோலையினால் முடிச்சு போட்டு தோரணம் போல ஒரு பந்தல் போட்டான்.  அவனது அம்மா அவன் கட்டிய பந்தலில் இரண்டு குத்து விளக்குகளை  ஏற்றி, பிள்ளையார் கல்லில்  பசுசாணத்தினால் பிள்ளையார் செய்து அதற்கு அவன் எடுத்து வந்த அருகம்புல் மற்றும் தும்பை பூவினால் அலங்கரித்தார்.

அடுப்பு கல் வைப்பதற்கு தரையில் ஆற்று மணல் பரப்பினான். அதன் மேல் தவிடு கொஞ்சம், ஒரு ரெண்டு அங்குலம் அளவிற்கு தூவினான். அடுப்பு கற்களை  நன்றாக சரியான இடங்களில் அமர்த்தினான்.

பொங்கல் பானைகளை அவனது அம்மா நன்றாக கழுவி பானைக்கு நாமம் போட்டு, அதன் நடுவே குங்குமம் வைத்து தயார்  செய்தார்.  வெண்பொங்கல் பானையின்  கழுத்தில் புது மஞ்சள் கொத்தும், சர்க்கரை பொங்கல் பானையின் கழுத்தில் இஞ்சி கொத்தும் கட்டி வைத்தார்.

இதற்கிடையில் அவன் அடுப்பு எரிக்க தேவையான விறகுகள், காய்ந்த தென்னை ஓலைகள், தென்னை கூராஞ்சிகள், சின்ன குச்சிகள் எல்லாம்  தோட்டத்திலிருந்து எடுத்து வந்தான். அவன் அம்மாவுக்கு கூட மாட இருந்து உதவி செய்தான். பொங்கலுக்கு தேவையான உருண்டை வெல்லம் உடைத்து கொடுத்தான். மற்ற பொருட்களெல்லாம் எடுத்து வந்து கொடுத்தான் இதெல்லாம் அவன் அக்கா திருமணம் ஆவதற்கு முன்பெல்லாம் அவன் அக்காவே எல்லாம் வேலைகளையும் செய்துவிடுவார்கள். அவனது தெருவில் எல்லோர் வீட்டிலும் அனைத்து ஆயத்த வேலைகளும் செய்துவிட்டு, அடுப்பு பற்ற வைப்பதற்காக  ராமசாமி அய்யர் சொன்ன நேரத்துக்காக காத்திருந்தனர்.

பொதுவாக கிராமங்களில் எல்லோரும் ஒரே சமயத்தில் பொங்கல் பானை வைப்பது வழக்கம். அதுபோலவேதான் அன்றும் அவனது தெருவில் எல்லோரும் ஒரே நேரத்தில் சூடம் கொளுத்தி அடுப்பில் பொங்கல் பானைகளை வைத்தனர். முதலில் இரண்டு பானைகளிலும் பசும் பால் கொஞ்சம் விடுவது வழக்கம்.  அதன் பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பினை நன்றாக எரியவிடுவார்கள். பொங்கல் வைக்கும்  இடத்தில் குடும்பத்தினர்  அனைவரும்  கூடி  இருப்பார்கள்.


பொங்கல்  வைக்கும்போதே  நினைத்தாலே  நாவில்  நீர்  சுரக்கவைக்கும்  வாசக்கறி பக்கத்தில்  தயாராகிக்கொண்டிருக்கும். அவரைக்காய், மாங்காய், கத்தரிக்காய், பரங்கிக்காய், கருணைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, முருங்கைக்காய், வாழைக்காய் என்று  கிடைக்கும்  எல்லாக்காய்களையும்  நறுக்கி வேகவைத்து, அதற்கென்று  மிளகாய், மல்லி , மஞ்சள், மிளகு வைத்து  அரைத்து தயாரித்த  கலவையை  அதனுடன்  சேர்த்து, துவரம்  பருப்பை  வேகவைத்து  கலந்து, புளிக்கரைசலையும் சேர்த்து  கொதிக்க  வைக்கும்போதே  எழும்  மணம், பொங்கல்  எப்போது  தயாராகும்  என்று  ஆவலைக்கூட்டும். கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம்  எல்லாவற்றையும்  சூடான  எண்ணெயில்  போட்டு, கடுகு  வெடித்து  வரும்போது  ஆய்ந்துவைத்த  கருவேப்பிலையை  போட்டு  தாளித்து  அதை  அந்த  குழம்பின்மீது  கொட்டிக்கிளறினால் அதுதான்  பொங்கல் வாசக்கறி.

ஊரில் இருக்கும் சின்ன சிறுசுகள் எல்லா வீடுகளுக்கும் பார்வையிட போவதுமுண்டு. அப்போது ஒவ்வொரு வீட்டிலும் நடப்பதினை நேரடி வர்ணனையாக சொல்லிக்கொண்டே தெருவில் அங்கும் இங்குமாய் ஓடித்  திரிவார்கள். அந்த சின்ன சிறுகள் புதிய ஆடைகளில் அங்கும் இங்குமாய் அலைவது அவனுக்கு, வண்ணத்துப்  பூச்சிகள் தோட்டத்தில் அங்கும் இங்குமாய் பறப்பது போல இருக்கும்.

அப்படியே விளையாடி சிறுவர்கள் ஒவ்வொரு வீட்டிலும் பொங்கல் பானை பொங்கி வரும் பொது "பொங்கலோ.... பொங்கல்.....பொங்கலோ...... பொங்கல்.......பொங்கலோ.........பொங்கல்" என்று ஆர்ப்பரித்து கொண்டாடுவார்கள். அந்த தருணம் சின்னச்சிறுகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் கூடவே பொங்கலோ பொங்கல் என்று உரக்கச்  சொல்லி சந்தோசப்படுவார்கள். பொங்கல் பானையில் நன்றாக பொங்கி வரவேண்டும். இல்லையென்றால் எதோ குறை இருக்கிறது என்று வீட்டு பெருசுகள் ஏளனம் பேசும். அதற்க்காகவே இந்த பொங்கல் பானை கொஞ்சம் நன்றாக பொங்கி வரவேண்டும் ஆசை எல்லோருக்கும் இருக்கும்.



பொங்கல்  பொங்கியதும், பொங்கல் பானைகளை, தரையில் தவிட்டை கொட்டி அதன் மேல் கலவடை வைத்து அந்த கலவடையில் பொங்கல் பானையை வைப்பார்கள்.  பிறகு ஊரே ஒரே நேரத்தில் படையல் செய்வதுதான் வழக்கம். அப்படியே அன்றும் அவனது வீட்டிலும் பொங்கல் படையல் செய்தார்கள்.

பொதுவாக பொங்கல் என்பது அறுவடை பண்டிகை என்பதால், பெரும் பொங்கல் பண்டிகையினை புது அரிசியில் பொங்கல் வைத்து சூரியனுக்கு படையல் செய்வது வழக்கம். அதற்காக அன்று முறத்தில் பயறு உளுந்து பரப்பி, அதன் மீது நல்ல விளக்கு தீபம் ஏற்றி, வீட்டின் வாசலில் வைத்து, சூரிய பகவானுக்கு நன்றி சொல்லும் விதமாய் படையல் செய்வார்கள்.



படையல் செய்த பிறகு பொங்கல் எல்லோருக்கும் பரிமாறப்படும். அதிலும் பரிமாறுவதற்கு பயன்படுத்து ஆப்பை தேங்காய் கொட்டாஞ்சியினை நன்றாக சுத்தம் செய்து அதனை நீண்ட மூங்கில் பிளாச்சியில் சேர்த்து செய்து இருக்கும் ஆப்பை பொங்கலின் பொது மண் பானையினை உடையாமல் கையாள இதமாக இருக்கும்.


வெண்பொங்கல் குறைந்தது பத்து நாட்களாவது இருக்கும், காலையில் தயிரும் வெண்பொங்கலும் தான் எல்லோருக்கும் உணவாக அந்த பத்து நாட்களுக்கு இருக்கும். அதன் சுவையே இப்போதெல்லாம் கிடைப்பது இல்லை என்ற மனவருத்தம் அவனுக்கு உண்டு.


அப்போதெல்லாம் ஒவ்வொரு வருடமும் பொங்கும் பொங்கல் பானைகளை கலவடை வைத்து, ஒன்றின் மீதுஒன்றாக சுவரோரமாக அடுக்கி வைத்திருப்பார்கள். அதற்கு அடுக்கு பானை என்று பெயர். அந்த அடுக்கு பானைகள்தான் அவர்களின் உணவு தானிய சேமிப்பு கிடங்கு. பெரிய பானைகளில் அரிசியும், உளுந்தும், பயறு, மாங்காய் வத்தல், கத்தரி காய் வத்தல், நார்த்தங்காய், எலுமிச்சை ஊறுகாய் என வீட்டின் சகல உணவு பொருளும் வழக்கமாக அடுக்கு பானைகளில் தான் சேமித்து வைப்பார்கள். அந்த அடுக்கு பானைகளில்  ஒவ்வொரு பானைக்கும் ஒரு கதை இருக்கும். இந்த பானை நாலாம் வருட பொங்க பானை, அது போனவருட பொங்க பானை என ஒவ்வொரு பானையும் ஒரு கதை சொல்லிக்கொண்டே அவர்கள் வீட்டின் ஓரமாக இருந்து மொத்த வீட்டினையும் ஒரு பார்வை பார்த்துக்கொண்டே இருக்கும்.
 

ஊர் திரும்புதல் - 1


    

Sunday, 12 July 2020

ஊர்திரும்புதல் - 20


பொங்கல் - 2


அடுத்தது பொங்கலுக்காக வீட்டுக்கு வெள்ளை அடிப்பது ஒரு வழக்கம். அதிலும் ஊரில்  ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவம் இருக்கும். வெள்ளைசுண்ணாம்பில்  இரண்டு வகை  உண்டு. கல்  சுண்ணாம்பு ஒன்று. மற்றது  கிளிஞ்சல்  சுண்ணாம்பு. அவனுடைய  ஊரில் பொதுவாக சுண்ணாம்புக்  கிளிஞ்சல் புழக்கத்தில்  இருந்தது.   நல்ல பெரிய மண்பானையில் நன்றாக கொதிக்கவைத்த நீரில், அந்த கிளிஞ்சல்களை கொட்டுவார்கள். கொதித்த நீரில் கொட்டிய சுண்ணாம்பு வேதியல் மாற்றம் அடைந்து வீறிட்டு பொங்கிவரும். சிலநேரங்களில் அருகில் இருப்பவர்களின் கை கால்களில் தெறிக்கும். தயாரான சுண்ணாம்பில் தங்கள் எண்ணங்களுக்கேற்ப வண்ணங்களை வீட்டின் சுவர்களில் தீட்டுவது அடுத்தவேலை. அப்போதெல்லாம்  தேங்காய்  மட்டையை  எடுத்து  கொஞ்சம்  ஊறவைத்து  நுனியை  மெல்லத்தட்டி  நார்  நாராக  பிரித்து கைப்பிடிக்கும்  இடத்துக்கு  கொஞ்சம் கீழே  சணல் வைத்துக்கட்டிவிட்டால்,  நீங்கள்  சுண்ணாம்பு   அடிக்கத்தேவையான  நாட்டு  ப்ரஷ்  ரெடி. அந்த ஆர்கானிக்  தென்னமட்டை பிரஷ் வைத்து அவரவர்  வீடுகளில்  எண்ணிய   வண்ணம் தீட்டுவார்கள். 

அந்த சுண்ணாம்பில் இருந்து வரும் ஒரு விதமான வாசனை இன்றளவும் அவனின் நினைவில் இருக்கிறது. கொஞ்சம் நாட்கள் அந்த தெருவே அந்த வாசனையில் மிதக்கும்.  வீட்டு கதவிற்கும் ஜன்னல்களுக்கும் ஆயில் பெயிண்ட் அடிப்பதும் வழக்கம். அவனின் ஊர் மார்கழி மாதத்தில் அடுத்து வரும்  தை பொங்கலை வரவேற்க  அவரவரும் தங்கள் வீட்டினை அலங்கரித்து கொண்டிருந்தனர்.






இடை இடையே கிடைக்கும் நேரத்தில் அவன் விளையாட்டையும் விடாமல் விளையாடி கொண்டிருந்தான்.

அப்போது  அம்மா, " டேய்  தம்பி... இன்னும் பொங்கலுக்கு ஆறு நாள்தான் இருக்கு. அதனால நாளைக்கு ஐந்தாம் நாள் பொங்கல் பானை எடுக்க போலான்னு  தெருல எல்லோரும் சொல்றாங்க...அதனால நாம  நாளைக்கு காளிக்கு  பொங்கல் பானை எடுக்க  போலாமா?  ... நீயும்  கொஞ்சம் கூட  வா",  என்றார்கள்.


ஆம் , பொங்கலுக்கு மண் பானைதான் முக்கியம். ஆனால் இன்றோ ஒரு கிராமத்து வீட்டில் கூட இந்த பழக்கம்  இல்லாமல் போய்விட்டது. எல்லோரும் பித்தளை பானைக்கு மாறிவிட்டார்கள் என்பது மனதில் ஒரு நெருடலாகத்தான் இருக்கிறது.






அப்படியாக மறுநாள் அவன் அவனது அம்மாவுடன் காளிக்கு விடியற்காலையிலே கிளம்ம்பிச்சென்றான். காளி அவனது ஊரில் இருந்து மூன்றரை கிலோமீட்டர் தூரம் இருக்கிறது. காளியில், காளியம்மன் கோவில் தெருவில்தான் அந்த இரண்டு சகோதர்கள் குடும்பம் மண் பானை செய்துவந்தார்கள். அதுமட்டுமில்லாமல் பொய்கைகுடியிலும் ஒரு குடும்பம் மண் பானை செய்து வந்தனர்.  இந்த இரண்டு வீட்டு பையன்களும் அவனுடைய  பள்ளிக்கூடதில், அவனுடைய  வகுப்பில்தான் படித்தார்கள்.  அதனால் அவனுக்கு அங்கு கொஞ்சம் தனி சலுகை. அதாவது அவன் போன உடனே வாங்கிவந்துவிடலாம். ஆமாம், சுத்துப் பட்டு இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் இங்கு வந்துதான் மண் பானை வாங்கி செல்வார்கள்.  அதனால் கூட்டம் அதிகமாக இருக்கும்.        






அந்த நாட்களில் காளியம்மன் கோவில் தெருவே ஒரு திருவிழா போல் உற்சாகமாகவும் மக்கள் நடமாட்டத்துடனும் இருக்கும். அந்த கூட்ட நெரிசலில் ஒருவழியாக போய் சேர்ந்தான். அங்கு அவனது நண்பன்  சண்முகத்தை கண்டான்.  அந்த வீட்டு பையன் அவன் பேருதான் சண்முகம். அப்போதெல்லாம் பண்டமாற்று முறையில் தான் அவர்கள் பானையினை வியாபாரம் செய்வார்கள்.  பானைக்கு பணம் ஒன்றும் கொடுக்கவேண்டாம். பொங்கல் முடிந்ததும் அவர்கள் கொடுத்த பானைக்கு நெல் வாங்கிச்செல்வது வழக்கம். அவனும் அவன் அம்மாவும் அன்று ஒரு பெரிய பானை வெண்பொங்கலுக்கும் அதைவிட ஒரு சுற்று சிறிய பானை சர்க்கரைப்  பொங்கலுக்கும்,  அதைவிட  ஒரு சிறிய பானை மாட்டு பொங்கலுக்கும், இரண்டு மண் சட்டிகளும் வாங்கிக்கொண்டார்கள்.  ஒன்று வாசகரி செய்வதற்கும் மற்றொன்று மாட்டு பொங்கலுக்கு கறி செய்வதற்கு.


 
பானையில் ஓட்டை இருக்கிறதா இல்லையா என்று தட்டி பார்த்தால் வரும் சத்தத்திலேயே தெரியும். ஆனால் அதற்கென சிலர் இருப்பார்கள். அதனால்தான் எல்லோரும் சேர்ந்து போய் பானை வாங்கிவருவார்கள்.   ஒரு தெருவே ஒன்றாக கூடி போய் மண் பானைகள் வாங்கிக்கொண்டு தலையில் ஒன்றும் கையில் ஒன்றும் இடுப்பில் ஒன்றும் என்று ஒரு கூட்டம் வருவதை பார்த்தால் ஏதோ  மண் பானைகள்தான்  கால் முளைத்து, ஒரு கூட்டமாக நடந்து வருகிறதோ  என்று  தோன்றும். 

ஆனால் இப்போதெல்லாம் அதுபோன்ற நிகழ்வுகள் நடப்பதாகவே தென்படவில்லையே  என்று கொஞ்சம் ஏக்கமாக அம்மாவிடம் கேட்டான்.

"ஆமாம்பா இப்போ எல்லோரும் பித்தளை பானைக்கு மாறியாச்சு....அந்த மண் உடையார் குடும்பம்  அந்த தொழிலை விட்டுட்டாங்க", என்று கவலை தோய்ந்த முகத்துடன் சொன்னார்கள்.

அவன் பானைகளுடன் நடந்து வந்துகொண்டிருக்கும் போது அந்த சாலையில் இரண்டு பக்கமும் கரும்பு கட்டுகளுடனும், பச்சையிலிருந்து மஞ்சள் வண்ணத்துக்கு மாறலாமா வேண்டாமா என்ற யோசனையுடன் தொங்கிக்கொண்டிருக்கும் வாழைதார்களுடனும், மஞ்சள் மற்றும் இஞ்சி கொத்துகளுடனும் வெல்லமும்  வாங்கிக்கட்டிக்கொண்டு சிலர் சைக்கிள்களிலும்,  தங்கள் தலையிலும் சுமந்து தனது சகோதரிகளுக்கோ அல்லது மகளுக்கோ பொங்கல் வரிசை எடுத்து செல்வதுமாய் அந்த சாலையே களை கட்ட தொடங்கியது.

அப்படித்தான் ரெண்டுநாட்கள் கழித்து  சமீபத்தில் திருமணமாகி வந்த அந்த மாடி வீட்டு மருமகளுக்கு மாட்டு வண்டியில் அரிசி முதல் பானை வரை பொங்கலுக்கு தேவையான அத்தனையும் அவரது அப்பா தலைப் பொங்கல் சீராக எடுத்துவந்தார்கள்.

பொங்கல் நெருங்கும் நேரத்தில் கிடாத்தலைமேடு ராமசாமி அய்யர், பொங்கல் வைக்கும் நேரம் முதல் சூரியபகவானுக்கு படையல் செய்யும் நேரம் வரை தெள்ள தெளிவாக மஞ்சள் கலரில் நோட்டீஸ் அச்சடித்து    எல்லோருக்கும் விநியோகம்  செய்ய சொல்லியிருந்தார்.

அன்று மாலை அவனும் மற்றும் சில நண்பர்களும் திட்டம் போட்டார்கள். மறுநாள் விடியற்காலையில் குறுக்கே  வயல்வழியாக வாணாதி ராஜபுரம் போய் கரும்பு கட்டுகள் வாங்கிவரவேண்டும், என்பதுதான்  அது. அவனும் அவனது நண்பர்களும் ஒவ்வொரு வருடமும்  பொங்கலின் போது நேரடியாக கரும்பு விவசாயிகளிடமே, கரும்பு வாங்கிவருவ்து வழக்கம். மறுநாள் விடியற் காலை ஐந்து மணிக்கே  அவர்களின் திட்டத்தின் படி ஆளுக்கொரு துண்டு எடுத்துக்கொண்டு கையில் தேவையான காசுடன் நடக்க தொடங்கினார்கள்.

வாணாதிராஜபுரம் அவன் ஊருக்கு நேர் பின்புறம் இருக்கிறது. வயல்கள் வழியாகவே சென்று விடலாம், போகும் வழியில் இன்னும் பத்து நாட்களில் அறுவடைக்கு தயாராகிக் கொண்டிருந்த தாளடி நெற்பயிர்கள், மார்கழி பனியில் நனைந்து நிலம் பார்த்து பூமாதேவியை பூஜித்துக்கொண்டிருந்தது. அவ்வழியே அவர்கள் நடந்து இரண்டு ஊர்களுக்கும் இடையே இருக்கும் பெரிய சாவடி குளத்தில் கொஞ்சம் இளைப்பாறிவிட்டு,    மீண்டும் நடக்க தொடங்கினர். இரண்டு ஊர்களுக்கும் ஒரு ரெண்டு கிலோ மீட்டர் தூரம் தான் இருக்கும். ஒருவழியாக அவர்கள் வழக்கமாக கரும்பு வாங்கும் வயலினை அடைந்தார்கள்.
 
நல்ல கரும்புகளை தேர்ந்தெடுத்து ஒதுக்கி வைத்தனர். நேரடியாக வயல்காரரிடமே வாங்குவதால் விலை குறைவாகவும், உடனே வெட்டிக்கொடுப்பதால் புதுக்  கரும்பாகவும் இருக்கும். அவர் அவர் தங்கள் சுமை தூக்கும் சக்திக்கு ஏற்றாற்போல் கரும்புகளை வாங்கி கொள்வார்கள். வாங்கிய கரும்பினை நன்றாக வெட்டிய கரும்பு சோலையினை (தோகை)  கொண்டு நல்ல இறுக்கமாக கட்டி, எடுத்துவந்த துண்டினால் சும்மாடு செய்து தலையில் வைத்து, மேலே கரும்பு கட்டை வைத்துக்கொண்டு வீடு நோக்கி நடக்க ஆரம்பிப்பார்கள். எப்படியும் குறைவாக ஒரு மணி நேரமாகும் வீடு வந்து சேருவதற்கு.




ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தவுடன், பசி உச்சத்தில்  இருக்கும். வீட்டுக்கு  வந்த  உடனே  பழைய சோறும்,  எருமை தயிரும் சின்ன வெங்காயமும், முதல்நாள்  வைத்த மீன் குழம்பும் சேர்த்து சாப்பிட்டுவிட்டுதான்  அடுத்த வேலை.

அவன் முதல்நாள் வாங்கிவந்த பொங்கல் வாழ்த்து அட்டைகளை எல்லாம் முகவரி எழுதி கொண்டிருந்தான். கூடவே சின்னசிறுகள் மற்றும் எழுத தெரியாத சிலரும் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பொங்கல் வாழ்த்து முகவரி எழுத சொல்லி கொடுப்பார்கள். அப்படியே  எல்லாவற்றையும் கடை வீதிக்கு செல்லும் போது அனுப்பிவிடுகிறேன் என்று உத்தரவாதம் கொடுத்து, அட்டைகளை  வாங்கி வைத்துக்கொள்வான்.



அவனும், தனது சகோதரி வீட்டுக்கு பொங்கல் வரிசையினை எடுத்து செல்ல தயாராகிக் கொண்டிருந்தான்.
 

தொடரும்.....

ஊர் திரும்புதல் - 1






Tuesday, 7 July 2020

ஊர் திரும்புதல் - 19



பொங்கல் - 1


அவன் தவறாமல் ஒவ்வொரு பொங்கலுக்கும்   தனது ஊருக்கு வருவதை வழக்கமாக  வைத்திருந்தான்.  எத்தனை தூரத்தில் இருந்தாலும் அந்த நான்கு  ஐந்து நாட்கள் ஊருக்கு வந்து பொங்கல் கொண்டாடுவது என்பதை  அவனின் தலையாய கடமையாக  கொண்டிருந்தான்.  அப்படித்தான் அவன் அந்த முறை ஊருக்கு வந்திருக்கும்  போது போகி பண்டிகை அடுத்தநாள் வரவிருந்தது. ஆனால் அவன் ஊரின் வழமையான நிகழ்வுகள் காண கிடைக்கவில்லை.



அவன் தனது இளமைக்காலத்தில் பொங்கலின் பொழுது அவன் செய்த  வேலைகள் மற்றும்  விளையாட்டுகள் என பலவற்றை அவன் நினைவிலிருந்து மீட்டு, அசை போட ஆரம்பித்தான். அன்று ஒருநாள்  காலையில் மாரியம்மன் கோவில் வெளிப்புறத்தில் அவனும் மற்ற நண்பர்களும் சேர்ந்து பம்பரம் விளையாடிக்கொண்டிருந்தனர்.



விளையாட்டின் இடையே அவன் அம்மாவின் அழைப்பு வந்தது. "தோ வர்றேன்", என்று கூவிக்கொண்டே  அரை மனதுடன் அங்கிருந்து சென்றான்.



"என்னம்மா எல்லோரும் விளையாடுறாங்க , எனக்கு மட்டும் எப்ப பாரு எதாவது  வேலை கொடுத்துகிட்டே இருக்க......என்ன வேலை சொல்லுமா!",  என்று சற்றே  அழுதுகொண்டே அம்மாவிடம் கேட்டான்.



அம்மா, "ஒண்ணுமில்லை பொங்கல் வருது ...ஒரு  நாளும்  கிழமையுமா.....கொஞ்சம் கூட மாட இருந்து உதவி செய்யேன்", என்றார்கள்.


 "சரி சரி சொல்லு என்ன செய்யணும்!", என்று  சற்றே  அலுத்துக்கொண்டே  கேட்டான். 


"நாளைக்கு நம்ம வீட்டு தரை போடுரத்துக்கு   சிவகாமியும்  செகதாம்பாளும் வரேன்னு  சொல்லியிருக்காங்க....அதனால .. நீ  ஆத்து மறுகரையில  இருந்து மண் எடுத்து வந்து  மிதிச்சி  வைக்கணும்", என்றார்கள்.




பொதுவாக மார்கழி மாதம் முழுவதும் அந்த கிராமமே எதாவது புதிய புதிய வேலைகள் செய்துகொண்டே இருப்பார்கள். அப்போது அவனின் கிராமத்தில் இருந்த நாற்பது வீடுகளில் இருபதுக்கும் மேற்பட்ட வீடுகள்  கூரை வீடுகள். சில ஓட்டு வீடுகள், ஒரு சில மாடி வீடுகள் என இருந்தன.  கூரை வீடுகள் முற்றிலும் மண் தரைதான் இருக்கும்.  ஒரு சில ஓட்டு வீடுகளிலும் மண் தரைதான்.  அவ்வாறு மண் தரை இருக்கும் வீடுகளில் ஒவ்வொரு பொங்கலின் போதும்  புதிய மண் தரை இடுவது வழக்கமான ஒன்று.



பொங்கல் வேலையென்றால் முதலில் வருவது வீடெல்லாம் ஒட்டடை அடித்து சுத்தம் செய்வதுதான்.  பிறகு மரச் சாமான்கள் எல்லாம் ஆற்றில் கொண்டு சென்று  கழுவி எடுக்க வேண்டும். சாமான்களை  வெளியேற்றிய  நேரத்தில்  சுவற்றிக்கு வெள்ளை அடித்தல் போன்ற பல வேலைகள் ஆங்காங்கே நடந்துகொண்டிருக்கும்.  தை பொங்கலினை வரவேற்க அவனது கிராமம் முழுவதும்  முழு  மூச்சில் வேலைகள் நடந்துகொண்டிருக்கும்.



பொதுவாக அவனின் ஊரில் வீட்டுக்கு மண் தரை போடுவதற்கு கொஞ்சம் பேருக்குத்தான் தெரியும். அப்படி அந்த வேலையில் கைதேர்ந்தவர்களுக்கு அதிகமான டிமாண்ட் இருக்கும்.                              அப்படித்தான் அன்று அவன் வீட்டுக்கு சிவகாமி பாட்டியும் செகதாம்பாளும் வந்தனர்.

இன்னும் இரண்டு நாள் கழித்து நம்ம வீட்டுக்கு தரை  போடலாம். அதனால இன்றே மண் எடுத்து வந்து நன்றாக குழைத்து வைத்தால் தான் சரியாக இருக்கும் என்று சொல்லிவிட்டு சென்றனர்.

அதற்காக தான் அவன் அம்மா அவனை அழைத்தார்கள்.  அன்று அவன் ஆற்றின்  மறுகரையிலிருந்து மண் சுமந்து வந்து வீட்டின் பின்பக்கத்தில் கொட்டி  வைத்து அதனை தேவைக்கேற்ப பதப்படுத்த வேண்டியிருந்தது.  அதற்காக மண்வெட்டியும் ஒரு கூடையும் எடுத்துக்கொண்டு தோளில் ஒரு துண்டும் போட்டுகொண்டு ஆற்றின் மறுகரைக்கு சென்றான்.   அப்போது ஆற்றில் தண்ணீர் ஒரு இரண்டு அடி  அளவிற்கு போய்க்கொண்டிருந்தது. அவன் வீட்டுக்கு நேராகதான் மறுகரையில் மண் எடுப்பது வழக்கம். 

அந்த இடத்தில்தான் பதமான மண் கிடைக்கும்.  ஆற்றின் குறுக்கே இறங்கி மறுகரைக்கு நடக்க தொடங்கினான். நடக்கும் போது   அவன் சட்டையெல்லாம் நனைந்து போய்விட்டது.  பொதுவாக அவன் வீட்டுக்கு எப்படியும் ஒரு இருபது கூடை மண் தேவைப்படும். அதை அவனால் ஒரே நேரத்தில் எடுத்துவரமுடியாது. அன்று காலையில் அவன் மண் சுமக்க மறுகரைக்கு போகும் பொது சீராக ஓடிய ஆற்று தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க ஆரம்பித்தது. தலையில் சுமையுடன் ஆற்றில் தண்ணீருக்குள் நடந்து வருவது அவனுக்கு மிகவும் சிரமமான வேலையாகத்தான் இருந்தது. நடுத்தெருவுக்கு நேராக ஒரு மரபாலம் இருந்தது. அதுவழியாக போனால் ரொம்ப தூரம் சுற்றிவரவேண்டும், என்பதால் அவன் ஆற்றின் குறுக்கே நடந்து போவதையே விரும்பினான். ஆனால் அவன் நேரம் ஆற்றின் நீர் அதிகரித்த வண்ணம் இருந்ததால்  மீதமுள்ள மண்ணை அந்த  பாலம் வழியாகதான் எடுத்து வரவேண்டியிருந்தது. அதிலும் அவனுக்கு சிக்கல் வந்தது.  ஆமாம் அந்த மரபாலம் கொஞ்சம்  பழைய பாலம். தனியாக ஆள் நடந்து போய்விடலாம். ஆனால் மண் சுமையுடன் வருவது என்றால் கொஞ்சம் சிரமம்.  இல்லை முற்றிலும் சிரமம்தான். அவனுக்கு ஒன்னும் புரியவில்லை, என்ன செய்வதென்று.  கொஞ்சம் நேரம் காத்திருப்போம், தண்ணீர் குறைந்துவிட்டால் நமக்கு வேலை சுலபம் என்று எண்ணிக்கொண்டு அம்மாவிடம் கேட்டான். அம்மாவும் அதையே சொல்லியதால் அவன் கொஞ்சம் இளைப்பாறினானான்.  ஒருவழியாக தண்ணீர் அளவு குறைந்தது அவன் மொத்தம் தேவையான மண்ணும் எடுத்துவந்துவிட்டான். எடுத்து வந்த மண்ணை நடுவில் குழி பறித்து அதில் தண்ணீர்  ஊற்றி நன்றாக கலந்து மிதித்து மண்ணை பதப்படுத்தி வைத்தான். 


 


இரண்டு  நாட்கள் கழித்து காலையிலே சிவகாமி பாட்டியும் செகதாம்பாளும் சொன்னபடியே வந்தார்கள். அவர்கள் தயாராக பிசைந்து வைத்த மண்ணை  எடுத்து ஒருபுறத்தில் இருந்து இரண்டு அங்குலம் அளவிற்கு சமமாக வீடு முழுவதும் பரப்பத்தொடங்கினார்கள். பின்னர் மேடு பள்ளம் இல்லாமலும் சரியான அளவில் அந்த தரையினை சமன் செய்ய வேண்டும்.   இதை செய்வதெற்கெல்லாம் எந்த கருவியும் கிடையாது. அவர்களின்  அனுபவமும் திறமையும்தான் ஆதாரம். புதிதாக மண் போட்ட தரையினை, கோழிகள், ஆட்டுக்குட்டிகள், நாய்கள்  மற்றும் சின்ன குழந்தைகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டும். அதுவே ஒரு சவாலான விஷயம். அந்த தரையினை மறுநாள் இன்னும் கொஞ்சம்  மெருகேற்றுவார்கள். அதற்கு  வைக்கோல் எரித்த கரியும் பசுவின் சாணமும் சேர்த்து நன்றாக கரைத்து, அந்த தண்ணீரினை ஊற்றி கையளவு உள்ள ஒரு கருங்கல் (தீத்துக்கல் ) கொண்டு தரையினை தீத்துவார்கள்.  இந்த வேலைகள் எல்லாம் செய்த பிறகு அந்த தரை சிமெண்ட் தரையினை விட அழகாக ஆகிவிடும். அந்த மெழுகிய தரை   முக்கியமாக மனிதர்களின் உடல் சூட்டை தணிக்கும். அதனால்தானோ என்னமோ அப்போதெல்லாம் நோய் நொடிகள் இல்லாமல் இருந்தார்கள் போல.      




மார்கழி மாதத்தில் ஆற்றின் தண்ணீர் குறைவாகதான் போகும், அதில் அவர்கள் வீட்டு மரச்சாமான்கள் எல்லாம் கழுவி எடுத்துவருவார்கள். இந்த வேலையும் கட்டாயமாக எல்லா வீடுகளிலும் நடக்கும். அந்த வருடம் அவன், அவன் வீட்டு பத்தாயத்தினை கழுவதற்கு ஆற்றுக்கு  எடுத்து சென்றான். பத்தாயம் என்றால் என்னவென்றே இந்த தலைமுறையினருக்கு தெரிய வாய்ப்பில்லை. அந்த குற்றம் செய்தவர்கள் நாம்தான் என்றே நினைக்க தோன்றுகிறது.

மரத்தினால் செவ்வக வடிவில் ஐந்து அல்லது ஆறு அடுக்கு செய்து அதில் ஒரு வருடத்திற்கு,  வீட்டுக்கு தேவையான நெல்லினை சேமித்து வைப்பார்கள். அதில் கீழே முதல் அறையில் ஒரு சிறிய திறப்பு இருக்கும். அதன் வழியே தேவையான நெல்லினை வேண்டும்போது  எடுத்துக்கொள்வார்கள்.  சில வீடுகளில் இதற்காக மண் குதிர் கூட பயன்படுத்துவார்கள். குதிர் என்பது  மண்னும் தேங்காய் நாறும் ஒன்றாக பிசைந்து, அழகாக செவ்வக வடிவிலும், வட்ட வடிவிலும் செய்வார்கள். அதனை நன்றாக வெயிலில் காயவைத்து எடுத்து  அடுக்கினால்  குதிர்  தயார். பொதுவாக குதிர் கொஞ்சம் பெரிய சைஸில் இருக்கும். சிலர் சால் என்று ஒன்றும் பயன்படுத்துவார்கள். சால் மண்ணால் செய்து   காளவாயில் சுட்டு  எடுக்கப்படுவது.   




பத்தாயத்தில் அல்லது குதிரில்   சேமித்து வைத்த நெல்லினை மாதந்தோறும் தேவையான அளவு வெளியில் எடுத்து பெரிய கொப்பறைகளில் ஊறவைத்து, மறுநாள் விடியற்காலையில் செங்கல் அடுப்பு கட்டி, கூளங்களை கொண்டு அடுப்பு எரித்து, அந்த நெல்லினை அவித்து, பிறகு இரண்டு மூன்று நாட்கள் நல்ல பதாமாக காய வைத்து, எடுத்தால் அதுதான்  புழுங்கிய  நெல். அதனை  திருமங்கலம் பத்தர் ரைஸ் மில்லில் கொண்டு போய் அரைத்து எடுத்துவருவார்கள். அதுதான்  புழுங்கல்  அரிசி.    

இதன் மூலம் வீட்டுக்கு தேவையான அரிசியும், தவிடும் கிடைக்கும்.  அப்போதெல்லாம் மாட்டுக்கும் இந்த தவிடுதான் ஒரு முக்கிய உணவு. காலம் காலமாக இப்படித்தான்  நம்  வாழ்க்கை  முறை  இருந்தது. சொந்த  வயலில்  விளைந்ததை உண்டு, கால்நடைகளுக்கும்  கொடுத்துவந்தோம்.

இன்றைய  வாழ்க்கையில்  முக்கியமான நாம் தொலைத்த ஒரு  பழக்கம், சொந்த  வயலில்  விளைத்த  உணவை உண்பது. நிலத்தில் அருமையாக  விளைந்ததை வியாபாரிகளிடம்,  கிடைத்த விலைக்கே கொடுத்துவிட்டு, பல மடங்கு விலை கொடுத்து அரிசி வாங்கி உண்கிறோம்.   இதனால்தான் இன்றைக்கு கிராமத்தில் இல்லாமல் இருந்த பல நோய்களை நாமே வீட்டுக்குள் அழைத்து வந்துள்ளோம் என நினைக்க தோன்றுகிறது.   

மறுபடியும்  பொங்கல்  வேலைக்கு  வருவோம். இப்படியாக  பொங்கல்  சமயத்தில்  அடிக்கடி  வேலைகள்  வரும். அவன் அதையும்  செய்துகொண்டு  ஓய்வு  கிடைக்கும்  நேரத்தில்  மற்ற  பையன்களோடு  பம்பரம்  விளையாடுவான்.  சின்னசிறுகள் முதல் கன்னி பெண்கள்வரைக்கும் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பொங்கல் வாழ்த்து அனுப்புவதற்காக கடை வீதிக்கு செல்பவர்களிடம் பொங்கல்  வாழ்த்து  அட்டை வாங்கிவரச் சொல்வார்கள். வாழ்த்து அட்டைகள் அவர்களின் ஆசைக்கேற்ப வண்ணங்கள் இருக்க வேண்டும். அதாவது இயற்கை காட்சிகள்   முதல் மனசுக்கு பிடித்த நட்சத்திரங்கள் வரை வண்ணம் தீட்டிய வாழ்த்து அட்டைகள் அனுப்புவதும்,  அனுப்பியவர்களுக்கு நன்றி வாழ்த்து அனுப்புவதும் அந்த பத்து பதினைந்து நாட்கள் ஒரே கொண்டாட்டம் தான். அதற்காக அவனும், அன்று சாயங்காலம் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பொங்கல் வாழ்த்து அட்டை வாங்குவதற்காக திருமங்கலம் கடைதெருவுக்கு தனது சைக்கிள் எடுத்து கொண்டு ஒரு  பாட்டை  மூணு முணுத்தவாறு  காற்றில்  மெல்ல மெல்ல மிதந்து  செல்வதுபோல உற்சாகமாக  சென்றான்.    


தொடரும் ...

ஊர் திரும்புதல் - 1